

கோடை விடுமுறையை முன்னிட்டுப் பல்வேறு தலங்களுக்குச் சுற்றுலா செல்வது வழக்கமாக இருக்கும். ஒரு மாற்றத்துக்கு இந்தக் கோடையில் அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று சில தினங்களைக் கழித்துவிட்டு வரலாமா? கிராமத்துச் சூழல் மறக்க முடியாத அனுபவங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் மாணவப் பருவத்தினருக்கு வாரி வழங்கக் காத்திருக்கிறது.
வேர்களை அறிவோம்
பெற்றோருடன் நீங்கள் நகரத்தில் வசித்தாலும் உங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறத்தையே வாழ்விடமாகக் கொண்டிருப்பார்கள். அந்த உறவுகளைச் சந்தித்து அளவளாவுவது அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்களது வீட்டு உறுப்பினர்களுக்கு வெளியே நீண்டிருக்கும் உறவின் முறைகள் அவற்றின் பெயர்களை அறிந்துகொள்ளலாம்.
உங்களது தாத்தாவை அறிவீர்கள். அந்தத் தாத்தாவின் தாத்தாவைப் பற்றித் தகவல் ஏதேனும் கிடைக்கிறதா என் கிராமத்து முதியவர்களிடம் விசாரியுங்கள். அங்கிருந்து தொடங்கி உங்கள் பெயர் வரை ஒரு மர வரைபடமாக வரைய முயலுங்கள். ரத்த உறவுகள் அனைவரையும் இந்த வரைபடத்தின் பல்வேறு கிளைகளாக அடக்கலாம். உங்களது குடும்பத்தில் இந்த வரைபடம் ஒரு பொக்கிஷம் என்பதை பின்னாளில் உணர்வீர்கள்.
உறவுகளைப் போலவே நீங்கள் சாப்பிடும் உணவின் வேர்களும் கிராமத்தில்தான் இருக்கிறது. கிராமங்களின் முக்கியத் தொழிலான விவசாயம் குறித்து அருகிலிருந்து இம்முறை அறிந்துகொள்ளலாம். அதிலும் பாரம்பரிய விவசாய முறைகள், விதைகள் பாதுகாப்பு, இயற்கையான பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள், கிராம மக்களின் உணவு முறைகள் குறித்தெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
கதை கேளுங்கள்
கிராமத்துப் பெரியவர்களிடம் கதை கேட்பது அலாதியான அனுபவமாக அமையும். செவி வழியாக அவர்கள் அறிந்த கற்பனைக் கதைகள் மட்டுமன்றி உண்மைத் தகவல்கள் நிறைந்த நிஜக் கதைகளும் உங்களுக்கு வியப்பை அள்ளித் தரும். கிராமங்களில் நடந்த அதிசயங்கள், கொள்ளை நோய், வெள்ளம், வறட்சி, அவற்றை மக்கள் எதிர்கொண்டது என இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத தகவல்கள் அதில் நிறைந்திருக்கும். நாட்டுப்புறப் பாடல் அறிந்தவர்கள் தெருவுக்கு ஓரிவர் இருப்பார்கள். கதைகளிலும் பாடல்களிலும் ஏராளமான சொலவடைகள், விடுகதைகள், கர்ண பரம்பரைக் கதைகள், கதைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய கதைகள் எனச் சுவாரசியங்கள் நிறைந்திருக்கும்.
இவை உட்படக் கிராமத்தில் புதிதாகச் சேகரிக்கும் தகவல்கள் அனைத்தையும் தனித் தலைப்புகளில் குறிப்புகளாகவோ கட்டுரை யாகவோ எழுதிவைக்கலாம். முடிந்தால் செல்ஃபோனில் படமாகவும் குரல் பதிவுகளாகவும் சேகரிக்கலாம். மறக்க முடியாத நினைவுகளாக அமைவதுடன் பிற்பாடு பாடம் சார்ந்து கட்டுரைகள் எழுதும்போது, சுயமாக சில குறிப்புகளைச் சேர்க்கவும் அவை உதவும். மேலும் சில பாடங்களைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கள அனுபவம் கைகொடுக்கும்.
கிராமங்களில் இருந்து கற்போம்
(போ.ப்ரீவா, முதுகலை ஆசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர், சங்கரன்கோவில்)
கிராமங்களை அறிவது வேறுபல வகைகளிலும் மாணவர்களின் பாடம் சார்ந்து உதவிகரமாக அமையும். வயல்வெளி வேளாண்மை குறித்து அறிந்துகொள்வதுடன், மூலிகைத் தாவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். முதலுதவியாகவும் மருத்துவப் பயன்பாடுகளுக்குமான மூலிகைகள் பற்றி அறிந்துகொள்வது புதிய அனுபவமாக இருக்கும்.
கிராமங்களின் நீர் நிலைகளில் காணப்படும் மீன் மற்றும் பறவை உள்ளிட்ட உயிரினங்கள் குறித்து மாணவர்கள் உற்றுக் கவனிக்கலாம். ஓர் ஆலமரத்தைத் தினசரி உற்றுக் கவனிப்பதன் மூலம் மாதிரிப் பறவைகள் கணக்கெடுப்பை நிகழ்த்தலாம்.
மரம், செடி, கொடி எனக் கிராமப்புறத்தில் கிடைக்கும் விதவிதமான தாவர இனங்களைத் தங்களது தாவரவியல் பாட அறிவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இலை மற்றும் பூக்களைச் சேகரித்து மாதிரி ஹெர்பாரியம் தயாரிப்பது வகுப்பில் பாராட்டுப் பெற்றுத் தரும்.
கோடையில் விவசாயப் பணிகள் குறைந்து திருவிழா, கிராம மேம்பாடு தொடர்பான பணிகளில் ஈடுபடுவார்கள். அவை குறித்தும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் தகவல்களைச் சேகரிக்கலாம்.
கிராமங்களில் இன்னமும் மிச்சமிருக்கும் கைவினைப் பொருள்களை அடையாளம் காணலாம். உதாரணத்துக்கு சமையல் கரண்டியாக கொட்டாங்குச்சியில் அகப்பை செய்திருப்பார்கள்; மண் பாண்டங்களைப் பயன்படுத்துவார்கள். மேலும் கயிற்றுக் கட்டில், கூரை வீடுகளில் புழங்குவார்கள். கிராம மக்கள் இப்படி சுய சார்புடன் இயங்குவது குறித்தும் அவற்றின் அவசியம் குறித்தும்கூடக் கேட்டறியலாம்.