Published : 09 Feb 2019 10:55 AM
Last Updated : 09 Feb 2019 10:55 AM

கற்பக தரு 39: நீர் வெளியேறா ஓலைக் குடுவை

பனையோலைக் குடுவை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நமது மரபில் காணப்படும் ஒரு கலை வடிவம். பனையேறும் சமூகத்துக்குள் அது ஒரு அத்தியாவசியத் தேவையாக இருந்திருந்தாலும் பிற மக்களிடம்  அது முக்கிய இடம் பிடிக்கவில்லை. ஆகவே பனைத்தொழில் அழியும்போது குடுவை செய்யும் அற்புதக் கலையும் சத்தமில்லாமல் அழிந்து போய்விட்டது.

பனையேறிகள் எடுக்கும் பதனீர் வெளியேறா வண்ணம் அமைக்கப்படும் ஒரு பின்னல் முறை கொண்டது அது. கி.மு. 7-ம் நூற்றாண்டில் பாய் போன்ற வடிவங்கள் இருந்திருப்பதை வைத்துப் பார்க்கையில், குடுவை அதற்கும் முந்தைய பல தலைமுறைகளின் அறிவை உள்வாங்கி மேலெடுக்கப்பட்ட கலைவடிவமாகத் திகழ்கிறது.

பனை ஓலைக் குடுவை தமிழகத்திலிருந்து வழக்கொழிந்துபோய் அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. தகரக் குடுவைகள் மாற்றாக வந்தபோது, பாரம்பரிய அறிவு நம்மை விட்டு சற்றே விலகிப்போய்விட்டது. நீர் புகா வண்ணம் அமைக்கும் இதைக்கொண்டே பண்டைய பனையேறிகள் பதனீர் இறக்கினர். இந்த வடிவம் பல்வேறு மாற்றங்களை அடைந்து பல நூற்றாண்டுகளைக் கடந்து நமது கரங்களை வந்தடைந்திருக்கிறது. ஆனால் நவீன காலத்தில் பொருளற்றவை எனக் கருதப்பட்டதால் இவை வழக்கொழிந்து போய்விட்டன

சாரோலைகள், குருத்தோலைகள் கொண்டு செய்யப்படும் இது நீர் வெளியேறா தன்மை கொண்டது. சாரோலைகள் கொண்டு அடிவைத்த பின்பு கழுத்துப் பகுதியை எட்டுகையில் ஓலை உள்வாங்கும்படியாக அதன் கனத்தைக் குறைத்து முடைகிறார்கள். பின்பு உமி இட்டு இடித்து துணியால் வாயைப் பொத்தி வாறுகடை (பனை நார்) கொண்டு கட்டி அதை ஒரு பந்துபோல் மாற்றிவிடுகிறார்கள். இவற்றுக்குப் பின் குருத்தோலைகளைக் கொண்டு பொத்தி எடுக்கிறார்கள்.

தொடர்ந்து பனங் கருக்கு நாரினையும் அகணி நாரினையும் எடுத்துக் கட்டி, பனை மட்டையை வளைத்து வாய் கட்டி, பனை நார் கொண்டு தாலி இட்டு, பனைநாரை முறுக்கிக் கண்ணி சேர்த்து, சோற்று நாரைக்கொண்டு அழுத்தம் கொடுத்து, கருக்கு நாரைச் சீர்செய்து அதன் வாய்ப் பகுதியைப் பலப்படுத்திச் சிறந்த ஒரு வடிவமைப்பைச் செய்வார்கள். ஒரு குடுவையைச் செய்வதற்கு மூன்று நாட்கள் பிடிக்கும்.

குடுவை செய்யும் மரபு சுமார் 25 வருடங்களுக்கும் முன்பே வழக்கொழிந்துபோய்விட்டது. அதன் கடைசிக் கண்ணியாக தங்கப்பன் என்பவர் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தோம். இந்த பெட்டியை மீட்டுருவாக்கம் செய்கையில், பனை சார்ந்த பல்வேறு தமிழ்ச் சொற்கள் எழுந்து வந்தன, சூழலியல் சார்ந்த கள உண்மைகள், பனைத் தொழிலின் தொன்மை, பனையேறிகளின் உன்னதமான கலைவடிவம் சார்ந்த புரிதல், பண்டைய எண்ணியல் அறிவு என எண்ணிறைந்த உண்மைகள் மேலெழுந்து வந்தன.

காந்தி எவ்விதம் உப்பைக் கையில் எடுத்தாரோ, அதுபோலவே இன்றைய சூழலில் பனை ஓலையை ஞெகிழிக்கு மாற்றாக, ஆலைகளில் உருவாகும் பொருட்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x