Published : 21 Apr 2019 09:50 AM
Last Updated : 21 Apr 2019 09:50 AM

கொசுறு: பெண்களுக்கு மட்டும் ஏன் தடை?

கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, மசூதிக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பெண்கள் மசூதிக்குச் செல்வதைத் தடுப்பது என்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25 மற்றும் 29-ம் விதிமுறைகளை மீறுவது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கவனம் தேவை

டெல்லியைச் சேர்ந்த கீதா (40) தன்னுடைய மகளுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இறங்கும்போது கீதாவின் சேலை ரயிலின் கதவில் சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் ரயில் கிளம்பியது. இதனால் கீதா சில மீட்டர் தொலைவு நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவசர கால பொத்தானை அழுத்தியதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த கீதாவை மருத்துவமனைக்கு மெட்ரோ ஊழியர்கள் அழைத்துச் சென்றனர்.

பெண்களுக்காகப் பெண்கள்

ஹரியாணாவின் பத்து மக்களவைத் தொகுதிகளுக்கு மே 12-ல் தேர்தல் நடக்கிறது. இங்கே பெண்களுக்கு முன்னுரிமையும் அதிகாரமும் அளிக்கும் நோக்கில், பெண்களுக்காகப் பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் அனைத்து அலுவலர்களும் பெண்களாகவே நியமிக்கப்படுவர். கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், வயதான பெண்கள் ஆகியோருக்குத் தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹரியாணா தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அருகும் பெண் தொழிலாளர்கள்

உலக அளவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. 2006 முதல் 2016 வரையிலான பத்தாண்டுகளில் அது 12 சதவீதம் குறைந்துள்ளது. பொருத்தமற்ற வேலை, குடும்பப் பொறுப்புகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற சூழல்கள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் சராசரி அளவை விட 22 புள்ளிகள் குறைவாக உள்ளது.

வாக்களிக்க ஊட்டிக்கு வந்த பெண்கள்

அஞ்சனா, அம்ரிதா இருவரும் ஊட்டியைச் சேர்ந்தவர்கள். வேலை நிமித்தம் அவர்கள் பஞ்சாபில் குடியேறியுள்ளனர். இந்நிலையில், தங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்காக இரு வரும் ஊட்டிக்கு வந்து, அங்குள்ள ஏக்குணி வாக்குச்சாவடியில் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். “ஒவ்வொரு தேர்தலுக்கும் கட்டாயமாகச் சொந்த ஊருக்கு வந்து எங்கள் வாக்கைப் பதிவு செய்வோம். இந்தத் தேர்தலில் வாக்களிக்க இரு நாட்களுக்கு முன்பு ஏக்குணி வந்தோம். தேர்தலில் வாக்களித்ததைப் பெருமையாகக் கருதுகிறோம்” என்று ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x