Last Updated : 13 Apr, 2019 01:33 PM

 

Published : 13 Apr 2019 01:33 PM
Last Updated : 13 Apr 2019 01:33 PM

ஜி.எஸ்.டி.யில் மாற்றம்: நன்மை தருமா?

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 34-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், ரியல் எஸ்டேட் கட்டுநர்கள் பழைய ஜி.எஸ்.டி. விகிதத்தை உள்ளீட்டு வரிக் கடன் (Input tax credit) நன்மையுடன் தேர்ந்தெடுக்கலாம், அல்லது புதிய ஜி.எஸ்.டி. விகிதத்தை உள்ளீட்டு வரிக் கடன் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கட்டுநர்களுக்கு லாபமானதாக அமையும்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பிப்ரவரி சந்திப்புக்கு முன், ரியல் எஸ்டேட் ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரிக் கடனுடன் 12 சதவீதமாக இருந்தது. குறைந்த விலை வீடுகள் உள்ளீட்டு வரிக் கடனுடன் 8 சதவீதமாக இருந்தது. உள்ளீட்டு வரிக் கடன் என்பது திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் மீதும் வழங்கப்படும் கடன்.

 இந்தப் பிப்ரவரி மாதம், பொதுவான குடியிருப்புத் திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. விகிதம் உள்ளீட்டு வரிக் கடன் இல்லாமல் 5 சதவீதமாகவும் குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. விகிதம் உள்ளீட்டு வரிக் கடன் இல்லாமல் 1 சதவீதமாகவும் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த மாற்றத்தைப் பெரும்பாலான கட்டுநர்கள் வரவேற்கவில்லை. இதில், புதிதாக மாற்றம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்தில் கட்டுநர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த மாற்றத்தின்போது உள்ளீட்டு வரிக் கடனை அரசு தள்ளுபடி செய்ததை அவர்கள் விரும்பவில்லை.

இதுதொடர்பாக, அரசிடம் கட்டுநர்கள் முறையீடு செய்ததால், அரசு அவர்களுக்குத் தேர்வு வாய்ப்பை வழங்க முடிவுசெய்தது.

2019, ஏப்ரல் 1 அன்றுக்கு முன் தொடங்கிய கட்டுமானத் திட்டங்களுக்குக் கட்டுநர்கள் பழைய அல்லது புதிய ஜி.எஸ்.டி. விகிதத்தைத் தேர்ந்தெடுத்துகொள்ளலாம். ஆனால், 2019, ஏப்ரல் 1 அன்றுக்குப் பிறகு தொடங்கப்பட்ட திட்டங்களுக்குக் கட்டுநர்கள் புதிய ஜி.எஸ்.டி. விகிதத்தைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, இப்படி வரியைக் குறைத்திருப்பது வாக்காளர்கள் ஈர்ப்பதற்கான நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்.

எந்த விளைவுகளும் கிடையாது

நீங்கள் வீடு வாங்கத் திட்டமிட்டிருந்தால், சமீபத்தில் அமலுக்கு வந்திருக்கும் இந்த ஜி.எஸ்.டி. விகிதத்தால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், இந்த மாற்றம் கட்டுநர்களுக்கு ஓர் ஆசுவாசத்தை வழங்கியிருக்கிறது.

சந்தை நிலையைப் பொருத்து தற்போது கட்டுநர்கள் விலை நிர்ணயத்தைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், விலையேற்றம் செய்வதற்கான வாய்ப்புகள்

இல்லை என்று தெரிவிக்கிறார்கள் துறை நிபுணர்கள். ஜி.எஸ்.டி. கவுன்சில் தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்புகளால் வீடுகளின் விலையில் அடிப்படையான மாற்றங்கள் எதுவும் இருக்காது.

பிப்ரவரி மாதம் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்தால் வேண்டுமானால் வீடுகளின் விலையில் சற்று மாற்றம் இருக்கலாம். ஆனால், அதுவும் சந்தை நிலவரத்தைப் பொருத்தே அமைந்திருக்கும். இந்த ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்புக்கும் வீடு வாங்குவதில் இப்போது

பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x