Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

வேலையைக் காதலி! - 5

வேலை வாங்கித் தரும் வேலை, கல்லூரிகளுக்கு என்று ஆகி வருகிறது. ‘எந்தக் கல்லூரியில் படித்தால் கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் கண்டிப்பாக வருகிறார்கள். கடந்த ஆண்டு அதிகபட்சம் எவ்வளவு சம்பளம் கொடுத்து கூட்டிச் சென்றார்கள்’ என்று பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

தனியார் கல்லூரிகளும் “எங்களைப் பார்; எங்கள் கேம்பஸ் ரெக்கார்டை பார்!” என்று விளம்பரங்கள் தருகிறார்கள். இதில் பல விளம்பரங்கள் சிகப்பழகை உத்தரவாதமாகத் தருவதாகச் சொல்லும் களிம்பு விளம்பரங்கள்போல என்பது வேறு விஷயம்.

என் கவனம் எல்லாம் கேம்பஸ் தேர்வில் வேலை மறுக்கப்பட்டோர் அல்லது கேம்பஸ் தேர்வு நடைபெறாததால் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் பற்றித்தான். ஏனென்றால் இதுதான் பெரும்பான்மை. படித்து முடித்து வேலைக்குத் தயாராக நிற் கும் இளைஞர் கூட்டத்தின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகமாகி வரு கிறது. காலப்போக்கில் இவர்கள் தங்கள் தகுதிக்குக் கீழே ஏதோ ஒரு வேலை யில் தங்கிப் போய்விடுகிறார்கள். கூரியர் கொண்டு தரும் பையன் பயோடெக்னா லஜி படித்திருக்கிறான். ப்ரீ பெய்ட் சிம் விற்கும் பெண் எம்.பி.ஏ. முடித்திருக் கிறாள். புரபெஷனல் படிப்புகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த படிப்பு களுக்கே இந்த நிலை என்றால் கலைக் கல்லூரி படிப்புகளின் நிலை என்ன?

இந்த கல்வி முறையை மாற்றுவது, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது என்றெல்லாம் பேசுவதைவிட வேலைக்குத் தயாரான மாணவர்களை நல்ல வேலைகளில் அமர்த்துவதுதான் முக்கிய பணி. அதனால் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று முதலில் பார்ப்போம்.

நான்கு விஷயங்களை பரிந்துரைக்கிறேன்

ரஜினி பாஷாவில் சொன்ன வசனம் தான் வேலை தேடலில் நிதர்சனம்: உன் வாழ்க்கை உன் கையில். தினம் எழுந்த தும் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்து நம்பிக்கையுடன் முஷ்டியை உயர்த்திச் சொல்லுங்கள்: “என் வேலை என் கையில். என் வாழ்க்கை என் கையில்!” நிச்சயம் ஒரு புது உற்சாகம் பீறிட்டு எழும்.

‘கிடைக்கவில்லை, முடியாது, தெரிய வில்லை’ எனும் சிந்தனை ஓட்டங்கள் எதிர்மறையான சிந்தனைகளையும் உணர்வுகளையும்தான் தோற்றுவிக்கும். அதை மாற்ற முதலில் புகுத்த வேண்டியது நம்பிக்கை தரும் புது எண்ணங்களையும் உற்சாகம் தரும் புது முயற்சிகளையும்தான். சில மாத, சில வருட தாமதம் உங்கள் வாழ்க்கையை மொத்தமாக பாழாக்கி விடாது. இந்த நம்பிக்கைதான் முதல் விஷயம்!

உங்களால் என்னென்ன செய்ய முடியும், என்னென்ன வேலைக்கு போக முடியும், எங்கெங்கு வேலை கிடைக்கும் என பட்டியல் போடுங்கள். கிடைக்குமா, கிடைக்காதா என்று யோசிக்காதீர்கள். இந்த வேலைகளுக்கான ஆதாரத் திறமை என்ன என்று அடுத்த பட்டியலிடுங்கள். நான் முன்பே சொன்னதுபோல, மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது நீங்கள் விரும்பும் துறைகளில் உங்களுக்கு திறன்கள் அதிகம் இருக்கும். அப்படி குறை இருப்பின் அந்த திறன்களை வளர்த்துக்கொள்ள செலவு செய்யுங்கள்.

திறன்கள்தான் வேலைகளை உங்கள் பக்கம் இழுத்து வரும். ஒரு ஓட்டுநருக்கு உடனே வேலை கிடைக்கக் காரணம் அவருக்கு வண்டி ஓட்டத் தெரியும். கணக்காளருக்கு பேலன்ஸ் ஷீட் படிக்கத் தெரியும். விற்பனை சிப்பந்திக்கு விற்கத் தெரியும். உங்களுக்கு என்ன தெரியும்? படிப்பை விடுங்கள். உங்கள் திறன்களைக் கண்டுகொள்ளுங்கள். அவற்றை கூர்மைப்படுத்துங்கள். இது இரண்டாவது விஷயம்.

“இது என்னால் முடியும்!” என்று அறிவிக்க சில சான்றுகள் இருந்தால் நல்லது. பட்டயப் படிப்புகள், சிறப்பு பயிற்சிகள், சில குறுகிய கால பணி அனுபவங்கள் போன்றவை உதவும்.

உங்களுக்கு ஒரு புரஃபைல் தயார் செய்யுங்கள். நல்ல சி.வி. தயார் செய்யுங் கள். ஒரு புகைப்படக் கலைஞர் தன் படைப்பு களை ஆல்பம் எடுத்து வைப்பதைப்போல இது. அதேபோல ஒரு பாடகர் “எங்கே பாடு!” என்றதும் ஒரு நிமிடத்தில் திறமை யைக் காட்டுவதைப்போல உங்களால் முடியுமா என்று யோசியுங்கள். வலைதளங் களில் உங்கள் ஆர்வங்களையும் சாதனைகளையும் பதிவு செய்யுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் சொல்வதைவிட சான்றுகள் அதிகம் சொல்ல வேண்டும். இது மூன்றாவது விஷயம்.

நான்காவது விஷயம் அதிமுக்கியமானது. தைரியமாக கதவைத் தட்டுங்கள். கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குங்கள். 99% தோல்விதான் என்பார்கள். அதுகூட நல்ல செய்திதானே. 1% வெற்றி வாய்ப்பு இருக்கிறதே! வேலை கிடைக்காவிட்டாலும் கம்பெனி கலாச்சா ரம் புரியும். உங்களுக்குத் தெரிந்த மனிதர் களின் உதவி கிடைக்க வைக்கும். புது மனிதர்களுடன் பேச வைக்கும். தனியாக இயங்கும் துணிவைக் கொடுக்கும். தோல்விகளைத் தாங்கவைக்கும். இப்படி பல அனுபவங்கள் கிட்டும். அதனால் கள அனுபவம் முக்கியம்.

இந்த முயற்சி உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உங்கள் வேலை தேடும் அனுபவம் உங்களை உறுதிப்படுத்தும். தினசரி விளம்பரங்கள், வலைதள வாய்ப்புகள், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், உங்கள் சீனியர் மாணவர்கள் மூலம் அவர்கள் வேலை செய்யும் கம்பெனிகளில் வாய்ப்புகள் என ஆயிரம் கதவுகள் திறக்கும்.

கடைசியாக ஒன்று: உங்களுக்குப் பிடித்த வேலையை சம்பளம் இல்லாமல் 6 மாதம் செய்யத் தயாராகுங்கள். வாய்ப்புகள் வந்து குவியும்!

அந்த நடிகர் வசீகரமானவர். பட்டப் படிப்பும் நல்ல சினிமா கம்பெனி வேலையும் இருந்தது. கதாநாயக வேடத்திற்கு தேடிக் கொண்டிருக்கையில் ஒரு வாய்ப்பு வந்தது. போய்ப் பார்க்கிறார்.

“இதில் இரண்டு கெட்டப்கள். ஒன்று ராஜகுமாரன். இன்னொன்று நோய் பிடித்த வயோதிகன் (சாபத்தின் விளைவு!). ராஜகுமாரன் வேஷம் சரிதான். ஆனால் அந்த நோய்வாய்ப்பட்ட வயோதிகன் வேடம் உங்களுக்கு பொருந்தாதே!” என்று திருப்பி அனுப்பிவிட்டார் இயக்குநர்.

மனம் தளரவில்லை. அடுத்த நாள் காலை இயக்குநர் வீட்டில் ஒரு நோய்வாய்ப்பட்ட வயோதிகர் காத்திருந்தார். கருணையுடன் என்ன வேண்டும் என்று கேட்க “ஹீரோ சான்ஸ்” என்று வேஷம் கலைத்து தன் வேஷப் பொருத்தத்தை நிரூபித்தார் நடிகர். முதல் வாய்ப்பும் கிடைத்தது.

படம் மணாளனே மங்கையின் பாக்கியம். அந்த நடிகர் ஜெமினி கணேசன்!

- திங்கள்தோறும்

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x