Published : 28 Mar 2019 07:52 PM
Last Updated : 28 Mar 2019 07:52 PM

நேர்காணல்: என்னைப் பெண்ணாக உணர்ந்தேன்! - நடிகர் விஜய் சேதுபதி

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் அதிநாயக பிம்பம் இல்லாத நாயக நடிகர் ஒருவர், தொடர்ச்சியாகவும் பரவலாகவும் கவனத்தைப் பெற்று வருகிறார். பிரேம்குமாரின் ‘96’, மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, பாலாஜி தரணிதரனின்‘சீதக்காதி’, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ என முக்கிய இயக்குநர்களின் கவனத்துக்குரிய நடிகராக விஜய் சேதுபதி தொடர்ந்து வருகிறார். அவருடனான நீண்ட உரையாடலின் ஒரு பகுதி…

ஒரு நடிகராக நடிப்பு குறித்த உங்களது அணுகுமுறை என்ன?

முன்பெல்லாம் நடிக்கப் போகும்போது திட்டமிட்டுவிட்டுப் போவேன். எந்தக் காட்சியை எப்படிப் பண்ணணும், எவ்வளவு நேரம் பண்ணலாம், உணர்ச்சி கரமான காட்சிகளில் எப்படியெல்லாம் நடிக்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவேன்.

இப்போது அதெல்லாம் போய்விட்டது. ஷூட்டிங் போய்ட்டு, அந்தக் காட்சிக்கு அங்கு என்ன தோணுதோ, அப்படியே பண்ணிடுவேன். முன்பு ஃபார்முலா மாதிரி ஒன்று இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. கூடுமானவரை இயல்பா இந்தக் காட்சியை எப்படிப் பண்ண முடியும் என்றுதான் யோசிக்கிறேன்.

பயிற்சி அல்லது முன் அனுபவம் இல்லாமல் நன்றாக நடிக்க முடியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் என்னோடு ஒரு குழந்தை நடித்திருக்கிறாள். அந்தக் குழந்தை நடிப்புக்கு என்ன பயிற்சி எடுத்திருப்பாள்? ஒரு காட்சியைப் பற்றிப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘இதற்கு நான் என்ன பண்ணணும்’ என்று இயக்குநரிடம் கேட்டுக் கேட்டு நடிக்கிறாள். எல்லாம் உள்வாங்கிக்கொள்வதில் இருக்கிறது.

உங்களுக்குத் தெரியாமல், ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் ஏதாவது ஒன்று உங்களுடைய மனதுக்குள் போய்க்கொண்டே இருக்கும். சிலருக்கு அது சொல்லுவதன் மூலமாகத் தெரியும், சிலருக்கு அது தானாகவே வெளிப்படும்.

மற்றவர்களின் ஒன்றிரண்டு படங் களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு, உங்களது ஒவ்வொரு படத்துக்கும் இருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?

2016-ல் என்னைச் சுற்றியிருந்த அத்தனை பேருமே ‘நீ செய்வது ஜனங்களுக்கு போரடித்துவிடும்’ என்று சொன்னார்கள். எனக்கு அதில் ஒரு சந்தேகமிருந்தது. என் படங்கள் அனைத்துமே ஒரே கதையம்சத்துடன் இல்லை. வெவ்வேறு கதைகளில்தான் நடிக்கிறேன். ஒவ்வொன்றும் சுவாரசியமாக இருந்தாலே போதும் என்று என் மனசு சொன்னது.

கதைகளை, கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள்?

உங்களுக்கு 50 மனிதர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர்களுடன் 10 நாள் பழகினீர்கள் என்றால், உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று ஒரு 10 பேரைத் தேர்ந்தெடுக்க மாட்டீர்களா? ஆனால், 50 பேருமே உங்க மனதுக்குப் பிடித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை இல்லையா?. இந்தக் கோணத்தில்தான் கதைகளையும் தேர்வு செய்கிறேன். என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச கதையை மட்டும் பண்றேன். ஒரு கதையை இதற்காகப் பண்ணினேன் என்று ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.

ஒரே மாதிரி நடிக்கிறீர்கள் என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கேள்வி என்னை ரொம்ப சந்தோஷப்படுத்துது. ஏனென்றால், இந்தக் கேள்வியை என்னிடம் மட்டுமே திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அவர்களுக்கு மற்றவர்களிடம் கேட்கணும் என்றே தோன்றவில்லை. இதுவே எனக்குப் பெருமைதான். இதற்கான மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ‘96’ பார்த்துவிட்டு, உங்களை வேற மாதிரி பார்த்தேன் என்றார்கள், சந்தோஷப்பட்டேன்.

அதேபோல், விமர்சனத்தை ஒரு கருத்து என்ற அளவில் மட்டுமே பார்க்கிறேன். சுட்டிக்காட்டப்படும் தப்புகளைக் கருத்தில்கொள்வேன். தவறு எங்கே என்று யோசித்துப் பார்த்து, அதைச் சரிசெய்ய முற்படுவேன். விமர்சனம் செய்வது சம்பந்தப்பட்டவர்களின் சுதந்திரம்.

எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறீர்கள். ஒரு நடிகராக உங்களுடைய இந்த அணுகுமுறையை எவ்வளவு காலம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கறீர்கள்?

வெற்றி, தோல்வி என்னிடம் இல்லை. அது யாருடைய கன்ட்ரோலிலும் இல்லை. அறிவைப் பயன்படுத்தி ஒரு வேலை பண்றோம். உங்களுடைய அறிவில் ஏற்படும் வளர்ச்சியைப் பொறுத்து, உங்களுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்துக்குப் போகும்.

வயது, தோற்றம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத நடிகராக இருக்கிறீர்கள். இதை மீறி முன்னணி நட்சத்திரமாக இருப்பது எப்படிச் சாத்தியமாகிறது?

எதற்காக மறைக்கணும். மற்றவர்கள் என்ன காரணத்தால் வயதை மறைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. மக்களைப் பொறுத்தவரை நான் ஒரு நடிகன், நடிக்கிறேன். வயதைச் சொல்லிவிட்டால் என் நடிப்பை மட்டும் மக்கள் பார்ப்பார்கள். நான் வயதை மறைத்தால், அதைப் பற்றித் தேட ஆரம்பித்து விடுவார்கள். வயதை வைத்து யாரும் படம் பார்க்க வருவதில்லை. உள்ளடக்கம் மட்டும்தான் முக்கியம்.

திரையில் இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கவே மாட்டேன், இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என்று ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா?

பெண்களை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று இருக்கேன். பெண் களைக் கவர வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தச் செயல் தவறு என்று மனதார நம்புறேன். பெண்மை போற்றப்பட வேண்டியது. இவ்வுலகில் பெண்ணே முதன்மை. அதேபோல் குழந்தைகளை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன்.

திருநங்கைகள் குறித்து...

சமூகத்தில் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். அது மிகவும் கொடூரமானது. சமூகத்தில் உடன் இருப்பவர்களே அவர்களை மிகவும் கேவலமாகப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறபோது வருத்தமாக வருகிறது. அவர்களுடைய ஒட்டுமொத்த சமூகமே நிராகரிக்கப்படும்போது, அவர்களுக்கு மனவலி எப்படியிருக்கும் என எண்ணிப் பாருங்கள். நிஜ வாழ்க்கையில் அவர்களை மிகவும் மதிக்கிறேன். அவர்கள் சுயநலமற்ற வர்கள். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துபவர்கள். அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.

நீங்கள் திருநங்கையாக நடித்திருக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அப்போது எப்படி உணர்ந்தீர்கள்?

முதலில் ஷில்பா கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ளவில்லை. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். மறுபடியும் படப்பிடிப்பு தொடங்கினால் என்னை வைத்துத்தான் எடுப்பேன் என்று சத்தியம் செய்யுங்கள் என இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் கண்டிப்பாக என்றார். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோதுகூட, நிறைய டேக் வாங்கிக்கொண்டே இருந்தேன்.

அப்போது இணை தயாரிப்பாளர் எழில்மதிதான் காலை ஒடுக்கிவைத்து எப்படி நிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணாக உணர ஆரம்பித்து, கதாபாத்திரத்துக்குள் சென்றேன். அப்போது பெண்மை எவ்வளவு அழகானது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்தக் கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்களுக்கு.

திருநங்கை கதாபாத்திரம் என்பதற்காக மட்டும் இப்படத்தில் நடிக்கவில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் குணங்கள் என்னைப் பெரிதாகக் கவர்ந்தன. தினமும் வீட்டிலேயே வயிறு, கை, கால்களுக்கு எல்லாம் மேக்கப் போட்டுக்கொண்டுதான் திருநங்கையாக மாறினேன். அந்த கதாபாத்திரம் என் மகளுக்குப் பிடிக்கவே இல்லை. அவள் என்னை அப்படிப் பார்க்க விரும்பவில்லை. ஒருமுறை அழுதேவிட்டாள்.

இளைஞர்கள் எல்லாரும் அரசியல், அரசியல் கட்சிகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் இளைஞராக இருந்தபோது அரசியல் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருந்தீர்கள்?

கல்லூரியில் படிக்கும்போதுகூட அரசியல் பற்றி எனக்குத் தெரியாது. இப்போ தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். எனக்கு அன்று தெரியவில்லை. நிறைய விஷயங்களை நான் உணர்வதற்குள் வாழ்க்கை வேறாக மாறிவிட்டிருந்தது. எதற்குள்ளும் மாட்டிக்கொள்ளாதீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் உணரத் தொடங்கும் அனைவருக்குமே வாழ்க்கை புதுப்பிக்கப்படும். அதற்கு நானே உதாரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x