Published : 02 Apr 2019 11:03 AM
Last Updated : 02 Apr 2019 11:03 AM

வேலை வேண்டுமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியப் பணி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர், தட்டச்சர் ஆகிய பல்வேறு பதவிகளில் 224 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகுதி

உதவிப் பொறியாளர் பதவிக்குப் பி.இ. சிவில் அல்லது பி.டெக். கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டத்துடன் எம்.இ. (சுற்றுச்சூழல் பொறியியல்), கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். (சுற்றுச்சூழல் அறிவியல்), எம்.டெக். (பெட்ரோலியம் ரிஃபைனிங்,

பெட்ரோகெமிக்கல்ஸ்), எம்.இ. (சுற்றுச்சூழல் மேலாண்மை) பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

அதேபோல், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கு எம்.எஸ்சி. வேதியியல், உயிரியல், விலங்கியல், சுற்றுச்சூழல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் நச்சுயியல், நுண்ணுயிரியல், உயிரி-வேதியியல், மரைன் பயாலஜி, அனலட்டிக்கல் கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, தாவரவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

 உதவியாளர் பதவிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் குறைந்தபட்சம் 6 மாதக் காலக் கணினி டிப்ளமா அல்லது கணினிச் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சர் பதவிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தட்டச்சுத் தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் ஹையர் கிரேடு முடித்திருக்க வேண்டும். அதோடு 6 மாதக் காலக் கணினி டிப்ளமா அல்லது கணினி சான்றிதழ் படிப்பும் அவசியம்.

தமிழ்வழிக்கு இட ஒதுக்கீடு

அறிவிக்கப்பட்டுள்ள மொத்தக் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைத் தமிழ்வழியில் படித்துப் பெற்றவர்கள் இதற்கு முயற்சிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல் 30 வரை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., டி.என்.சி., பி.சி., பி.சி.-முஸ்லிம்) வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு (தட்டச்சர் பதிக்குக் கூடுதலாகத் தட்டச்சு திறன் தேர்வு) அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். பணி நியமனத்துக்கு மொத்தம் 100 மதிப்பெண். அதில் 87.8 சதவீதம் எழுத்துத் தேர்வுக்கும், எஞ்சிய 12.2 சதவீதம் நேர்முகத் தேர்வுக்கும் வெயிட்டேஜ் அளிக்கப்படும்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தைப் (www.tnpcb.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வு மையங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற விவரங்களை இணையத்தில் அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x