Last Updated : 12 Mar, 2019 12:38 PM

 

Published : 12 Mar 2019 12:38 PM
Last Updated : 12 Mar 2019 12:38 PM

தமிழில் தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்துவோம்!

‘என்னிடம் சொன்னால் அதை மறந்துவிடுவேன், சொல்லிக்கொடுத்தால் நினைவில் வைத்துக் கொள்வேன், ஈடுபடும்போது கற்றுக்கொள்வேன்’ என்றார் அமெரிக்க அறிவியலாளரும் அரசியல் அறிஞருமான பெஞ்சமின் பிராங்கிளின்.

தலையும் வாலும் புரியாமல் ஒரு கருத்தியலை வறட்டுத்தனமாகப் படிக்கும்போது அலுப்புத் தட்டும். அதே ஒன்றின் பின்புலத்தை, காரண காரியத்தைப் புரிந்து படித்து அதில் ஈடுபடும்போது அங்கே கற்றல் சாத்தியப்படும்.

இதை உணர்ந்து தன்னுடைய புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் எழுதியிருக்கிறார் பாலாஜி. பொறியியல், கணினி அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்ற பிறகும் அத்துறை சார்ந்த அறிவும் திறனும் நம் மாணவர்களிடம் இல்லை என்ற குறைபாட்டைப் போக்க ‘எலக்ட்ரானிக்ஸ்’, ‘எலக்ட்ரிகல்’, ‘டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்’ – 4 பாகங்கள், ‘மைக்ரோபிராஸசர்’ – 2 பாகங்கள், ‘கண்ட்ரோலர்’, ‘மின் இணைப்புகள்’, ‘C புரோகிராமிங்’, ‘எம்பெடெட் சிஸ்டம்’ உள்ளிட்ட பொறியியல், கணினி அறிவியல் தொடர்பாக வெவ்வேறு கருத்தியல்களை எளிய தமிழில் புத்தகமாக பாலாஜி எழுதியிருகிறார். இவர் எழுதிய புத்தகங்கள், ‘கம்ப்யூட்டர் மிராக்கில்ஸ்’ என்ற தலைப்பின்கீழ் ஷார்க் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இலவசப் பயிலரங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கூத்தனூர் கிராமத்தில் பிறந்த இவர் 1986-ல் கரக்பூர் ஐ.ஐ.டி.-ல் எம்.டெக். பட்டம்பெற்று எச்.சி.எல். நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தனது பணிவாழ்க்கையைத் தொடங்கியவர். இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளிலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியாவிட்டாலும் தன்னுடைய 30 ஆண்டுகால மின்னணுத் துறை அனுபவங்களைப் புத்தகங்களாக எழுதிவருகிறார். வெவ்வேறு கருத்துகள் குறித்தும் துறைசார்ந்த சந்தேகங்கள் குறித்தும் தெளிவுபெற உதவும் ‘Quora.com’ இணையதளத்தில் இவரை 25 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இதுபோக ஞாயிறுதோறும் காலை 9 மணி தொடங்கி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் இலவசமாகப் பொறியியல், கணினி அறிவியல் பயிலரங்கத்தைப் பள்ளி மாணவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் நடத்திவருகிறார்.

புரோகிராமிங் புரிபட

ஆங்கிலமோ இந்தியோ தெரியவில்லை என்றாலும் ‘C’ மொழி புரோகிராமிங் தெரிந்திருந்தால்போதும் இன்றும் ஐ.டி. துறையில் வேலை நிச்சயம். அன்றாட வாழ்க்கை சார்ந்த உதாரணங்களின் மூலம் ‘C’ மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வழிமுறையை இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றான ‘C புரோக்ராமிங்’ நூல் விளக்குகிறது.

‘C’ மொழியைப் படிக்க என்ன தேவை? முதலில் கணினியைப் புரிந்துகொள்ள வேண்டும். கணினி என்ற சொல்லை நாம் பொத்தாம்பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அத்துறை நிபுணர்கள் கணினியை அதன் பாகங்களின் அடிப்படையில்தான் பிரித்துப் பேசுகிறார்கள். உதாரணத்துக்கு, ‘மைக்ரோபுராஸசர்’-ஐ எடுத்துக்கொள்வோம்.

‘மைக்ரோபுராஸசர்’-க்குத் தமிழ், ஆங்கிலமெல்லாம் தெரியாது. அதனுடைய மொழி எண்கள் மட்டுமே. ஆக, ‘C’ மொழியில் ஒரு புரோகிராம் தட்டச்சு செய்யப்பட்டால் அதைக் கணினிக்குள் இருக்கும் ‘மைக்ரோபுராஸசர்’-க்குப் புரியவைக்கும் வேலையை ஒரு மொழிபெயர்ப்பாளர் போல கம்பைலர் என்ற மென்பொருள் செய்யும். இவற்றை விரிவாகத் தெரிந்துகொள்ள இப்புத்தகம் வழிகாட்டுகிறது.

முழுவதுமாகக் கற்றுக்கொண்ட பிறகே புரோகிராமிங் எழுதத் தொடங்குவதைக் காட்டிலும் அவ்வப்போது படித்தவற்றைச் சோதித்துப் பார்க்கும்படி இடையிடையில் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை கணினி மொழிகள் தொடர்பாக மாணவர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க உதவும்.

டிஜிட்டல் மயத்தின் மையம்

டிஜிட்டல் டிவி, டிஜிட்டல் பரிவர்த்தனை, டிஜிட்டல் பணம் என எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அத்தகைய டிஜிட்டல் என்பதன் தொழில்நுட்பப் பொருளைப் புரிந்துகொள்ள ‘டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ்’-ன் நான்கு பாகங்கள் கைகொடுக்கின்றன. குறிப்பாக, அதன் நான்காம் பாகமான ‘மெமரி’யில் SAM, RAM, ROM உள்ளிட்ட அனைத்துச் சிக்கலான கருத்துகளும் சுவாரசியமான உதாரணங்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

“நம்முடைய அன்றாடத்துடன் தொடர்புடைய ரயில் சேவை முதல் விவசாயம்வரை அத்தனைக்குள்ளும் எலக்ட்ரானிக்ஸின் பயன்பாடு உள்ளது. ஆனாலும் 40 ஆண்டுகளுக்கு முந்தைய சர்க்கியூட், வயர், சால்டரிங்க் சார்ந்தவைதான் எலக்ட்ரானிக்ஸ் என்று இன்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எலக்ட்ரானிக்ஸ் என்பது இன்று மென்பொருளாக மாறிவிட்டது. மைக்ரோபிராஸசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதிவேகமாக இத்துறை வளர்ச்சி கண்டது. இதுவே டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸின் மூலக்கதை. இன்றைய தேதியில் மென்பொருள் தெரியாமல் எலக்ட்ரானிக்ஸ் துறைக்குள் நுழையவே முடியாது. அதேநேரத்தில் கொஞ்சம் கணிதமும் அவசியம்.

ஆகையால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைக் கணிதம் விரல்நுனியில் இருக்கும்பட்சத்தில், புரோகிராமிங் புரிபட்டால் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸை பி.இ. பட்டதாரி மட்டுமல்ல 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கூடத் துல்லியமாகக் கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் பாலாஜி.

thozhilnutpam-2jpgபாலாஜிright

ஏன் வேலை கிடைப்பதில்லை?

“பி.இ. படித்த மாணவர்களுக்கே போதுமான துறைசார்ந்த அறிவோ தொடர்பாற்றல் திறனோ இல்லாததால்தான் வேலையின்றி அவர்கள் திண்டாடுவதாகத் தொடர்ந்து சொல்லப்படுகிறதே” என்று கேட்டால், “சிக்கல் மாணவர்கள் இடத்தில் இல்லை. 30 வருடங்களுக்கு முன்னால் நான் படித்த அதே பாடத்திட்டம்தான் இன்றும் எம்.ஐ.டி., ஐ.ஐ.டி. உட்பட எல்லாப் பொறியியல் கல்லூரிகளிலும் பின்பற்றப்பட்டுவருகிறது.

கணித, இயற்பியல் அடிப்படைகள் தேவைதான். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்டிருக்கும் அதிவேக மாற்றத்துக்கு நம்முடைய கல்வித் திட்டம் தன்னைத் தகவமைத்துக்கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மையான சிக்கல். இவற்றை மனத்தில் நிறுத்தித்தான் நான் புத்தகங்கள் எழுதத் தொடங்கினேன்” என்கிறார்.

மேலும், ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாமல் இருப்பது தொழில்நுட்பத் துறையில் ஒருபோதும் பிரச்சினையே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறார். “நம்முடைய கல்லூரிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பொறியியல், கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் உலகின் தலைசிறந்த கல்வியாளர்கள் எழுதிய புத்தகங்கள்தாம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், ஏன் நம்முடைய பொறியியல் மாணவர்களுக்குப் பி.இ. பட்டம் பெற்ற பிறகும் எதுவுமே தெரியவில்லை? ஏனென்றால் தொழில்நுட்பத்தைத் தாய்மொழியில்தான் கற்றுக்கொள்ள முடியும். ஜெர்மனி, ஜப்பான் போன்ற தொழில்நுட்பரீதியாக உச்சத்தில் இருக்கும் நாடுகள் தொழில்நுட்பத்தைத் தங்களுடைய தாய்மொழியில்தான் கற்பிக்கின்றன.

நம்முடைய மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் வசமானால் ஆங்கிலம் போதாமை ஒரு குறையே அல்ல. நான் எம்பெடட் சிஸ்டம்ஸ் துறையில் அமெரிக்காவில் பணிபுரிந்தபோதுகூட எனக்குத் தெரிந்ததெல்லாம் தொழில் மட்டுமே.

ஆங்கிலம் ஓரளவுக்குத்தான் தெரியும். தமிழில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதோடு ஒவ்வொரு எலக்ட்ரானிக் மாணவரும் வீட்டிலோ விடுதி அறையிலே டிஜிட்டல் லேப் வைத்து இடைவிடாது பயிற்சி மேற்கொண்டால் இத்துறையில் நிச்சயமாகச் சாதிக்க முடியும்” என்கிறார் பாலாஜி.

தான் கற்றதையும் பெற்றதையும் ஒருங்கே சேர்த்துத் தன்னுடைய புத்தங்களில் சுவாரசியமான உதாரணங்களின் வழியாக வாசகர்களுக்கு பாலாஜி கடத்தி இருக்கிறார். இவருடைய பேச்சும் எழுத்தும் தமிழிலும் தொழில்நுட்பத்தைக் கையகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x