Last Updated : 14 Apr, 2019 12:52 PM

 

Published : 14 Apr 2019 12:52 PM
Last Updated : 14 Apr 2019 12:52 PM

வாழ்ந்து காட்டுவோம் 01: பெண்ணாகப் பிறப்பது வாழ்வதற்குத்தான்

ஒரு சமூகத்தின் வளர்ச்சி எப்படி அளவிடப்படுகிறது? அந்தச் சமூகத்தின் சிசு மரண விகிதம், ஆண் – பெண் விகிதாச்சாரம், தாய்மார்களின் பிரசவகால இறப்பு விகிதம், ஆண் – பெண் கல்வி விகிதாச்சாரத்தில் உள்ள இடைவெளி, வேலைத்தளங்களில் ஆண் – பெண்களுக்கு இடையிலான வாய்ப்புகளில் உள்ள இடைவெளி ஆகிய அளவீடுகளின்படி பார்க்கையில் இன்னமும் பெண்களும் குழந்தைகளும் நலிவுற்றவர்களாகவே இருக்கின்றனர்.

இந்த ஏற்றத்தாழ்வைச் சமன்செய்ய தேசிய அளவில் மத்திய அரசும் மாநில அளவிலான அரசுகளும் தேவைக்கேற்ப பல்வேறு சட்டங்களையும் நலத்திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனாலும், நாம் எதிர்பார்க்கும் அளவிலான முன்னேற்றம் இன்னமும் ஏற்படவில்லை. இந்தச் சட்டங்கள், நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். விழிப்புணர்வு மிகுந்து, மக்கள் அதிக அளவில் வலியுறுத்த ஆரம்பித்தாலே நடைமுறைப்படுத்துதல் சிறப்பாகிவிடும்.

சலுகையல்ல, உரிமை

நமக்குரிய சட்டங்கள், திட்டங்கள் போன்றவற்றைப்பற்றி அறிந்திருக்க வேண்டியது நம் கடமை. நமக்கு நேரடியாகப் பயன்படாத திட்டமாக இருந்தாலும் அதைப் பெறத் தகுதியுள்ள, நலிவுற்ற நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கும் இப்படியான அறிவும் தெளிவும் நமக்கு அவசியமே.

குழந்தைகள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் எனச் சமூகத்தில் மதம், இனம், பாலினம் போன்றவற்றால் பேதப்படுத்தப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களையும் சட்டங்களையும் குறித்து இந்தத் தொடரில் தெரிந்துகொள்வோம்.

அனைத்துத் திட்டங்களும் அவற்றின் நோக்கம், பயனடைவோருக்கான தகுதிகள், பயனாளிக்குரிய பணப் பயன்கள், விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம், விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய சான்றுகள், அவை எந்தெந்த அலுவலகங்களிலிருந்து பெறப்பட வேண்டும், அரசு இசேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய விவரங்கள், அணுக வேண்டிய அலுவலர்கள் என அனைத்தும் தெரிந்தால்தான் நாம் பலனடைய முடியும்; தேவைப்படுகிறவர்களுக்கு வழிகாட்டவும் முடியும். காரணம், இவையெல்லாம் அரசு நமக்குத் தரும் சலுகைகள் அல்ல; நமக்குக் கிடைத்தே ஆக வேண்டிய உரிமைகள்.

உரிமைகள் என்ற நோக்கோடு அணுகினால்தான் அவற்றைப் பெற நாம் போராடுவோம். ஆனால், நம்மில் பலர் பல நேரம் சரியான ஆவணங்களை இணைக்காமலும் உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்காமலும் பெற வேண்டிய பயன்களைத் தவற விட்டுவிடுகிறோம். பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகு கொண்டு வரப்படுகிற திட்டங்கள், சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வது அரசின் கடமை மட்டுமல்ல; நம் கடமையும்கூட.

தொட்டில் குழந்தைத் திட்டம்

பொருளாதாரக் காரணங்களால் பெற்றோரால் கைவிடப்பட்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளையும் பெண் சிசுக்கொலை என்னும் கொடுமையிலிருந்து பெண் குழந்தைகளையும் காக்கும் பொருட்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம் முதன்முதலாக 1992-ல் தொடங்கப்பட்டது.

2001-ல் மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய வரவேற்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் இந்தத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. தேவையான பணியாளர்கள், வெப்பம் ஏற்படுத்தும் கருவிகள், குளிர்சாதனப் பெட்டிகள், பாலூட்டும் புட்டிகள், உயிர்காக்கும் மருந்துப் பொருட்கள், துடைப்பான், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றுடன் கூடிய குழந்தை வரவேற்பு மையங்கள் இந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டன.

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குழந்தைப் பாலின விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குறைந்துள்ளதாக அறியப்பட்டதால், இந்த மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

வரவேற்பு மையங்களில் பெறப்படும் குழந்தைகள், குடும்பச் சூழ்நிலையில் வளர்வதற்காக உரிமம் வழங்கப்பட்ட சிறப்பு தத்து மையங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

1992 முதல் அக்டோபர் 2016 வரை 937 ஆண் குழந்தைகளும் 4,032 பெண் குழந்தைகளும் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டம் அமலில் இல்லாத மாவட்டத்தில்கூட திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் எங்களால் பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்திருக்கிறது.

பிறந்து ஒரு வாரம்கூட ஆகாத ஒரு பெண் குழந்தை, புகழ்பெற்ற கோயிலில் நந்தி சிலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. அழகான புது உடை, அருகில் ஒரு கூடையில் புட்டிப்பால், துண்டு, சோப்பு, பவுடர் எல்லாமே இருந்தன. மாவட்ட அலுவலர் என்ற முறையில் எனக்குத் தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்று குழந்தையை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளிக்கச் செய்தேன்.

மறுநாள் குழந்தையின் படத்துடன் நாளிதழில் செய்தி வெளியானது. அன்று மாலை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வரச் சொன்னார். மருத்துவரின் அறையை அடைந்தபோது வாசலில் ஒரு பெண் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தார்.

தான்தான் இந்தக் குழந்தைக்குத் தாய் என்று சொல்லி குழந்தையைத் தன்னிடம் தந்துவிடும்படி அந்தப் பெண் கெஞ்சியழுது கொண்டிருப்பதாக மருத்துவ அலுவலர் என்னிடம் சொன்னார். ‘ஏன் குழந்தையைக் கோயிலில் விட்டுவிட்டுச் சென்றார்’ எனக் கேட்டோம். தனக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் ஆண் குழந்தை ஒன்று வேண்டும் என்பதற்காகத்

தன்னைக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய புகுந்த வீட்டினர் அனுமதிக்கவில்லை என்றார். மூன்றாவதும் பெண் குழந்தை என்றதும் வீட்டில் ஒரே பிரச்சினை. குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்றுதான் ஆண்டவனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டதாக அழுதபடியே சொன்னார்.

“இன்னைக்கு பேப்பரில் செய்தியைப் படித்ததும் மனசு தாங்கவில்லை. நான் செய்தது தப்புதான். அதுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால், என் குழந்தையைத் தயவுசெய்து என்னிடமே கொடுத்துவிடுங்கள்” என்று கதறி அழுதார். அவரைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தாலும் அவர்தான் அந்தக் குழந்தையின் தாய் என்பதற்கு அவரிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் சட்டப்படி அவருக்கு உதவ இயலாத நிலை.

அம்மா, குழந்தை இருவரது டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வேண்டும்; நீதிமன்றம் மூலம் ஆர்டர் பெற வேண்டும் எனப் பலவித சிக்கல்களைப் பற்றிச் சொன்னபோது அந்தப் பெண்ணின் கணவர் வந்து கோபத்துடன் சத்தம்போட ஆரம்பித்துவிட்டார். “மூணு பொட்டைக் கழுதைகளைப் பெற்றுவிட்டு இன்னும் கோர்ட், கேஸ்னு அலையணுமா? இது இவ பெத்த குழந்தையே இல்லை. அது பிறந்தவுடன் செத்துப்போயிருச்சு.

அதனாலதான் பார்க்கிற குழந்தையை எல்லாம் தன் பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்கா. மன்னிச்சிருங்க” என்று சொல்லி அந்தப் பெண்ணைத் தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டார். போகும்போது கண்ணீர் மல்க குழந்தையை அந்தப் பெண் பார்த்த ஏக்கப் பார்வை இன்னும் என் மனத்தில் நிற்கிறது. அதன் பிறகு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் அந்தக் குழந்தையைத் தத்துகொடுத்துவிட்டோம். இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

‘தொட்டில் குழந்தைத் திட்டம்’ போன்ற ஒன்றை நடத்துவது ஆரோக்கியமான சமூகத்துக்கு அழகல்ல எனப் பலர் சொன்னாலும் கொல்லப்படுவதிலிருந்தும் ஆதரவற்று விடப்படுவதிலிருந்தும் பெண் குழந்தைகளைக் காப்பதற்கு இந்தத் திட்டம் உதவுகிறது.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர்,
மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

 

pennaga-2jpgright

தமிழக அரசின் சமூகநலத் துறை, குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மகளிர் மேம்பாட்டுத் திட்டம், பொது சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற பல துறைகளில் கடந்த 28 ஆண்டுகளாக ருக்மணி பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

குழந்தைகள், பெண்கள் நலன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் நிறைந்த துறை சார்ந்த கள அனுபவம் பெற்றவர். மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநராகப் பல துறைகளின் அலுவலர்களுக்கு பயிற்சியளித்துவருகிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x