Published : 19 Mar 2019 05:54 PM
Last Updated : 19 Mar 2019 05:54 PM

டிங்குவிடம் கேளுங்கள்: பூநாரை ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?

பூநாரை (ஃப்ளமிங்கோ) ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது, டிங்கு?

– எல்.ஆர். ஆசாத் அன்புச் செல்வன், மாதவரம், சென்னை.

நல்ல கேள்வி ஆசாத். நம் உடல் செங்குத்தாக இருப்பதால், நம்மால் சில நிமிடங்கள் மட்டுமே ஒற்றைக் காலில் நிற்க முடியும். ஆனால், பூநாரை, நாரை, கொக்கு போன்ற நீர்ப்பறவைகளின் உடல் ஒற்றைக் காலில் நிற்பதற்கு ஏற்றவாறு, அமைந்திருக்கிறது. அதனால் அவற்றால் ஒற்றைக் காலில் நிற்க முடிகிறது என்று சொல்லப்பட்டுவந்தது.

பிறகு பூநாரையை ஆராய்ச்சி செய்தவர்கள், உடல் வெப்பநிலையைச் சமன் செய்துகொள்வதற்கே ஒற்றைக் காலில் நிற்பதாகச் சொன்னார்கள். சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள், பூநாரைகளின் மூளை ஓய்வு நேரத்தில் ஒரு பாதி மட்டுமே வேலை செய்கிறது. அதனால் ஒற்றைக் காலைத் தூக்கிக்கொண்டு, தலையை உடல் மீது வைத்து ஓய்வெடுப்பதாகச் சொல்கிறார்கள்.

திடீரென்று ஆபத்து வந்தால் சட்டென்று பறந்து செல்வதற்கும் ஒற்றைக் காலில் நிற்பது உதவியாக இருக்கிறது. ஆற்றலைச் சேமிப்பதற்கும் இது உதவுகிறது என்கிறார்கள்.

ரயில் பெட்டிகளில் தண்ணீர்த் தொட்டிகளே இல்லையே, பிறகு எங்கிருந்து கழிவறைக்குத் தண்ணீர் வருகிறது, டிங்கு?

– கனகா, ராமநாதபுரம்.

ரயில் பெட்டிகளில் தண்ணீர்த் தொட்டிகள் இருக்கின்றன, கனகா. ஆனால், அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கழிவறைகளின் மேலே வெளியில் தெரியாதபடி தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொட்டியிலும் 500 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது குழாய்களின் மூலம் தொட்டிகளில் தண்ணீரைப் நிரப்பிவிடுவார்கள். அதனால், தண்ணீர் தீர்ந்து போனாலும் அடுத்து வரக்கூடிய ரயில் நிலையங்களில் தண்ணீரை நிரப்பிக்கொள்ளலாம்.

தேவதைகள் உண்மையிலேயே இருக்கிறார்களா, டிங்கு?

– எஸ். விஷால், 5-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

ஆமாம், தேவதைகள் இருக்கிறார்கள். ஆனால், கதைகளில் வருவதுபோல் முதுகில் இறக்கைகளோடு இருக்க மாட்டார்கள். நம்மைப்போல சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். நீங்களும் ஏராளமான தேவதைகளுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், விஷால்.

அவர்களை எல்லாம் தேவதைகள் என்று அழைக்காமல், அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, பாட்டி, தாத்தா, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, தோழன், தோழி, ஆசிரியர் என்று வெவ்வேறு பெயர்களைச் சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சக மனிதர் மீது வெறுப்பைக் காட்டாமல் அன்பைக் காட்டும் அத்தனை பேரும் தேவதைகளே! நான்கூட ஒரு தேவதையின் கேள்விக்குதான் இந்தப் பதிலைச் சொல்லியிருக்கிறேன், விஷால்.

பூமி சுற்றும்போது கடல் நீர் எப்படிக் கொட்டாமல் இருக்கிறது, டிங்கு?

– எம்.எல். குருமூர்த்தி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

மேலே வீசும் பொருள் கீழே விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை என்பது உங்களுக்கே தெரியும். அதே புவியீர்ப்பு விசைதான் கடல் நீர் கீழே சிந்தாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது, குருமூர்த்தி.

ஏன் கறுப்பு நிறம் மற்ற நிறங்களைவிட அதிகமாக  வெப்பத்தை ஈர்க்கிறது, டிங்கு?

- ரா. சிநேகபிரியா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

வெப்பமும் ஒளியும் வெவ்வேறான ஆற்றல்கள். ஒளி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றம் அடையும். கறுப்பு நிறம் ஒளியிலிருக்கும் அலைநீளங்களை அப்படியே இழுத்துக்கொண்டு, வெப்ப ஆற்றலாக மாற்றிவிடுகிறது. அதனால் கறுப்பு நிறமுடைய பொருட்கள் வெப்பமடைகின்றன.

வெள்ளை, வெளிர் நிறங்கள் ஒளியிலிருந்து பெறும் அலைநீளங்களைக் கறுப்புபோல் இழுத்துக்கொள்ளாமல் பிரதிபலித்துவிடுகின்றன. இதனால் குறைவான ஒளி ஆற்றலே வெப்ப ஆற்றலாக மாறுகிறது, சிநேகபிரியா. இது ஒவ்வொரு நிறத்துக்கும் மாறுபடும். வெயில் காலத்தில் கறுப்பு ஆடையை அணிய வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பது இப்போது தெரிந்திருக்கும்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x