Published : 08 Apr 2019 12:33 PM
Last Updated : 08 Apr 2019 12:33 PM

சாலைகளில் சீறிப் பாய வருகிறது ஜாவா!

ஒருகாலத்தில் சக்கை போடு போட்ட, இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா பைக், கிளாசிக் லெஜண்ட்ஸ் மற்றும் மஹிந்திராவின் கூட்டுமுயற்சியில் மறுபிறவி எடுத்திருக்கிறது. கடந்த வருடத்தின் இறுதியில் ஜாவா, ஜாவா 42 என்ற இரண்டு பைக்குகளுடன் புதிதாக ஜாவா பெராக் என்ற என்ற பைக்கையும் அதிகார பூர்வமாக அறிவித்தது. ஆனால், உற்பத்தி குறித்தோ, விற்பனை குறித்தோ அப்போது எந்த தகவல்களும் வெளியிடப்பட வில்லை.

ஆனாலும், ஜாவா, ஜாவா 42 பைக்குகளை முன்பதிவு செய்ய பலர் ஆர்வம் காட்டினர். நவம்பர் மாதத்திலிருந்தே முன்பதிவுகள் ஜரூராக நடந்தன. போகப்போக ஜாவா பைக்குகளின் விற்பனை, டெலிவரி குறித்து எந்தத் தகவல்களும் நிறுவனத்திலிருந்து வெளியாகாததால், எப்போது ஜாவா பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என்ற கேள்விதான் பிரதானமாக பைக் பிரியர்களிடம் எழுந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் கிளாசிக் லெஜண்ட்ஸ் முதல் கட்ட விற்பனையை டெலிவரி செய்துள்ளது.டெலிவரி தொடங்கியிருந்தாலும், முழுமையாகச் சந்தையில் விற்பனையைத் தொடங்கும் அளவுக்கு வேகம் இல்லாததுபோல் தெரிகிறது. 77 நகரங்களில் 95 டீலர்ஷிப்களைத் திறந்திருக்கிறது. 100 டீலர்ஷிப்கள் என்ற இலக்கை விரைவில் எட்ட உள்ளது. போகப்போக விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேசமயம் ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் பெர்பாமென்ஸ் குறித்தும் கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டன. இதற்கு பதிலளித்துள்ள கிளாசிக் லெஜண்ட்ஸ், இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் வழங்கியுள்ள சான்றிதழ் படி ஜாவா, ஜாவா 42 இரண்டும் லிட்டருக்கு 37.5 கிமீ என்ற அளவில் மைலேஜ் தருவதாகக் கூறப்படுகிறது.

293 சிசி திறன் கொண்ட லிக்விட் கூல்க்ட், சிங்கிள் சிலிண்டர் டிஓஹெச்சி இன்ஜினுக்கு லிட்டருக்கு 37.5 கிமீ மைலேஜ் கிடைப்பது என்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், ரிசர்ச் அசோசியேஷனின் சோதனைகள் முழுவதும் ஒரு அறைக்குள்ளேயே நடத்தப்படும் சோதனையைப் பொறுத்து அளவிடப்படுகிறது. ஆனால், சாலைகளில், கரடு முரடான பாதைகளில் என ஜாவா பைக்குகள் எந்த அளவுக்கு மைலேஜ் தரும் என்பது தெரியாது. பைக்கை வாங்கி ஓட்டிப் பார்த்தால்தான் தெரியும். 

ஜாவா பைக்குகள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஜாவா ரூ. 1.64 லட்சம், ஜாவா 42 ரூ. 1.55 லட்சம். டூயல் சேனல் ஏபிஎஸ் ஜாவா ரூ. 1.72 லட்சம், ஜாவா 42 ரூ. 1.63 லட்சம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x