Published : 01 Mar 2019 10:54 am

Updated : 01 Mar 2019 10:54 am

 

Published : 01 Mar 2019 10:54 AM
Last Updated : 01 Mar 2019 10:54 AM

ஆடம்பரச் செலவுகளை அடியோடு தவிர்ப்போம்! - திருமணம் போட்டியில் வென்ற வாசகர்கள் நெகிழ்ச்சி

இயக்குநர் சேரனின் உருவாக்கத்தில் இன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’. அதன் சிறப்புக் காட்சி ‘இந்து தமிழ்’ வாசகர்களுக்காக நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.

திருமணம் பற்றி, சிறந்த கருத்துகளை ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ்கள் மூலம் அனுப்பிய வாசகர்கள் ‘இந்து தமிழ்’ ஆசிரியர் குழுவைத் திக்குமுக்காட வைத்தனர். எஸ்.எம்.எஸ் போட்டியில் கலந்துகொண்டவர்களிடருந்து 50 வாசகத் தம்பதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தம்பதிகள் ஆர்வத்துடன் சிறப்புக் காட்சியில் கலந்துகொண்டு ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ படத்தைக் கண்டுகழித்தனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன், பட நாயகன் உமாபதி, நாயகி காவ்யா சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாசகர்களை வரவேற்றனர். பின்னர் வாசகர்களோடு அமர்ந்து படம் பார்த்தனர்.

சிறப்புக் காட்சித் திரையிடலுக்குப் பின், ‘ஆடம்பரமான வைபவம் என்ற பெயரில் நடக்கும் நம் திருமணங்களில் இனி வீண் செலவுகளை அடியோடு தவிர்ப்போம். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஏற்படுத்திவிட்டது’ என்ற ஒருமித்த கருத்தை வாசகர்கள் அனைவரும் முன்வைத்தனர். அதேநேரம் படம் பற்றிய தங்களது விமர்சனத்தையும் உடனடியாகத் தெரிவித்தனர்.

தமிழகம் சுற்றி வந்த உணர்வு

திரையிடலின் இறுதியில் வாசகர்கள் மத்தியில் பேசினார் படத்தின் இயக்குநர் சேரன் : “நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான, நெருக்கமான படம் என்பதால் இதுபோல் தமிழகம் முழுவதும் இருந்து அழைக்கப்பட்ட பார்வையாளர்களுக்குச் சிறப்புக் காட்சியைத் திரையிட்டுக் காட்ட விரும்பினோம். படம் பார்க்க வந்த ‘இந்து தமிழ்’ நாளிதழ் வாசகர்களுக்கு நன்றி.

திருமணத்தை நாம் எல்லோரும் எப்படிப் பார்க்கிறோம், அந்த வாழ்க்கையை என்ன மாதிரி வாழ்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மகிழ்ச்சியைப் போலவே திருமண வாழ்க்கை சிலருக்குத் துன்பத்தையும் கொடுத்துவிடுகிறது. அதற்குக் காரணம் நம் அறியாமைதான். ஒரு திருமண நிகழ்வு நடப்பதற்கு முன்பு அதன் மீதான நம் பார்வை, பக்குவம் எனப் பலவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்தப் படம் வழியே உங்களது வாழ்க்கையை எந்த இடத்தில் இணைத்துப் பார்க்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்திருக்கும் வாசகர் ஒருவர் கூறும்போது, ‘இங்கே உள்ள விஐபிகளை அழைத்துச் சிறப்புக் காட்சி காட்டாமல் எங்களைப் போன்ற சாமானிய மனிதர்களை அழைத்துத் திரைப்படத்தைத் திரையிட்டுக் காட்ட நினைத்த விதமே மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதற்காகத்தான் இந்தச் சிறப்புக் காட்சி. ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களுடன் படம் பார்த்த திருப்தியை இந்த நிகழ்வு தந்தது. இதேபோல் படம் வெளியாகி அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் நம்பிக்கையை விதைக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு என் நன்றி!’’ எனத் தெரிவித்தார்.

நாயகன் - நாயகியின் பகிர்தல்

இயக்குநரைத் தொடர்ந்து படத்தின் நாயகன் உமாபதி ராமையா பேசினார்:

“ பார்வையாளர்களிடம் உணர்வுகளைக் கிளறிவிடுவதற்காகப் பல நல்ல படங்கள் எடுக்கப் படுகின்றன. ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ அப்படியோர் அற்புதமான படம்தான். அந்த வகையில் இந்தப் படத்தைப் பார்த்த தம்பதிகளின் முகங்களை நான் கவனித்தபோது அவ்வளவு மகிழ்ச்சியைப் பார்த்தேன். இல்லற வாழ்க்கையில் சரியான புரிதல் இல்லாமல் என் நண்பர்கள்

இருவரே விவாகரத்து வரைக்கும் வந்து நிற்கின்றனர். அவர்களை நினைத்து எனக்கே கவலை என்றால் அவர்களது பெற்றோரை நினைத்துப் பாருங்கள். இந்தத் தலைமுறையினர் அதன் மதிப்பைச் சரியாக உணரவில்லை. இங்கே படம் பார்த்த ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த திருமணத்தை நினைத்துப் பார்த்துப் படத்துடன் தங்களை இணைத்துக்கொண்டு பேசுவதைப் பார்க்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும்போது

தரமான படம் பார்த்த நிறைவு மட்டுமல்ல; ஆடம்பரம் என்ற பெயரில் நடக்கும் திருமண நிகழ்வுகள் படம் பார்த்த, பார்க்க இருப்பவர்களின் வாழ்க்கையில் கண்டிப்பாகக் குறையும்” என்ற கருத்தைப் பகிர்ந்தார்.

உமாபதியைத் தொடர்ந்து படத்தின் நாயகி காவ்யா சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் சேரன் ஒவ்வொரு படத்தையுமே சமூகப் பொறுப்போடு அதேநேரம் சொல்ல வரும் விஷயத்தை ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்பவர். இந்தமுறை திருமணக் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். அதில் நானும் பங்குபெற்றிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இங்கே சிறப்புக் காட்சியில் படம் பார்த்த மக்களின் உணர்வு பாசிட்டிவாக இருப்பதால் எல்லோராலும் இந்தப் படம் கொண்டாடப்படும்!’’ என்றார்.

வாசகர்களின் உடனடி விமர்சனம்

படக்குழுவினரைத் தொடர்ந்து சிறப்புக் காட்சியைக் கண்டுகளித்த வாசகத் தம்பதிகள் அனைவரும் படம் பற்றிய தங்களது உடனடி விமர்சனத்தையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் 15 தம்பதிகளின் விமர்சனம் இதோ...

பாஸ்கர் - திலகவதி, தஞ்சாவூர்.

எங்கள் திருமணம் தொடங்கி எங்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் பலரது திருமணம் பண்டைய கால முறைப்படிதான் படாடோபமாக நடந்தது. இனி சேரன் இந்தப் படத்தில் காட்டியபடி என் மகளுக்குத் திருமணம் நடத்த வேண்டும் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறோம்.

ஸ்ரீநிவாசன் - லட்சுமி, சென்னை.

இந்தப் படத்தில் சேரன் எப்படித் திருமணம் நடத்துகிறாரோ அதேமாதிரி சிக்கனமாகத்தான் எங்களுடைய பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தினோம். அதனால் நாங்கள் நிறையப் பணத்தைச் சேமித்தோம். படத்தை எங்களால் கொண்டாட்டமாகப் பார்க்க முடிந்தது. நாம் தப்பு செய்யவில்லை என்ற நிறைவு ஏற்பட்டது.

சுப்பிரமணியமூர்த்தி - ஹேமாமாலினி, சென்னை.

திருமணத்துக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும், கவுரவத்தை முன்னிறுத்தி பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யக் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு இந்தப்படம் ஒரு சம்மட்டி அடி.

பாலசங்கர் - ரோஜா, கும்பகோணம்

நாங்கள் காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். எங்கள் பகுதிகளில் கல்யாணம் செய்தே சொத்தை இழந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அப்படி இருக்கக்கூடாது என்பதை அற்புதமாகச் சேரன் சொல்லியிருக்கிறார்.

சந்திரசேகர் - சாந்தி, தூத்துக்குடி

எங்கள் உறவினர் வீட்டுத் திருமணம் ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் உணவுப் பொருட்கள் வீணானதை இப்போது நினைத்தாலும் மனம் பதறும். அதற்குத் தீர்வுதான் இந்தப் படம்.

கவிஞர் கு.கண்ணன் - ராஜலட்சுமி, புதுச்சேரி.

உறவினர்களையும் நண்பர்களையும் காரணம் காட்டி என்னுடைய 4 பிள்ளைகளுக்கும் 2 பேரக்குழந்தைகளுக்கும் ஆடம்பரமாகத் திருமணம் செய்தோம். அதில் அதிகக் கடன்பட்டதுதான் மிச்சம். இனி வீட்டில் உள்ள 7 பேரக் குழந்தைகளுக்கும் இந்தப் படத்தில் சொன்ன விதத்தில்தான் திருமணம் செய்வோம். அதற்கு இப்போதே மனம் தயாராகிவிட்டது.

சிவசங்கர் - நாகலட்சுமி, கள்ளக்குறிச்சி.

திருமணம் - சில திருத்தங்களுடன் என்ற வார்த்தை அவ்வளவு அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது. எல்லோரும் அன்பான வாழ்க்கையை வாழ வழி காட்டுகிறது. பொழுதும் அற்புதமாகப் போனது; போன பொழுது அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது.

பாஸ்கரன் – சாந்தி, புதுச்சேரி.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தம்பதிகள் கைகளில் ரூ.35 லட்சத்தைக் கொடுத்த இடமும் வீண் செலவில்லாமல் திருமணம் செய்ய சேரன் சொல்லும் திட்டங்களும் அற்புதம். குழந்தைகளோடு பேச எங்களுக்கு நேரம் இல்லை. அப்படிப் பேசாத பல முக்கிய விஷயங்களை இப்படம் வெளிக்காட்டியுள்ளது. படம் பார்த்த குழந்தைகளும் இதை மறக்க மாட்டார்கள். ஒரு திரைப்படம் பார்க்க இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்ற யோசனையோடுதான் இங்கே வந்தோம். அந்த மனக்குறையைப் படம் நீக்கிவிட்டது.

பத்மநாபன் - சுமதி, திருநெல்வேலி.

எங்களது திருமணம் ரூ.15 லட்சம் செலவில் நடந்தது. இந்தப் படத்தில் வருவதைப் போல கல்யாணப் புடவை வாங்குவதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது. அந்த நிகழ்வைத் திரும்பப் பார்ப்பதுபோன்ற அனுபவம் கிடைத்தது. அனைத்து தலைமுறையினர் பார்க்க வேண்டிய படைப்பு.

தேவராஜன் - சந்திராமணி, காஞ்சிபுரம்.

இன்றைய காலகட்டத்துக்கான படம். ஒவ்வொரு கருத்தும் அவசியமான பதிவு.

முகம்மது கவுஸ் - ஷாத்தரின், திருச்சி.

எங்களது இஸ்லாம் மத நூல்களில் எளிமையான திருமண முறைகளே இறைவனுக்குப் பிடித்தமானது என்று சொல்லியிருப்பார்கள். பலரும் இதைப் படிப்பதில்லை. இந்தப் படம் வழியே அது நிச்சயம் போய்ச் சேரும். ஒரு நல்ல படம் பார்த்ததில் மகிழ்ச்சி.

பெருமாள் - கிரிஜா, செங்கல்பட்டு.

தேவையற்ற கலாச்சார நுகர்வைச் சுட்டிக் காட்டிய நல்ல படம். வணிகரீதியாகவும் வரவேற்பைப் பெற வேண்டும். மணப்பெண், மணமகன் வீட்டார் உரையாடல் பதிவு நேர்த்தி.

வெங்கடேஷ் - திவ்யா, திருச்சி.

ரூபாய் 15 லட்சம் செலவு செய்து திருமணம் செய்தேன். இந்தப் படம் முன்னரே வரவில்லையே என எனக்கு வலிக்கிறது. படத்தில் இயற்கை விவசாயம் குறித்துப் பேசிய இடம் அழகு.

துரைராஜ் - உஷா, கடலூர்

அரசுப் பணியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். லஞ்சம் குறைந்தாலே பொருளாதார நெருக்கடிகள் குறையும். இந்தத் திரைப்படம் சொன்னதுபோல வாழ வேண்டும். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் கண்ட முதல் பிரிமியர் ஷோ இது. அதுவே மறக்கவே முடியாத அனுபவமாக ஆகிவிட்டது. நல்ல படம் தந்த சேரனுக்கு நன்றி.

ஏழுமலை - சங்கீதா, ஓசூர்

என் மாமனார் திருமணத்தைக் கோயிலில் வைத்துக்கொள்ளுங்கள். செலவாகும் பணத்தை நான் வங்கியில் டெபாசிட் செய்துவிடுகிறேன் என்றார். நான் கேட்கவில்லை. அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. இனி, எங்கள் பிள்ளை விஷயத்திலாவது அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வாசகத் தம்பதியரின் விமர்சனப் பதிவுக்குப் பின் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம், வேட்டி, புடவை ஆகியன பரிசாக வழங்கப்பட்டன. அனைவரும் படக்குழுவினருடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் விடைபெற்றனர். மற்ற வாசகர்களின் விமர்சனப் பதிவுகளை நாளைய ‘இந்து தமிழ்’ நாளிதழில் பாருங்கள்.

கிஃப்ட் பார்ட்னர்: ஜாய்ஆலூகாஸ் ஜூவல்லரி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author