Published : 03 Mar 2019 04:15 PM
Last Updated : 03 Mar 2019 04:15 PM

வண்ணங்கள் ஏழு 44: ஆணுக்குள் இருக்கும் பெண் மனம்

பெண்ணின் மனதோடு இருக்கும் ஆண்களைப் பூங்காக்களில், கடற்கரையில், பேருந்தில், ரயில் பயணங்களில், எதிர் வீட்டில் ஏன் நம்முடைய வீட்டிலேயேகூடச் சந்தித்திருக்கலாம். நிறையப் பேர் இவர்களைச் சமூகத்தில் ஒதுக்கி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்களின் மீதுதான் கிளர்ச்சி இருக்கும். சமூகத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் ஒரு வாழ்க்கையும் தங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்காக ஒரு வாழ்க்கையுமாக இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களாக இவர்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.

எண்:10, டவுனிங் ஸ்ட்ரீட் என்ற முகவரி லண்டனில் எவ்வளவு பிரபலமோ அப்படி ஒரு காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்திருந்தது சென்னை, சைதாபேட்டையிலிருந்த சேகரின் வீடு. வெவ்வேறு இடங்களிலிருந்து வீட்டைவிட்டு சென்னையில் கால்பதிக்கும் எண்ணற்ற திருநங்கைகள் இவரின் வீட்டில் அடைக்கலமாயினர்.

இன்றைக்கும் சில திருநங்கைகளின் ஆதார் அட்டைகள் இவரின் முகவரிக்குத்தான் வந்துசேர்கின்றன. தன்பால் ஈர்ப்புள்ள ஆண்களுக்காக 90-களிலேயே ஒரு தன்னார்வ அமைப்பை சென்னையில் தொடங்கியவர் சேகர். ‘சோஷியல் வெல்ஃபேர் அசோசியேஷன் ஃபார் மென் (SWAM)’ என்னும் தன்னார்வ அமைப்பின் மூலம் எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பணிகளை தன்பால் உறவாளர்களான ஆண்களிடம் ஏற்படுத்திவருகிறார்.

சிறுவயதிலிருந்தே பெண் மனதோடு இருந்த சேகருக்கு ஆண்களின் மீதே கவர்ச்சி இருந்தது. இளமையின் வாசலில் இருந்தவருக்கு விதவிதமான ஆண்களுடன் தன்னுடைய பாலியல் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் போக்கு அதிகரித்தது. 90-களில் ஒரு வார இதழில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய ‘எய்ட்ஸ் எரிமலை’ தொடரைப் படித்திருக்கிறார்.

அதில் எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகளாகச் சொல்லப்பட்டவை தன்னிடமும் இருப்பதை உணர்ந்த சேகர், பல ஆண்களோடு பாலியல் தேவைக்காகப் பழகியதில் தனக்கும் இந்த நோய் வந்திருக்குமா என்ற சந்தேகத்தில் அவராகவே எய்ட்ஸ் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோயின் தாக்கம் இருப்பது உறுதியானது.

இதனால் அவருக்குக் கிடைக்கவிருந்த ரயில்வே பணி கிடைக்காமல் போனது. குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை அவராகவே முன்வந்து தீர்மானமாக மறுத்துவிட்டார். நோயின் தீவிரத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் போராட்டத்தோடு, எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரங் களையும் முழுவீச்சில் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தும் பணியில் சேகர் ஈடுபட்டார்.

“சென்னைக்கு வந்திருந்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியான ராபர்ட் அளித்த  நிதி உதவியுடன் சில ஆண்டுகள் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பணியை என்னைப் போன்ற பெண் மனத்தோடு இருந்த ஆண்களின் ஒத்துழைப்போடு நடத்திவந்தேன். அதன் பிறகே டான்சாக்ஸின் நிதி உதவியோடு செயல்படத் தொடங்கினோம்” என்கிறார் சேகர்.

நோயாளியே தந்த விழிப்புணர்வு

“எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பணியைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே தமிழகம்தான் முன்னோடி. தேசிய அளவில் எச்.ஐ.வி. தடுப்பு வாரியங்கள் அமைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே 95-லேயே தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தோன்றிவிட்டது. இதன் தொடக்கக் கால உறுப்பினர்களில் நானும் ஒருவன். தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் பல மாநிலங்களுக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு களப் பணி செய்திருக்கிறேன்.

எச்.ஐ.வி. பாதிப்புக்கு அதிகம் வாய்ப்பிருப்பவர்களாக அடையாளம் காணப்பட்ட லாரி ஓட்டுநர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், திருநங்கைகள் எனப் பலரிடமும் பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையைப் பயன்படுத்த வலியுறுத்துவதே அன்றைக்கு  எய்ட்ஸைத் தடுப்பதற்கான பிரதான பிரச்சாரமாக இருந்தது. அதோடு இந்தியாவில் மிக வேகமாக எய்ட்ஸ்  பரவிவந்த நிலையில், “கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்கும் எங்கள் நாட்டில் எய்ட்ஸ் இல்லை என்று வெளிநாட்டில் போய் சிலர் செய்த பொய்ப் பிரச்சாரத்தால், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதிகள் தடைபட்டன.

அதைச் சரிசெய்யும் நோக்கத்தில் பல வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவில் எய்ட்ஸ் பரவும் உண்மை நிலையை விளக்க வேண்டியிருந்தது.

சட்டத் திருத்தம்

அரசுப் பணியில் இருக்கும் ஒருவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டால் பணி இழக்கும் அபாயம் தொடக்கக் காலத்தில் இருந்தது. இதை எதிர்த்து இந்தியன் நேஷனல் பாசிட்டிவ் நெட் ஒர்க் சார்பாக வழக்கறிஞர் அசோக் கவிராயரை வைத்து வாதாடி, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பணி நீக்கம் செய்யக் கூடாது; மாற்றுப் பணி ஏதாவது கொடுக்க வேண்டும் எனும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தோம்.

எம்.பி.பி.எஸ். பாடத் திட்டத்தில் பெண் மனம் கொண்ட ஆண்களைப் பற்றி ஒரு பாடத்தை வைப்பதற்குப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. சமூகத்தில் எச்.ஐ.வி. தொடர்பான தவறான கருத்தாக்கத்தைக் களைவதில் மருத்துவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதால்தான் இது போன்ற பாடத்திட்டத்தை வைப்பதற்கு வலியுறுத்தினோம்.

பயமும் பரிவும்

பெண் மனதோடு வாழும் ஆண்களின் உலகம் ரகசியமானது. சமூகத்தில் பயம், வீட்டில் பயம், உறவினர்களிடம் பயம், நண்பர்களிடம் பயம். இப்படி வாழ்க்கை முழுவதும் பயத்தோடுதான் வாழ்கிறோம். குடும்பத்தின் வற்புறுத்தலால் திருமணம் என்னும் உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுபவர்களும் உண்டு.

நிறைய திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கும் பெண் மனதோடு இருக்கும் ஆண்களும் காரணம். அவர்களால் பெண்ணோடு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது. அதே நேரம்,  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவதற்குப் பெண் மனதோடு இருக்கும் ஆண்கள் மறைமுகக் காரணமாக இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்தால் திணறும் விழிப்புணர்வு

நாளுக்கு நாள் பெருகிவரும் தொழில்நுட்பத்தின் துணையோடு பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களின் மூலம் இன்றைக்கு இளைஞர்கள் பலர் தங்களின் பாலியல் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அவர்களின் சந்திப்புகளும் பல்வேறு இடங்களில் நடப்பதால், விழிப்புணர்வை அவர்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் பெரும் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதன் விளைவாகத்தான் கடந்த மூன்று ஆண்டுகளில் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கணிசமான எண்ணிக்கையில் கல்லூரி மாணவர்கள் இருக்கின்றனர். எங்கள் தன்னார்வ அமைப்பின் மூலமாகவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு சிகிச்சைக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்” என்கிறார் சேகர்.

டிராக் குயின் வுர்ஸ்ட்

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கொன்ஷிட்டா வுர்ஸ்ட், தன்னையொரு டிராக் குயின் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர். ‘தாடிப் பெண்’ என்று மேற்குலகில் புகழப்படும் இவர், 59-வது ஆண்டு ஈரோவிஷன் பாட்டுப் போட்டியில் வெற்றி வாகை சூடியவர். ‘ரைஸ் லைக் எ ஃபீனிக்ஸ்’ என்ற இவரின் பாடலுக்கு  உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். வெற்றி பெற்றதற்குப் பிறகு இவரிடம் நீங்கள் ஆணா, பெண்ணா, நீங்கள் இதில் எதைச் சொன்னாலும் உங்களின் தோற்றம் அதற்கு மாறாக இருக்கிறதே என்று கேட்டனர்.

vannam-2jpg100 

அதற்கு வுர்ஸ்ட் சிரித்தபடி சொன்ன பதில்:

“நான் எனக்குப் பிடித்த தோற்றத்தில் இருந்துவிட்டுப் போகிறேன். அது என் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தப் போட்டியில் நான் சிறப்பாகப் பாடியதற்குத்தான் இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்கின்றனரே தவிர, என்னுடைய உருவத்துக்காக அல்ல” என்றார்.


(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x