Published : 30 Mar 2019 05:34 PM
Last Updated : 30 Mar 2019 05:34 PM

விவாதக் களம்: பெண்கள் துணிந்து நிற்க வேண்டும்

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து மார்ச் 24 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். இதுபோன்ற குற்றங்கள் நடக்கும்போதெல்லாம் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் சமூகம், ஆண்களைக் கண்டுகொள்வதில்லை என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தோம்.

பெண்களின் அந்தரங்கத்தை ஆயுதமாக வைத்து ஆண்கள் அவர்களை மிரட்டும்போது அப்படியான சூழலையை எப்படி எதிர்கொள்வது எனவும் கேட்டிருந்தோம். ஆண்களை எப்போதும் உயர்த்திப் பிடித்துப் பெண்களைக் கூட்டுக்குள் முடங்கச் சொல்லும் ஆணாதிக்கச் சிந்தனையை அனைவரும் சுட்டிக்காட்டினர். பெண்களுக்கு அறிவுரை சொல்வது சரிதான் எனச் சிலர் வாதிட்டிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு…

பாலியல் தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து பெண்களே குற்றவாளிகளாக்கப் படுவதற்கும் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண்கள் பெருமிதத்துடன் வலம்வருவதற்கும் கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் சமூகம் முழுவதும் புரையோடியிருப்பதே முக்கியக் காரணம். பெண்ணின் அந்தரங்கம் பொதுவெளியில் பகிரப்படும்போது அதை வெளிப்படுத்தியவனை விட்டுவிட்டு அந்தப் பெண்ணையே கேலிப் பொருளாக்குகிறோம்.

அந்தரங்கத்தை வெளிப்படுத்தியவனைப் போலவே, அதைப் பார்த்து ஏளனம் செய்பவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பெண்கள் இதை அவமானமாகக் கருதாமல், துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் வெகுண்டு எழுந்தால்தான் இதுபோன்ற அவலங்கள் தீரும்.

- ர. ரஜினி பியூலா ஷோபிகா, இளங்கலை ஆங்கிலம், செந்தாமரை கல்லூரி. வடபழஞ்சி, மதுரை.

சிறுவயதில் இருந்தே மகளைப் போலவே மகனிடமும் பள்ளியில் என்ன நடந்தது என்பதைத் தினமும் கேட்கலாம். இணக்கமான விசாரிப்பைப் பழக்கப்படுத்தினால், நாளடைவில் அது வழக்கமாகித் தவறுகள் தவிர்க்கப்படும். அத்துடன், மகனின் நண்பர்கள் தவறான வழியில் செல்வது தெரியவந்தால், அவர்களின் பெற்றோரிடம் விஷயத்தை விளக்கி ஆரம்பத்திலேயே சரிசெய்து விடலாம். மகளுடன் சேர்த்து மகனின் நடவடிக்கைகளிலும் அக்கறைகொள்ளுங்கள் தாய்மார்களே.

- என்.கோமதி, பெருமாள்புரம், நெல்லை.

எந்தக் குற்றத்துக்கும் பெண்ணையே பொறுப்பாளியாக்கும் இந்தச் சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்பதை முதலில் களைய வேண்டும். பெண் குழந்தைக்குத் தேவை தன்னம்பிக்கையும் விழிப்புணர்வுமேயன்றி நகையோ சொத்தோ இல்லை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். பெண்கள் பேசினாலே காதல், தொட்டாலே காமம் என்ற நினைப்பில் இருக்கும் ஆண்களின் சிந்தனை மாற வேண்டும்.

ஆணைப் பெற்ற பெற்றோருக்குத்தான் பொறுப்பும் கடமை உணர்வும் அதிகம் இருக்க வேண்டும். தடைகளைத் தாண்டி, பெண் சமூகம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்தக் காலப் பெண்களை மரியாதையுடன் நடத்தும் விதத்தை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். பெண் பிள்ளைகளைச் சமூகத்தைப் புரிந்து கொண்டவர்களாக சுய மரியாதை உணர்வோடு வாழப் பழக்க வேண்டும்.

- மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

பெண்கள் ஒரு சமுதாயத்தின் ஒளியைப் போன்றவர்கள் என்றும் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் ஆண் குழந்தைகளுக்குச் சொல்லித்தந்து வளர்க்க வேண்டும். ஒரு வீட்டில் கணவன், தன் மனைவியை மதித்தால் அதைப் பார்த்து வளரும் மகனும் அம்மாவை மதிப்பதுடன் மற்ற பெண்களையும் மதிப்பான்.

- உஷா முத்துராமன், திருநகர்.

பாலியல் ரீதியான எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் சமூகத்தின் விரல்கள் முதலில் பெண்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. பொள்ளாச்சி சம்பவத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக அடக்கியே வைக்கப்பட்ட பெண்மை இப்போதுதான் சுதந்திரக் காற்றைச் சற்றே சுவாசிக்கிறது.

இதுபோன்ற பாலியல் வன்முறைகளால் பொதுவெளியில் பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பாலியல் சம்பவத்தால் பெண்கள் மட்டுமே ‘பாதிப்புக்கு’ உள்ளாகிறார்களா? ஆண்களின் கற்புக்குப் ‘பாதிப்பு’ இல்லையா? அல்லது ஆண்களுக்குக் கற்பே இல்லையா? கற்பு என்பதற்கான வரையறை எது?

குடும்பத்தில் அன்பு முறையாக, பாலினப் பாகுபாடின்றிக் காட்டப்பட்டிருந்தால் வெளியே யாரையோ நம்பிப் போய் பிரச்சினைகளில் சிக்கி, எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதற்காகப் பெண்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் மூலையில் முடங்க வேண்டியதில்லை. பெண்களை மட்டுமே நோக்கி நீள்கிற விரல்களையும் வார்த்தைக் கணைகளையும் சமூகம் சற்றே மடக்கி வைக்கட்டும்.

ஆண் குழந்தைகளை வளர்க்கிறபோதே பெண்களைச் சகோதரியாக, தோழியாக, சக மனுஷியாக மதிக்கக் கற்றுத்தர வேண்டும். அதற்கு முதலில் குடும்பத்தில் உள்ளவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். நம்மைப் பார்த்துத்தான் குழந்தைகள் வளர்வார்கள் என்பதை நாம் எப்போதுமே கவனத்தில்கொள்ள வேண்டும்.

பெண்கள் ஆடை அணியும் விதம் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது. அப்படியெனில் சிறு குழந்தைகளும் முதியவர்களும் ஏன் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்? ஆண்களின் பார்வையும் எண்ணங்களும் நேர்மறையாக இருக்க வேண்டும். சமுதாயமும் பெண்கள் ஏதேனும் புகார் அளித்தால் அதைக் கண்டபடி விமர்சிக்காமல் அந்தப் பிரச்சினையிலிருந்து அவர்களை விடுவிக்க முன்வர வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில் பெண்ணின் அந்தரங்க ஒளிப்படமோ மார்ஃபிங் படமோ வெளியே வந்தால் அச்சத்தால் முடங்கிவிடவோ தவறான முடிவை எடுக்கவோ கூடாது. அந்தச் சம்பவத்தைக் கடந்துசெல்லும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குடும்பமும் அந்தப் பெண்களுக்குத் துணைநிற்க வேண்டும்.

அவர்கள் அந்நிகழ்விலிருந்து மீண்டுவரத் துணைபுரிய வேண்டும். சமுதாயமும் இதுபோன்ற நிகழ்வுகளில் பெண்களின் தவறு ஏதுமில்லை என்பதை உணர வேண்டும். ஆறுதலாக இல்லாவிட்டாலும் வார்த்தைகளால் அவர்களைக் கூறுபோடாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் பெண்களை மதிக்கப் பழக வேண்டும். உடல் அரசியல் என்பதைப் புறக்கணிக்க நாம் முதலில் தெரிந்துகொள்வோம். பெண்ணைப் பொருளாக, சதையாகப் பார்க்காமல் உயிராக, உணர்வாகப் பார்க்க வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு கிடைக்க அனைவரும் சேர்ந்து போராட முன்வர வேண்டும்.

- தேஜஸ், காளப்பட்டி, கோவை.

ஆணாதிக்க நாடு இது. அதனால்தான் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆண்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, நடவடிக்கை எடுக்கக் காவல் துறையே தயங்குகிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ‘மீடூ’ இயக்கமும் காணாமல் போய்விட்டது. தங்கள் அந்தரங்கத்தைக் காக்கும் உரிமையைப் பெற மீண்டும் ‘மீடூ’வைக் கையில் எடுக்கப் பெண்கள் துணிவோடு முன்வர வேண்டும்.

- கே. கனகவிஜயன், மதுரை.

தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியே சொன்னால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும், குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பது போன்ற பெண்களின் பயமே சமூக விரோதிகளின் பலமாகிவிடுகிறது. குடும்பத்தினரும், ‘பொம்பளையா அடக்கமா இல்லாம குடும்ப மானத்தை இப்படி வீதிக்குக் கொண்டுவந்திட்டியே’ என்று புலம்புவார்களே தவிர, ‘நாங்கள் துணை இருக்கிறோம்’ என்று ஆறுதல் சொல்லி அரவணைத்துத் தைரியம் சொல்லத் தவறிவிடுகின்றனர்.

- ராகினி வாசுதேவன், கூடுவாஞ்சேரி.

அன்பு மகள் நப்பின்னைக்கு,

படிப்பு காரணமாக எங்களைப் பிரிந்து நீ தொலைதூரம் சென்றாலும் எங்கள் சிந்தனைகள் உன்னையே வட்டமிடுவதை நீ அறிவாய். உனக்கும் அப்படித்தான் இருக்கும். காரணம் உன்னிடம் நானும் உன் அன்னையும் தோழமையுடன் பழகியதும் நீயும் உன் உடல், மனம் சார்ந்த கேள்விகளை எங்களிடம் கேட்டுத் தீர்வுகண்டதும் எங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

அங்கே உன் தோழிகள் விதவிதமாக உடுத்துவதை எழுதினாய். உனக்கு எது வசதியாக இருக்கிறதோ, அந்த உடையே உனக்குப் பொருத்தமானது. ஆனால், ‘ஆண்களின் சமூக உடையில் உடல் தெரிவது மாதிரி இருப்பதில்லை. ஆனால், பெண்கள் கால், கைகள், முதுகு, வயிறு, இடுப்பு, மார்பு ஆகியவை தெரிவது மாதிரி உடுத்துவதில் என்ன சௌகரியம் இருக்கிறது?’ என்று நான் உன் அன்னையிடம் கேட்டு கிண்டல் செய்தது உனக்கு நினைவில் வரும்.

உன் வகுப்புத் தோழர்கள் உனக்கு நண்பர்களாக இருப்பதும் அவர்கள் பால் பேதமின்றிப்  பழகுவதும் பேசுவதும் அறிந்து மகிழ்ச்சி. ஆசை வார்த்தைகள் கூறும் ஆணின் உள் நோக்கத்தை உணராதவள் அல்ல நீ. இருப்பினும், அப்படியொரு சந்தர்ப்பம் வந்தால் துணிவுடன் போராடு.

நீ பணிந்துபோகும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களைச் சட்டத்துக்கு முன்னாலும் சமுதாயத்திற்கு முன்னாலும் நிறுத்தத் தயங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும். என்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி உனக்கு வரலாம். ஒரு பெண்ணின் ஜென்மக்கடன் திருமணம் செய்துகொள்வது அன்று. ரெளத்திரம் கொண்ட சமுதாயப் போராளியாக இருப்பதே பெண்ணுக்கு அழகு.

அன்பு அப்பா, - ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x