Last Updated : 03 Apr, 2019 12:30 PM

 

Published : 03 Apr 2019 12:30 PM
Last Updated : 03 Apr 2019 12:30 PM

அறிவியல் மேஜிக்: தண்ணீரில் மிதக்கும் முட்டை!

முட்டையை உங்களால் தண்ணீரில் மிதக்க வைக்க முடியுமா?  ‘முடியாது’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஆனால், முட்டையைத் தண்ணீரில் மிதக்க வைக்க முடியும். எப்படி?

என்னென்ன தேவை?

முட்டை - 2

தண்ணீர்

உப்பு

கண்ணாடி டம்ளர்கள் - 2

எப்படிச் செய்வது?

1. ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் பாகத்துக்குத் தண்ணீரை ஊற்றுங்கள்.

2. அதில் ஒரு முட்டையை மெதுவாகப் போடுங்கள். முட்டை என்ன ஆகிறது என்று பாருங்கள்.  முட்டை தண்ணீரின் அடியில் போய்விட்டதா?

3. சரி, விடுங்கள். இன்னொரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகத்துக்குத் தண்ணீரை ஊற்றுங்கள். அந்தத் தண்ணீரில் 6 மேஜைக் கரண்டி உப்பைப் போட்டு நன்றாகக் கலக்குங்கள்.

4. பிறகு இன்னொரு முட்டையை எடுத்து, உப்பு கலந்த தண்ணீரில் மெதுவாகப் போடுங்கள். இப்போது முட்டை என்ன ஆகிறது என்று பாருங்கள். அடடே, முட்டை மிதக்கிறதே! இது எப்படிச் சாத்தியம்?

அறிவியல் ரகசியம்

முதல் டம்ளரில் தண்ணீரின் அடர்த்தி குறைவு. எனவே தண்ணீரில் முட்டையைப் போட்டவுடன் அது மூழ்கிவிட்டது. இரண்டாவது டம்ளர் தண்ணீரில் உப்பு சேர்த்தீர்கள் அல்லவா? அதனால், தண்ணீரின் அடர்த்தி அதிகமாகிவிட்டது. உப்பு கலந்ததால் முட்டையைவிடத் தண்ணீரின் அடர்த்தி அதிகம். எனவே முட்டையைப் போட்டவுடன் அது தண்ணீருக்கு மேலே மிதக்கிறது.

பயன்பாடு

கடலில் கப்பல் மிதந்து செல்வதே இதற்கு உதாரணம். முட்டையின் அடர்த்தியைவிட உப்புத் தண்ணீரின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் முட்டை மிதக்கிறது அல்லவா? அதேபோல கப்பலின் அடர்த்தியைவிட, கடலில் உப்பு நீரின் அடர்த்தி மிக அதிகம். கப்பலின் அமைப்பு காரணமாக, அது குறைவான தண்ணீரையே இடப்பெயர்வு செய்கிறது. இந்த இரண்டு காரணங்களால் கப்பல் மூழ்காமல் மிதக்கிறது. கப்பலின் எடை அளவுக்கு தண்ணீர் இடப்பெயர்வு அடைந்தால், கப்பல் மூழ்கிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x