

தேசத்தின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனம் ரயில்வேதுறை. இதில் பிளஸ் 2 படிப்பை அடிப்படைக் கல்வித் தகுதியாகக்கொண்ட இளநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை நேரக் காப்பாளர், ரயில் எழுத்தர், வணிகவியல் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர் ஆகிய பதவிகளில் 10,628 காலிப்பணியிடங்களும், பட்டப் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட போக்குவரத்து உதவியாளர், சரக்குக் காப்பாளர், முதுநிலை வணிகவியல் மற்றும் பயணச்சீட்டு எழுத்தர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலைக் கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை நேரக்காப்பாளர், வணிகவியல் உதவியாளர், நிலைய மேலாளர் ஆகிய பதவிகளில் 24,649 காலிப்பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
பிளஸ் 2 கல்வித் தகுதி உடைய பதவிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. பட்டப் படிப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்ட பதவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 33 வரை.
மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகள், மாற்றுத்திற னாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். கூடுதலாக தட்டச்சர் பணிக்குத் தட்டச்சுதேர்வும், நிலைய மேலாளர், போக்குவரத்து உதவியாளர் பதவிகளுக்குக் கணினியில் திறனறிவுத் தேர்வும் (Aptitude Test) நடத்தப்படும். எந்தப் பதவிக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது.எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு என இரு தேர்வுகள் இருக்கும். இரு தேர்வுகளுமே கணினி வழியில் நடத்தப்படும்.
முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு, அடிப்படைக் கணிதம், ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண் 100. தேர்வு நேரம் 90 நிமிடங்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண் கழிக்கப்படும். 2-வது தேர்வில் மேற்குறிப்பிட்ட அதே 3 பாடங்களில் இருந்து 120 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 120. தேர்வு நேரம் 90 நிமிடம்.
தகுதியுள்ள நபர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இருதேர்வுகளுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.