Last Updated : 17 Mar, 2019 12:54 PM

 

Published : 17 Mar 2019 12:54 PM
Last Updated : 17 Mar 2019 12:54 PM

தேர்தல் களம்: இது பெண்களின் தேர்தல் அறிக்கை

டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பப் புரட்சியின் காலத்தில் பெண்களின் பிரச்சினைகளும் அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளும் கூடுகின்றனவே தவிர குறையவில்லை. குறிப்பாக,. இந்தியாவில் பள்ளி இடைநிற்றல், வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது, அரசியல் அரங்கில் மிகக் குறைவான பிரதிநிதித்துவம், நாளுக்கு நாள் புதுப் புது வடிவங்களில் அதிகரித்துவரும் பாலியல் கொடுமைகளும் அவை சார்ந்த வன்முறையும் தொடரும் சூழலில் இவற்றை எதிர்த்துப் பல காலமாகப் போராடிவரும் 40 பெண்கள் அமைப்புகள் 2016-ல் ‘அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் அணிதிரண்டன.

இந்தக் கூட்டமைப்பு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வெள்ளாளர் தெருவில் மார்ச் 12 அன்று ‘உலக மகளிர் தினப் பொதுக்கூட்டம்’ நடத்தியது. ‘உலக மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூலை எழுதிய மூத்த பத்திரிகையாளரும் மார்க்ஸிய ஆய்வாளருமான இரா.ஜவஹர் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டார். அதோடு 17-வது மக்களவைத் தேர்தலுக்கான ‘பெண்கள் தேர்தல் அறிக்கை’யும் அன்று வெளியிடப்பட்டது.

பெண்களுக்கான கோரிக்கைகள்

இந்தத் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 74 கோரிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போதைய நிலையில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 62 இடங்களும் இந்தியா முழுவதும் உள்ள 4030 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 311 இடங்களும் மட்டுமே பெண் உறுப்பினர்களால் நிரப்பப்பட்டுள்ளதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அத்தியாவசியத்தைப் புரிந்துகொள்ள இந்தத் தகவலே போதும். 2005-ல் 35 சதவீதமாக இருந்த பெண்களின் வேலைவாய்ப்பு வீதம் 2018-ல் 26 சதவீதமாகக் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டைக் கோருகிறது இந்த அறிக்கை.

நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு, பெண்களுக்கான சிறப்புக் கூறு திட்ட நிதி ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிப்பது, வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளைக் கைவிடுதல், மத்திய - மாநில அளவிலான மகளிர் ஆணையங்களின் செயல்பாட்டுக்குப் போதுமான நிதி ஒதுக்கீட்டை உறுதிசெய்தல் ஆகிய கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. பெண்ணுறுப்பைச் சிதைக்கும் பழக்கம் சென்னையில் வசிக்கும் போரா இஸ்லாமியர்கள் சிலரிடம் நிலவிவருகிறது என்பது பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். இந்தப் பழக்கத்தை உடனடியாகத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று இந்தப் ‘பெண்கள் அறிக்கை’ கோருகிறது. சைபர் கிரைம் குற்றங்களைக் குறைப்பதற்கான சிறப்புச் சட்டங்கள், வணிக அடிப்படையிலான வாடகைத் தாய் முறை ஒழிப்பு போன்ற நவீன காலப் பிரச்சினைகளுக்கும் தொடர்வண்டிகளில் பெண்களுக்கான இருக்கைகளையும் பெட்டிகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட பெண்களின் அன்றாட வாழ்வில் தாக்கம் செலுத்தும் கோரிக்கைகளுக்கும் இந்த அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.

கருவிலேயே பாலினம் அறிவதைத் தடுக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்தி பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த அறிக்கை முன்வைக்கிறது. 21-ம் நூற்றாண்டில் பெண்களுக்கான கோரிக்கைகளில் ஒன்றாக இது தொடர்வது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியது.

அடிப்படை மாற்றங்கள்

பெண்களுக்கான சட்டமியற்றல், கொள்கை வகுப்பு ஆகியவற்றில் ஏற்பட வேண்டிய அடிப்படை மாற்றங்களைக் கோரும் கோரிக்கைகள் இடம்பெற்றிருப்பது இந்த அறிக்கையின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்று. அறிக்கைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முதல் கோரிக்கையே ‘ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையின் (CEDAW) கண்ணோட்டத்தில் இந்திய நாட்டின் சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் போன்றவை மாற்றிமைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். மத்திய அரசு பெண்கள் மேம்பாடு குழந்தைகள் மேம்பாடு இரண்டையும் ஒரே துறையாக இணைத்துக் கையாள்கிறது. இந்தத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் 90% குழந்தைகள் நலனுக்கே செலவிடப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் மேம்பாடு எனத் தனித் தனி துறைகளாகப் பிரித்து இரண்டுக்கும் போதுமான நிதி ஒதுக்கி அவை முறையாகச் செலவிடப்பட வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கைகளில் ஒன்று.   

பெண்கள் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் பற்றிப் பேசும்போது பெண் கைதிகளுடன் வாழ நேரும் ஆறுவயதுக்குட்பட்ட குழந்தைகள் சுதந்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

அனைவருக்குமான அறிக்கை

பெண்களுக்காகப் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கை பெண்களுக்கான கோரிக்கைகளுடன் சுருங்கிவிடவில்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், குழந்தைகள், திருநர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியினர் எனப் பெண்களைப் போல் பலவித ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் அனைத்துப் பிரிவினருக்கான கோரிக்கைகளும் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, தேர்தல் சீர்திருத்தங்கள், மாநிலங்களின் உரிமைகள், கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் ஆகிய துறைகள் சார்ந்த கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கெதிரான சட்டங்களில் யார் குழந்தை என்பதற்கான வரையறையில் இருக்கும் முரண்பாடுகளை விரிவாகக் கூறி 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகள் என்ற அடிப்படையில் இந்தச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; முதியோருக்குக் குறைந்தபட்ச உதவித் தொகையாக மாதம் ரூ.5,000 வழங்கப்பட வேண்டும்; மாற்றுப் பாலினத்தவர் பாதுகாப்பு மசோதாவில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, திருமணம் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பதற்கான உரிமைகள் உள்ளடக்கப்பட வேண்டும்; மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்துத் துறைகளிலும் 8% இட ஒதுக்கீடு; சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான சச்சார் குழுப் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துதல் என ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் பிரிவினருக்கான கோரிக்கைகள் நீள்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து விவரங்களை அளிப்பதற்கான விதிகள் ஏற்கெனவே அமலில் இருக்கும் நிலையில் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளைக் கோருகிறது இந்த அறிக்கை. மாநில உரிமைகள் விவகாரத்தில் பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகளில் மத்திய அரசின் கையே ஓங்கியிருக்கும் சூழலில் அரசியல் சாசனத்தில் மாநில உரிமைகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதற்கான குழுவில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு அரசு முன்னுரிமை அளித்தல், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களைப்பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் ஆகிய சுற்றுச்சூழல் நலன் சார்ந்த கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

மரண தண்டனை ஒழிப்பைக் கோருவதோடு நிறைவடையும் இந்த அறிக்கை இந்தியாவின் அரசியல் சாசனத்தின் அடிநாதமான சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகிய விழுமியங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கான பல கோரிக்கைகளை உள்ளடக்கியிருக்கிறது. இவற்றைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறச் செய்வதோடு இவற்றை நிறைவேற்றுவது அரசியல் கட்சிகளின் கைகளில் இருக்கிறது.பெண்களுக்காகப் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கை பெண்களுக்கான கோரிக்கைகளுடன் சுருங்கிவிடவில்லை. பெண்களைப் போல் பலவித ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் அனைத்துப் பிரிவினருக்கான கோரிக்கைகளும் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x