Published : 29 Apr 2019 11:28 AM
Last Updated : 29 Apr 2019 11:28 AM

ஆல் நியூ டுகாட்டி ஸ்கிராம்ப்ளர்

சூப்பர் பைக்குகளில் கெத்தான பிரபலமான பிராண்ட் டுகாட்டி. இத்தாலியைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனம் தனது புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்தப் புதிய மாடல்கள் ஐகான், கஃபே ரேஸர், ஃபுல் திராட்டிள் மற்றும் டெசர்ட் ஸ்லெட் என அழைக்கப் படுகின்றன. இவற்றின் விலைகள் முறையே ரூ.7.89 லட்சம், ரூ. 8.92 லட்சம், ரூ.9.78 லட்சம் மற்றும் ரூ. 9.93 லட்சம் ஆகும்.

இந்தப் புதிய ஸ்கிராம்ப்ளர் மாடல்களில் எல் ட்வின், டெஸ்மோடிராமிக் டிஸ்ட்ரிப்யூஷன், 2 வால்வ் சிலிண்டர் கொண்ட ஏர் கூல்டு 803 சிசி இன்ஜின் ஆகும். இதில் 67 என்எம் டார்க் 5,750 ஆர்பிஎம்மில் கிடைக்கிறது. இந்த பைக்குகளின் ஹெட்லைட்டில் ஆட்டோமெட்டி ஆன் ஆஃப் எல்இடி லைட்டுகளும், பகல் நேர ரன்னிங் லைட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு பைக்குகளின் டிசைனும் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கானதாக இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கேற்ப சில மாறுதல்களைச் செய்துள்ளது. கஃபே ரேஸரில் 17 அங்குல ஸ்போக்டு வீல்கள், அலுமினியம் பார் எண்ட் மிரர்களும், பிரெல்லி ரூஸோ டயர்கள் தரப்பட்டுள்ளன.

ஸ்கிராம்ப்ளர் ஐகான் இப்போது புதிய அடாமிக் டாஞ்சரின் பெயின்ட்டுடன் வந்துள்ளது. சீட், ஃப்ரேம் போன்றவற்றில் கருப்பு நிறமும், ரிம்களில் சாம்பல் நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெசர்ட் ஸ்லெட் மாடல் ஆஃப் ரோடுக்காகவே உருவாக்கப்பட்டது போல் அதற்கான அம்சங்களுடன் உள்ளது.    

மேலும் இந்த பைக்குகளில் மல்டி மீடியா சிஸ்டமும் உள்ளது. பாடல்கள் கேட்பது, அலைபேசியில் தொடர்பு கொள்வது போன்ற வசதிகளும் கிடைக்கின்றன. இதன் மூலம் சங்கடமில்லா டிரைவிங் அனுபவத்தைப் பெற முடியும். இதில் ஏபிஎஸ் பிரேக் பயன்படுத்தப்பட்டிருப்பதால் பாதுகாப்புக்கு குறைவில்லை.

டுகாட்டி இந்தியா முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் டீலர்ஷிப்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 9 முக்கியமான நகரங்களில் மட்டும் தனது டீலர்ஷிப்களை வைத்துள்ளது. புதிய ஸ்கிராம்ப்ளர்களுக்கான முன் பதிவு தொடங்கிவிட்டது. விரைவில் இந்தியச் சாலைகளில் இவை சீறிப் பாய்வதைப் பார்க்கலாம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x