புல்லட்டில் பார்பிக்யு வேலை தரும் இளைஞர்கள்

புல்லட்டில் பார்பிக்யு வேலை தரும் இளைஞர்கள்
Updated on
2 min read

இளைஞர்களுக்கு பைக், கார்கள் மீது அளவு கடந்த பிரியம் இருக்கிறது. பல ஆயிரம் தொடங்கி, லட்சங்களில் முடியும் இவற்றை வாங்கத் தயங்குவதேயில்லை. இந்த விருப்பத்தை முதலீடாக வைத்து ஒரு தொழிலைத் தொடங்கினால், அதில் வெற்றியும் பெறலாம், நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் பெங்களூருவைச் சேர்ந்த சகோதரர்கள்.

அருண் வர்மா, கிருஷ்ணா வர்மா இருவரும் கல்லூரி நாட்களில் நண்பர்களுக்கு அடிக்கடி பார்பிக்யு சிக்கன் விருந்து வைத்துள்ளனர். “இதையே நீங்கள் விற்பனை செய்தால், செம பிசினஸ்” என நண்பர் விளையாட்டாக சொல்ல, அதைக் கொஞ்சம் சீரியசாக இருவரும் யோசித்திருக்கின்றனர்.

கமகம தொழில்

தடுக்கி விழுந்தால் உணவகத்தில் விழக்கூடிய பெங்களூருவில் எப்படி வித்தியாசமாகச் செய்யலாம் எனத் தயங்கி இருக்கின்றனர். அப்போதுதான் யாரும் சமையலறைக் குள் நுழைந்து பார்ப்பதில்லை. அவர்கள் கண் முன் சமைத்து, வாசனையோடு பரிமாறினால் கண்டிப்பாக நல்ல தொழிலாக மாறும் என முடிவெடுத்திருக்கிறார்கள்.

பலரின் கனவான ராயல் என்ஃபீல்ட் வண்டியில், கிரில் அடுப்பை இணைத்து, நண்பர்கள் வீட்டுக்குச் சென்று கோழி இறைச்சியை கிரில்லில் சமைத்து, சுடச் சுடப் பரிமாற, அது நல்ல பகுதி நேரத் தொழிலாக மாறியிருக்கிறது.

“நண்பர்கள் அளித்த ஊக்கத்தி னால் உணவு மேளா நடத்தினோம். அடுத்த கட்டமாக நிரந்தர வாடிக்கையாளர்களை ஏற்படுத்தும் விதமாக, மக்கள் கூட்டமாகக் கூடும் இடத்தில், மாலை நேரத்தில் பைக் உணவகத்தை அமைத்தோம். இதைப் பார்த்த நண்பர்கள் பலரும் எங்களுடன் இணைந்தனர். அவர்களுக்கு வண்டி, கிரில் அடுப்பு இணைப்பைத் தனியாக அமைத்துக் கொடுத்தோம். பலரும் பகுதி நேரத் தொழில்முனைவோராக மாறினார்கள்” என்கின்றனர் அருணும் கிருஷ்ணாவும்.

ஒரே ருசி!

டெல்லி, மும்பை, சென்னை தொடங்கி நாடு முழுவதும், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 90 ‘பார்பிக்யு ரைட் இந்தியா’ உறுப்பினர்களை உருவாக்கி இருக்கிறார்கள் இந்தச் சகோதரர்கள். இந்தத் தொழிலை முதலில் ‘புட் டிரக்’ (Food Truck) எனப்படும், டிரக் வாகனத்தில் செய்து பார்த்து, பார்க்கிங் பிரச்சினையால் அதைக் கைவிட்டிருக்கிறார் அருண்.

மடிக்கும் மேஜை, சிலிண்டர், கோழியைவைக்க கண்டெயினர் உள்பட அனைத்து இணைப்புகளையும் புல்லட் வண்டியிலேயே பொருத்த முடியும் என்று தெரிந்த பிறகு பார்பிக்யு கிரில்ஸ், ரோல்ஸ், பர்கர் உணவு வகைகளைச் சமைக்கத் தொடங்கி இருக்கிறார்.

“பல நகரங்களில் தொடங்கினாலும் தமிழகம் எங்களுக்கு ஸ்பெஷல். இங்கு வேலை கிடைக்கவில்லை எனப் பல இளைஞர்களும் எங்களுடன் இணைந்து தொழில்முனைவோராக மாறி இருக்கின்றனர். அதனால், கோவை, திருச்சி, ஈரோடு, பழனி, திண்டுக்கல், திருநெல்வேலி எனப் பல ஊர்களில் 49 பேருக்கு பார்பிக்யு பைக்குகள் வடிவமைத்துத் தந்திருக்கிறோம்.

எங்களிடம் இணையும் இளைஞர்களிடம் முன் பணம் பெற்று பைக், கிரில் இணைப்பு, மசாலா அனைத்தையும் கொடுத்து விடுவோம். வீட்டில் கோழியை மசாலாவில் பிரட்டி, ஊறவைத்து, அந்தந்த இடங்களுக்கு எடுத்துச் செல்வார்கள். அதனால் நாடு முழுவதும் கிரில் சாப்பிட்டால் ஒரே ருசியாகவே இருக்கும்” என்கிறார் அருண்.

கோலிவுட்டில் விஷால், ஜீவா போன்ற சினிமா நடிகர்களின் உணவு விருந்துகளிலும், ‘பார்பிக்யு ரைட் இந்தியா’ உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றனராம்.

- பவானி பழனிராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in