

தேர்வு தினத்தன்றும் தேர்வறையிலும் மாணவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய தயாரிப்புகளையும் அதற்கு உதவும் பெற்றோருக்கான அவசியக் குறிப்புகளையும் பார்ப்போம்.
போர் அல்ல
தேர்வுக்குக் கிளம்புவதை ஏதோ போருக்குச் செல்வதுபோல பெற்றோர் தயார் செய்வார்கள். ஏற்கெனவே தேர்வு அச்சத்தில் மாணவர் இருப்பின் இது அவர்களின் இயல்பைப் பாதிக்கும். எனவே, கூடுதல் சரிபார்ப்புகளுடன் எப்போதும் போலவே மாணவர்கள் பள்ளிக்குப் புறப்படலாம்.
தேர்வு மையம் தனது பள்ளியாக இருப்பினும் தேர்வறை என்பது அதுவரை பழகாத வேறு திசையிலான வகுப்பறையாக அமையலாம். எனவே, தேர்வுக்கு முந்தைய தினமே அந்த அறையை அடையாளம் கண்டு வரலாம், சுற்றுப்புறத்தைக்கொஞ்சம் கவனிக்கலாம். தேர்வு மையம் இன்னொரு பள்ளியாக இருக்கும்பட்சத்தில் பெரியவர்கள் உதவியுடன் அதன் அமைவிடம், அங்கே செல்வதற்கான பயண நேரம், தூரம், வழி ஆகியவற்றை முன்கூட்டியே உறுதிசெய்யலாம்.
தொடக்கம் இனிமையாகட்டும்
உற்சாகமாகத் தேர்வை எதிர்கொள்ள முந்தைய இரவில் போதுமான உறக்கம் முக்கியம். எவ்வளவு தீவிரமான படிப்பாக இருப்பினும் குறைந்தபட்ச உறக்கத்தை உறுதிசெய்வது அவசியம். காலையில் எழுந்ததும் உடலைத் தளர்த்தும் சிறு பயிற்சிகளுக்கு அப்பால் கடின உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். தேர்வு தினத்தன்று மாணவிகள் தலைக்குக் குளிப்பதையும் தவிர்க்கலாம்.
முகத்தில் பிசுபிசுக்கும் வகையில் தலைக்கு எண்ணெய்யும் கூடாது. எழுதுபொருட்களை முன்தினமே தயாராக எடுத்து வைப்பதில் தொடங்கி, பேனாவில் மை உள்ளதா, பென்சில் சீவப்பட்டுள்ளதா, கணிதக் கருவிகள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்கப் பெற்றோர் உதவலாம்.
பேனா புதிதென்றால் தேர்வுக்கு முன்பாகவே எழுதிப் பழகுவது அவசியம். அவற்றை ஒன்றிரண்டு கூடுதலாக எடுத்துச்செல்வது அவசரத்துக்கு உதவும். 15 நிமிடங்கள் முன்பாகவே தேர்வறைக்குச் சென்றுவிடுவது சிறப்பு.
‘ஆப்ஷன்’-ல் கவனம்
பாடம் தொடர்பான குறிப்புகளோ வேறு சீட்டுகளோ தன்னிடம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே தேர்வறைக்குள் நுழைய வேண்டும். உள்ளே சென்றதும் எழுதும் மேசை, சன்னல் பகுதிகளிலும் அவ்வாறு சரி பார்த்துக்கொள்வது அவசியம்.
விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை நிரப்புவதில் கவனம் அவசியம். வினாத்தாளைப் பெற்றதும் அதை முழுமையாக வாசித்து நன்கறிந்த வினாக்களை அடையாளம் காண்பதுவிரைவாகத் தேர்வெழுத உதவும். ஒரு மதிப்பெண்ணோ விரிவான விடைப் பகுதியோ முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ள பகுதியிலிருந்து விடையளிப்பதைத் தொடங்கலாம்.
நீலம் அல்லது கறுப்பு என ஏதேனும் ஒரு வண்ண பேனா மட்டுமே பயன்படுத்துவதுடன், படங்கள் வரையவும், அடிக்கோடிடவும் பென்சிலுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வினா எண், உரிய‘ஆப்ஷன்’ போன்றவற்றைத் திருப்புதலில் சரிபார்ப்பது அவசியம்.
ஓரிரு வினாக்களுக்கு விடை மறந்துபோனாலும் பதற வேண்டாம். சற்று நேரம் கழித்துக்கூடப் படித்தது நினைவுக்கு வரக்கூடும். தேர்வறையில் சக மாணவர் விடை தெரியாது விழிப்பதையோ கூடுதல் விடைத்தாள் வாங்குவது குறித்தோ கவனம் சிதறுவதும் கூடாது.
- பிளஸ் 2 ஆசிரியை செ.மலர்விழி
கதையளக்க வேண்டாமே!
‘பாக்ஸ், பவுச்’ போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது என்பதால், எழுதுபொருட்களை ஒரு ரப்பர் பாண்டில் பிணைத்துச் செல்லலாம். காலணி, சாக்ஸ் போன்றவற்றுக்கும் அனுமதி கிடையாது.
கைகளில் இறுக்கமான கயிறுகள் கட்டுவது,இறுக்கமான ஆடைகளை அணிவது ஆகியவற்றையும் தேர்வு தினங்களில் தவிர்ப்பது நல்லது. தூய்மையான சீருடை தன்னம்பிக்கை தரும். தேர்வறைக்குச் செல்லும் முன்னர் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வது அவசியம்.
தேர்வு தினத்தன்று காலையில் எல்லாப் பாடங்களையும் பரபரவெனத் திருப்புவதைவிட, கடைசி திருப்புதலுக்கு என முன்கூட்டியே ஒதுக்கி வைத்திருப்பதை மட்டும் படித்தால் போதும்.
முக்கியமான குறிப்புகள், மனப்பாடப் பகுதி, சூத்திரங்கள், படங்கள் உள்ளிட்டவற்றையும் திருப்புதல் செய்யலாம். தேர்வு நாளன்று வினாத்தாள் குறித்த ஊகங்கள், புரளிகள் குறித்து நண்பர்களுடன் கதையளக்க வேண்டாம். நேர்மறை சிந்தனை நல்லது.
- பத்தாம் வகுப்பு ஆசிரியை ஆ.சூ.ரெமோ ஷைனி