Published : 29 Sep 2014 12:29 PM
Last Updated : 29 Sep 2014 12:29 PM

மார்பகப் புற்றுநோயை எளிதாக வெல்லலாம்!

உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: அக்டோபர்

பெண்களை அச்சுறுத்திவரும் உடல்நலக் குறைபாடுகளின் பட்டியலில் மார்பகப் புற்றுநோய் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ஆனால் பலரும் பயப்படுவதைப் போல மார்பகப் புற்றுநோய் குணப்படுத்த முடியாததல்ல. “சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை பெற்று நலமுடன் வாழலாம்” என்கிறார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் டாக்டர் பி. குகன்.

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும், கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் வாழும் பெண்களுக்கே அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான புற்றுநோய் என்று பார்த்தால் கிராமப்புறப் பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், நகர்புறப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயுமே பெருமளவு பாதித்து இருக்கின்றன. 1 லட்சம் பெண்களில் 26 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் சொல்கின்றன. இது உலக அளவில் உள்ள சராசரியைவிட மிகவும் அதிகம். இந்த அளவுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்துள்ளதற்குக் காரணம், இது குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததும், வரும் முன்னே கண்டறிய முடியாததும்தான்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி நான்சி ரீகன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அத்தனை மீடியாக்களும் அந்த நோயைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டன. மக்களும் விழிப்புணர்வு பெற்றார்கள். இந்த விழிப்புணர்வினால் அமெரிக்கர்கள் மார்பக சுயபரிசோதனையில் ஈடுபடுகிறார்கள். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுகிறார்கள். அதனால் பாதிப்பு மிகக் குறைந்துவிட்டது.

“நம் நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காத பெண்கள் மட்டுமல்ல, படித்தப் பெண்களும் மார்பகத்தில் சின்னக் கட்டிகள் தென்பட்டால்கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் வருகிறார்கள். அது ரொம்பத் தவறு. அவர்கள் அத்தனைப் பேரும் ஆரம்பத்திலேயே சுய பரிசோதனை செய்திருந்தால் அறுவை சிகிச்சைக்கான தேவையே வந்திருக்காது என்பதுதான் உண்மை” என்று சொல்லும் டாக்டர் குகன், சுயபரிசோதனை செய்துகொள்ளும் முறைகள் குறித்து விளக்குகிறார்.

சுய பரிசோதனை

18 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள் தங்கள் மார்பகத்தை மாதத்துக்கு ஒரு முறையேனும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 1 செ.மீ அளவுக்கும் குறைந்த சின்னக் கட்டிகள் இருந்தாலும் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிகள் இருந்தாலே அவை கேன்சர் கட்டிகள் என்று பீதியடையத் தேவையில்லை. எல்லா கட்டிகளும் கேன்சர் கட்டிகள் இல்லை.

சிறிய அளவில் கண்டுபிடிக்கப்பட்ட 1 செ.மீக்கும் குறைவான கேன்சர் கட்டிகளுக்கு ‘ஃபைப்ரோ அடினோமா’ என்று பெயர். இதற்கு அறுவை சிகிச்சையோ, ரேடியேஷனோ, கீமோதெரபியோ எதுவும் தேவையில்லை. ஒரு சைக்கலாஜிக்கல் கவுன்சலிங் போதும். அதுவும் எடுபடாத பட்சத்தில் இந்தக் கட்டிகளை அகற்றி விடலாம். அப்படி அகற்றிய பின்பு கட்டியில்லாத மார்பக வளர்ச்சியும் பாதிக்கப்படாது.

30 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்று கிளினிக்கல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன் செய்துகொள்ளலாம். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது மாமோகிராம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும் கட்டிகள் வரக்கூடிய அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்கள் இருந்தால்கூட மாமோகிராம் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும். இந்தச் சோதனையில் ஆரம்ப நிலையில் கேன்சர் கட்டிகள் தென்பட்டால் சிகிச்சையில் சரிசெய்வது மிக எளிது.

அக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்

பிங்க் நிறத்தை மென்மைக்கான, பெண்மைக்கான வண்ணமாக மேலைநாட்டவர்கள் கருதுகின்றனர். பெண்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு தீர்வு காண ஓர் அமெரிக்கர், 1985-ல் கேன்சர் சொஸைட்டி என்ற அமைப்பை ஆரம்பித்தார். கேன்சருக்கு மருந்து தயாரித்து சப்ளை செய்யும் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையும் இவரும் இணைந்தே இதனைத் தொடங்கினார்கள். மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை இந்த சொஸைட்டி விளக்கியதைவிட, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்தது. அவர்கள் உலகம் முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்த அக்டோபர் மாதத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

1991-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை வைத்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் பிங்க் ரிப்பன்கள் கொடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டு தேசிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்துக்கு பிங்க் ரிப்பன்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதுவே இப்போது இதன் சின்னமாக மாறிவிட்டது.

இந்த அக்டோபர் மாதத்தை நாமும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிப்போம். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நிவாரணம் பெறுவோம்.

அறிகுறிகள்

மார்பகத்தில் வலி தோன்றினாலே அது மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறி என்பது தவறு. மார்பகப் புற்றுக்கட்டிகள் ஆரம்ப நிலையில் மட்டுமல்ல; முற்றிய நிலையிலும் வலி ஏற்படுத்துவதில்லை. அது நெஞ்சோடு ஒட்டிச் சுருங்கிப் போகும் நிலையில்தான் வலியை உண்டாக்குகிறது. இந்த அளவுவரை விடுவது ஆபத்தானது. தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்பே இல்லை என்பதும் உண்மையல்ல. “ஒன்றரை வருடம்வரை என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தேன். அப்புறம் ஏன் எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது?” என்று கேட்கும் பெண்களும் உண்டு. தாய்ப்பால் கொடுத்தால் 50 சதவீதம் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்பில்லை. தாய்ப்பால் கொடுக்காவிட்டால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

காரணங்கள்

சிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பது, முதல் குழந்தை 30 வயதுக்கு மேல் பெற்றுக்கொள்வது, அம்மா, பாட்டி, சித்தி போன்ற ரத்த உறவுகள் யாராவது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது, கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, உடலுழைப்பு இல்லாதது, உணவு முறை மாற்றங்கள், அதிக உடல் எடை, கொழுப்பு அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாதிருத்தல், மரபணுக்கள் பிராகா 1, பிராகா 2 (braca 1, braca 2) குரோமோசோம்களில் மாற்றங்கள் ஏற்படுவது... இப்படிப் பல காரணங்கள் உண்டு.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஜெனிட்டிக் ஸ்கிரீன் டெஸ்ட் மூலம் கண்டுபிடித்து விடலாம். 18 வயது முதல் 80 வயதுவரை எப்பொழுது இந்த டெஸ்ட் எடுத்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட ஒருவருக்கு இந்த மார்பகப் புற்றுநோய் வரலாம் என்பதையும் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையை ஆரம்பித்துவிட முடியும்.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இந்த ஸ்கிரீன் டெஸ்ட் மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பு இருப்பதைக் கண்டுபிடித்து, முன்கூட்டியே இரண்டு மார்பகங்களையும் எடுத்துவிட்டு, செயற்கை மார்பகங்கள் பொருத்திக்கொண்டார். 80 வயதில் வரப்போகும் நோய்க்கு 20 வயதில் அறுவைசிகிச்சை செய்துகொள்வது எப்படிச் சரியாகும்? எனவே இதனை நான் அங்கீகரிப்பதில்லை” என்கிறார் டாக்டர் குகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x