Last Updated : 23 Mar, 2019 05:22 PM

 

Published : 23 Mar 2019 05:22 PM
Last Updated : 23 Mar 2019 05:22 PM

வண்ணங்கள் ஏழு 47: ஈரமும் வீரமும் இருக்கு

நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவர் சில ஆண்டுகளுக்குப் பின், எதிர்பாராத விதமாகச் சந்திக்கின்றனர்.

“எனக்கு ஒரு பொண்ணு, ஒரு திருநங்கை.. உனக்கு?’’

“எனக்கு ஒரு பையன், ஒரு திருநம்பி..’’

- இப்படி ஓர் இயல்பான உரையாடல் நடக்கும் போதுதான், இந்தச் சமுதாயத்தை மேம்பட்ட சமுதாயமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறார் திருநங்கை பாரதி கண்ணம்மா.

பரந்துபட்ட இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 62 தொகுதிகளில் மட்டுமே பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் இருக்கும்  4,030 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 311 இடங்களில்  மட்டும்தான்  பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த இடைவெளியை ஓரளவுக்கு ஈடுசெய்யவே நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண் களுக்கான  33% இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

கவனப்படுத்தும் குரல்

ஆனால், ‘கவனி… என் குரல் / எவ்வளவு பலவீனமாக/ ஒலித்தாலும்/ நாம் பேசியாக வேண்டும்’ என்னும் கவிஞர் இன்குலாப்பின் கவிதையைப் போல், திருநங்கை எனும் பாலினச் சிறுபான்மையைச் சேர்ந்தவர்களின் உரிமைகளைப் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் தேர்தல் களத்தில் தொடர்ந்து போட்டியிடுவதன் மூலம் தன்னுடைய இருப்பை உறுதிசெய்துவருபவர் மதுரையில் வசிக்கும்  பாரதி கண்ணம்மா.

அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் எனப் பல்வேறு பிரிவினரிடையேயும் மாற்றுப் பாலினத்தவர் குறித்த புரிதலை  ‘பாரதி கண்ணம்மா அறக்கட்டளை’ சார்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்திவருபவர் பாரதி கண்ணம்மா.

2011-ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலிலேயே மேயர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், திருநங்கைப் பிரிவினர் தேர்தலில் போட்டி யிடுவதற்குச் சட்டபூர்வமாக வழியில்லை என்ற காரணத்தைக் கூறி, இவருடைய வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.

சமூகநீதிக்கான போராட்டம்

“திருநங்கைகளாகிய எங்களின் வாக்குகள் எல்லாக் கட்சியினருக்கும் தேவைப் படும்போது, தேர்தலில் போட்டியிடும் உரிமை எங்க ளுக்குக் கிடையாதா? இந்த அநியாயத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். திரு நங்கைகளும் தேர்தல்களில் போட்டியிடலாம் எனத் தீர்ப்பு வந்தது. பெண்களுக்கான உரிமையும் மாற்றுப் பாலினச் சிறுபான்மையினருக்கான உரிமையும் மனித உரிமையே என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியது.

அதற்குப் பிறகு, கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரையில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். போட்டியிட்ட 30 சொச்சம் வேட்பாளர்களில்  15-வது இடத்தைப் பிடித்தேன். ஆயிரத்து சொச்சம் வாக்குகள்தான் வாங்கினேன். அதனால் என்ன? ஒரு திருநங்கையுடைய உணர்வை ஒரு திருநங்கையால்தானே  பேச முடியும்? அதற்குத்தான் இந்தப் போராட்டம். தற்போது மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.

மதுரையில் ஒரு கல்லூரியில் படிக்கும் பெண் தன்மை கொண்ட மூன்று மாணவர்கள், உடன் படிக்கும் மாணவர்களின் கேலி, கிண்டலால் தற்கொலைக்கு முயல, அதில்  இருவர் இறந்துவிட்டனர். ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.  இவ்வளவு தூரம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும் இப்படிப்பட்ட உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது?

தேர்தல் வாக்குறுதிகள்

நில உச்ச வரம்புச் சட்டம் என்று இந்திரா காந்தி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அது போல், பண உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவருவேன். தேவைக்கு மீறி அதிகப்படி யாகச் சேர்த்துவைத்திருக்கும் யாருடைய பணமும் அரசின் கஜானாவுக்குப் போய்விடும். ஒவ்வொரு குடும்பத்திலும் அந்தக் குடும்ப உறுப்பினர்களின் பணிக்கேற்ற ஊதியத்தை அடிப்படையாக வைத்து, அந்தக் குடும்பத்துக்கான வருமானம் கணக்கெடுக்கப்படும். இதில் அரசியல்வாதி, சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர் முதல் சாமானிய மனிதர்கள்வரை எல்லோரும் வருவார்கள்.  இதன்மூலம் பணக்காரர்களிடம்   மேலும்  மேலும் பணம் சேர்வது தடுக்கப்படும். வருமானத்துக்கு மீறிச் சொத்துசேர்ப்பது, அநியாய வட்டிக்கு விடுவது எதுவும் நடக்காது.

பண உச்ச வரம்பின்மூலம் நாட்டின் வருவாய் உயரும். அதைக் கொண்டு எல்லோருக்கும் கல்வியும் மருத்துவமும் நிச்சயம் சாத்தியமாகும். படிக்கும் கல்விக்கேற்ற வேலை உறுதி செய்யப்படும். இவைதான் என்னுடைய வாக்குறுதிகள். நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் இவை சட்டமாகும்.

மாற்று வழியை ஏற்படுத்துங்கள்

சமூகத்தில் திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் ஆளாளுக்குப் பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் இந்த நிலைக்குப் போகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாற்றுப் பாலினத்தவர் யார் வேண்டுமானாலும் எங்களின் கல்லூரிகளில் உயர் கல்வியைப் படிக்க விரும்பினால் அவர்களை வரவேற்கிறோம் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது.

இலவசமாகவே கல்வி கற்கும் அந்த வாய்ப்பை இதுவரை பயன்படுத்திக்கொண்ட திருநங்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் என்ன? எந்தக் குடும்பத்திலும் தன்னுடைய குழந்தை திருநங்கையாகவோ திருநம்பியாகவோ உணரப்பட்டால் அவர்களை ஆதரித்து அன்போடு அரவணைத்துத் தன்னுடைய குழந்தையின் பாலின அடையாளத்தை வெளிப்படையாகத் தெரிவித்து கல்வி நிறுவனங்களுக்குச் சென்று அவர்களுக்கான உரிமையைப் பெறலாம். ஆனால், சமூகத்தில் எத்தனை பெற்றோர் இதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

பொருளாதாரமா, சமூக அங்கீகாரமா?

எட்டாவதுவரை மட்டுமே படித்த ஒரு திருநங்கை பிச்சை எடுப்பதன் மூலமும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதன் மூலமும்  மாதத்துக்குச் சில ஆயிரங்களில் வருமானம் பார்க்க முடிகிறது என்றால், படித்தாலும் அதற்கேற்ற வேலைக்கோ சம்பளத்துக்கோ உத்தரவாதம் இல்லாத நிலையில் பொதுச் சமூகத்தின் அனுதாபத்தையும் பாலியல் தேவையையும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாள்.

இந்த நிலையைச் சமூகத்தால்தான் மாற்ற முடியும். பிச்சை எடுப்பதையும் பாலியல் தொழிலையும் தேர்ந்தெடுப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்.  குறைவான ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வெவ்வேறு பணிகளை இன்றைக்குத் திருநங்கைகள் பார்க்கின்றனர். அவர்களுக்கான எளிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.

எங்கெல்லாம் பணியமர்த்தலாம்?

தெருக்களில் குப்பை வாரும் பணியைத் திருநங்கைகளுக்குக் கொடுத்தால் என்ன? சம்பாதிக்கிற, அரசு ஊழியராகிவிட்ட திருநங்கைப் பிள்ளையைக் குடும்பம் வேண்டாம் என்று சொல்லிவிடுமா?  சமூகத்தில் திருநங்கைகளுக்கான முன்னேற்றம் ஏற்படும்.

எல்லோருக்கும் இன்றைக்கு இறந்தால், நாளைக்குப் பால். ஆனால், எங்களுக்கு இன்றைக்கு இறந்தால் இன்றைக்கே பால். எதையும் எதிர்த்துப் போராடுபவர்கள் நாங்கள். விதியை மாற்றினால் எல்லாம் நடக்கும். ராணுவத்தில் எங்களைச் சேருங்கள்; எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்பதை நீங்கள் உணரலாம். காவல் துறையில் எங்களை அதிகம் சேர்க்கலாம்.

பெண்களின் தோழி

நான்கு பெண்கள் இருக்கும் இடத்தில் ஒரு திருநங்கை அவர்களின்  தோழியாக இருந்தால், அவர்களின் பக்கமே ஆண்கள் தலைவைக்க மாட்டார்கள். பெண்கள் திருநங்கைகளை அவர்களின்  தோழியாக நடத்த வேண்டும்.

ஈரமும் வீரமும் கொண்டவர்கள் திருநங்கைகள். என்னுடைய அம்மா இறந்தபின் அவருடைய  கண்களைத் தானமாகக் கொடுத்ததன் மூலம் இன்னொருவரின் வழியாக என்னுடைய அம்மா இந்த உலகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இறப்புக்குப்பின் என்னுடைய உடலையும் தானமாக எழுதிவைத்திருக்கிறேன். இறந்தாலும் நான் வாழ்வேன்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x