Published : 03 Mar 2019 04:14 PM
Last Updated : 03 Mar 2019 04:14 PM

கற்பிதமல்ல பெருமிதம் 47: எல்லை மீறச்செய்யுமா இணையம்?

தங்களுடைய புது மொபைல் போனில் வீடியோ படங்களை நல்ல தரத்தில் படமெடுக்க முடிவதைப் பற்றி ரவியும் அவனுடைய மனைவி சுசீலாவும் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய ஆறு வயது மகள் ஸ்வேதா ஆடுவதையும் பாடுவதையும் தொடர்ந்து அதில் பதிவுசெய்து வருகிறார்கள்.

டப்ஸ்மேஷில் நடிகர்களின் வசனங்களுக்கு ஸ்வேதா பிரமாதமாக வாயசைப்பதோடு, முகபாவம், கையசைப்பு எனப் பல்வேறு விதங்களில் நடிப்பதைப் பார்த்துப் பெற்றோருக்குப் பெருமிதம். இப்போது நடனமாடுவதையும் பதிவுசெய்து டிக்டாக்கில்  போட்ட பிறகு ஏக பாராட்டுக்கள்.

ஸ்வேதாவின் பெற்றோர் தங்களை ஸ்டார் பெற்றோராக உணர்ந்தனர். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அந்தச் சம்பவம் நடக்கும்வரை.

எதிர்பாராத விபரீதம்

பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டு அழுதபடி வந்தாள் ஸ்வேதா.  பக்கத்து வீட்டு மாமி அடித்துவிட்டாராம். சுசீலா பக்கத்து வீட்டு மாமியுடன் சண்டைபிடிக்கப் போனபோதுதான் உண்மை புரிந்தது. பக்கத்து வீட்டுப் பையன், அவன் கல்லூரித் தோழர்கள் இருவர் என அனைவரும் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அங்கே வந்த ஸ்வேதாவையும் நடனமாடவிட்டு அவளோடு உரசி உரசி ஆடி இருக்கிறார்கள்.

வெளியே போய்விட்டு வந்த பக்கத்து வீட்டு மாமி இதைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டார். பையன்களைத் திட்டி அனுப்பிவிட்டு ஸ்வேதாவுக்கு நாலு அறை கொடுத்து அனுப்பி இருக்கிறார். சுசீலாவுக்கு, தான் செய்த முட்டாள்தனம் அப்போது தான் உறைத்தது. கணவன் ரவியிடம் புலம்பித் தீர்த்துவிட்டாள்.

நண்பனின் அணுகுமுறை

ரவிக்கும் சொல்ல ஒரு கதை இருந்தது. அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் 30 வயதுப் பெண்ணும் இப்படித் தன் நடனத்தை டிக்டாக்கில் பதிவுசெய்து போட்டிருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு இவர்களது அலுவலக நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணிடம் லிப்டில் ஆபாசமாக நடக்க முயன்றிருக்கிறான். அவர் பயந்து ஒடுங்கிப்போனாராம். அந்தப் பெண்ணைப் பற்றிக் கொச்சையாகப் பேசிவிட்டுத்தான் நடந்துகொண்டதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டானாம் அந்த நண்பன்.

தான் நடனமாடுவதை வீடியோ பதிவுசெய்ய அப்பாவும் அம்மாவும் மறுத்தபோது ஸ்வேதா அடம்பிடித்து அழுதாள். சாப்பிட, தூங்க பிடிவாதம் பிடித்தாள். மனநல ஆலோசகரின் வழிகாட்டுதலுக்குப் பிறகு ஸ்வேதாவை விளையாட்டு, கதைப் புத்தகங்களைப் படிக்க வைத்தல், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது  எனத் திசைமாற்றிக் கொண்டிருக் கிறார்கள் அவளுடைய பெற்றோர்.

எல்லாம் இணைய மயம்

பெண்கள் மட்டுமல்ல; பெற்றோர்கள் மட்டுமல்ல; கணவன் -மனைவி, காதலர்கள் என எல்லோருமே இப்படி அனைத்தையும் மொபைலில் பதிவுசெய்து இணையத்தில் ஏற்றுகிறார்கள். ஏன் இப்படி? எது சரி, எது தவறு, எது எதில் கொண்டுபோய்விடும் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் ஆண்களும் பெண்களும்.

இத்தகைய செயலிகளைத் தடைசெய்வதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்லித் தடைபோடுபவர்கள் இப்படியான மனநிலையின் ஊற்றுக் கண்ணை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?  சில நேரம் உண்டு உறைவிடப் பயிற்சிகளில் பயிற்சிக்கு வரும்  பெண்கள் இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கி ஆடிக்கொண்டே  இருப்பார்கள். இதற்காகவே குத்துப் பாடல் களைப் பதிவுசெய்துகொண்டு வருவார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் ஆடுவார்கள்.

பலரும் தேர்ந்த நடன அசைவுகளோடு ஆடுவார்கள். ஆபாச உடல் அசைவுகளையும் ரசித்துச் செய்வார்கள். ஆச்சரியமாக இருக்கும். எங்கே கற்கிறார்கள், எப்படி இதெல்லாம் பயிற்சி எடுக்கிறார்கள்?

பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி

சுதந்திரம் மறுக்கப்பட்ட பெண்களே இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால் ஆண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு முறை பஸ்ஸில் பயணம் செய்தபோது எனக்கு முன் சீட்டில் இருந்த 20 வயதுப் பையன் மொபைலில் வீடியோவைப் பார்த்துக்கொண்டே வந்தான். சிறிது நேரத்தில் சட்டையைக் கழற்றி, சீட்டின் பின் சாய்வுமேல் போட்டான். என் முகத்தில் வந்து விழுந்தது. திட்டலாம் என்று முன்பக்கம் நோக்கிப் போனேன். ஆபாச வீடியோவைப் பார்த்தபடி அவன் சுயஇன்பம் செய்துகொண்டிருந்தான். அதிர்ச்சியாக இருந்தது.

நடுவில் அவனுக்கு போன் வந்தது. அவனுடைய அம்மாவிடம்தான் பேசினான் என்று நினைக்கிறேன். சண்டைபோடும் தொனியில் பேசினான். “சும்மா போன் பண்ணித் தொந்தரவு பண்ணாத. நான் தூங்கறேன். போனை வெச்சுத் தொலை. நான் தொலைஞ்சா போகப்போறேன்? வரேன்” என்றான்.

எங்கும் வெளிப்படும் பாலியல்

மேற்சொன்ன பிரச்சினை களை எல்லாம் ஆண்ட்ராய்டு போன், பல செயலிகள் வந் ததன் விளைவாக மட்டும் குறுக்கிப் பார்த்துவிட முடியாது. அடிப்படை நாக ரிகப் பண்புகள் எங்கே போயின? பாலியல் என்பது ஆண் - பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; ஒருவரின் நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்துத் தளங்களிலும் பாலியல் வெளிப்படுகிறது.

ஒரு பக்கம் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வதே கலாச்சாரச் சீர்கேடு என்கிறோம். பள்ளிப் பருவத்திலேயே பையன்களையும் பெண்களையும் பிரித்துப் பிரித்து வெவ்வேறு வகுப்புகளில் அடைக்கிறோம். மீறிப் பேசுபவர்களால் பள்ளிக்குப் பிரச்சினை வரக் கூடாது என்று டி.சி. கொடுத்து அனுப்புகிறோம்.

அடக்கிவைப்பதன் விளைவு

பெற்றோர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். எதையுமே யோசித்துப் பார்க்காமல் மின்னணுச் சாதனங்களை அறிமுகப்படுத்துவதே அவர்கள்தாம். கைமீறிப் போனவுடன் கதறுகிறார்கள். ஒருபுறம் பாலியலின் கிளுகிளுப்பை வியாபாரம் ஆக்குகின்றன ஊடகங்கள், இவற்றைச் சுலபமாக கையில் எட்டவைக் கின்றன மின்னணுச் சாதனங்கள்.

மறுபுறம் பாலியல் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத இளம்பருவத்தினர், பெண்கள், ஆண்கள் ஆகியோர்.  ஒடுக்கப்பட்ட உணர்வு, திமிரவைக்கிறது. பாலியல் பற்றிய ஆரோக்கியமான விவாதம் இல்லாத சமூகத்தில் அதை நுகரவும்  வெளிப்படுத்தவும் துடிக்கும் மனது பின்விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை.

பெண்களை ஒடுக்கி வைத்ததன் விளைவுதான் அவர்களின் இத்தகைய வெளிப்பாடுகள். பெண்ணுக்கு அறிவுதான் அழகு; ஆளுமைத்தன்மைதான்  கம்பீரம் என உணர்ந்த பெண்களின் பயணம் அந்தப் பாதையிலேயே தொடரும்.

ஆனால், நம் சமூகத்தில் பெண்களை இன்னமும் அடுப்பங்கரை ராணிகளாகவும் அழகுப் பதுமைகளாகவுமே பார்க்கிறோம்.

ஆண்களுக்கு அவர்களை வெளிப் படுத்திக்கொள்ள வாய்ப்புகளை அளிப்பது போல், பெண்களுக்கு வாய்ப்புகளை அளிக்காதபோது அவர்களின் கவனத்தை ஈர்க்க இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். குடும்பப் பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொன்னால், யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்துப் போடுவேன் என்று மீறத் துடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு இடம் இல்லாதபோது மனம் இத்தகைய சிற்றின்ப விஷயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லாத் தளங்களிலும் ஒரே வரையறையை வையுங்கள். உருப்படியாகச் செய்ய ஏதாவது இருந்தால் ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்வைப் பிரச்சினைக்குரியதாக்கும் இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள். பாலியலில் கிளுகிளுப்பை மட்டும் உணர்ந்து, வசப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பாலியல் பற்றியும் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் ஆரோக்கியக் கல்வியைக் கொடுங்கள்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x