Published : 19 Mar 2019 06:16 PM
Last Updated : 19 Mar 2019 06:16 PM

கதை: மந்திரப் பூசணி!

பரமன் மிகப் பெரிய பணக்காரர். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருடையது. அவரிடம் முனியன் வேலை செய்தார். ஒரு நாள் பரமனிடம் வந்த முனியன். “ஐயா, எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும்தான் சும்மா இருக்கிறது. சிறிது தானியம் கொடுத்தால் என் நிலத்திலும் விதைத்துவிடுவேன்” என்றார்.

“என் நிலத்திலேயே வேலை செய். சொந்தமாகப் பயிரிட வேண்டாம். இப்போது கஞ்சியாவது கிடைக்கிறது. சொந்தமாக விவசாயம் செய்தால் அதுவும் கிடைக்காது” என்று கோபத்துடன் சொன்னார் பரமன்.

வீடு திரும்பிய முனியன் மனைவியிடம், “நாம் முன்னேறுவது ஐயாவுக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்துவிட்டார்” என்று வருத்தத்துடன் கூறினார்.

அப்போது அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த முனியனின் மனைவி, “நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்போது விழுமோ என்று அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்றார்.

“குருவி பாவம். அதுக்கு விருப்பமென்றால் கூடு கட்டிக்கொள்ளட்டும். நாம் தொல்லை செய்ய வேண்டாம்” என்றார் முனியன்.

கூட்டில் குருவி நான்கு முட்டைகளை இட்டது. நான்கும் குஞ்சுகளாயின. திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.

அங்கு வந்த முனியன் பாம்பை விரட்டிவிட்டார். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்றுவிட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.

அதை அன்போடு எடுத்து, உடைந்த காலில் கட்டுப் போட்டார். அதை மீண்டும் கூட்டில் வைத்தார். உணவு தந்தார். சில நாட்களில் அந்தக் குருவியின் கால் குணமடைந்து, அங்கிருந்து பறந்து சென்றது.

ஒரு நாள் மழை பெய்தது. குடிசை ஒழுகியது. “நம் கஷ்டம் எப்போது விலகுமோ?” என்று வருத்தப்பட்டார் முனியனின் மனைவி. அப்போது கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தார் முனியன்.

குருவி ஒன்று இருந்தது. வாயில் வைத்திருந்த விதையை அவர் கையில் கொடுத்தது. “உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

மீண்டும் வந்த குருவி, இன்னொரு விதையைத் தந்தது. “இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது. மூன்றாவது தடவையும் வந்து, “இதை ஜன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்புக்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டார் முனியன். மறுநாளே மூன்று பெரிய பூசணிக் காய்கள் காய்த்திருந்தன. முனியனுக்கும் அவர் மனைவிக்கும் ஆச்சரியமாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த பூசணிக்காயை வீட்டுக்குக் கொண்டுவந்து, இரண்டு துண்டுகளாக வெட்டினார். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருட்கள் வந்தன. எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் பூசணிக்காயை ஒன்று சேர்த்தனர்.

“இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு தேவைப்படும்போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்துவிட்டால் பழையபடி ஆகிவிடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றார் முனியன்.

வீட்டின் முன்புறத்தில் உள்ள பூசணிக்காயை இரண்டாக வெட்டினர். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கொட்டின. ஜன்னல் ஓரம் இருந்த மூன்றாவது பூசணிக்காயில் பொற்காசுகள் கொட்டின.

முனியன் பணக்காரரானார். உடனே அவரைப் பார்க்கவந்தார் பரமன். “உனக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று மிரட்டினார். முனியனும் நடந்ததைச் சொன்னார்.

தன் மாளிகைக்கு வந்த பரமன், எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். மாடியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். அவர் எதிர்பார்த்த மாதிரி குருவிகள் வந்து தங்கின. நான்கு முட்டைகள் இட்டது பெண் குருவி. குஞ்சுகள் வெளிவந்தன. நான்கு குருவிக்குஞ்சுகளையும் தூக்கி வீசினார். அதில் ஒரு குஞ்சை மட்டும் எடுத்து, வைத்தியம் செய்தார். உணவு கொடுத்தார். உடல் சரியானதும் பறந்து சென்றது அந்தக் குருவி.

சில நாட்களுக்குப் பிறகு மூன்று விதைகளுடன் குருவி வந்தது. மூன்று விதைகளைத் தந்தது. “ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றா வதைக் கிணற்று ஓரம் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

பரமனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மூன்று விதைகளையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன.

தோட்டத்துப் பூசணிக்காயை வீட்டுக்குள் கொண்டுவந்து, வெட்டினார். அதில் இருந்து ஏராளமான பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார் பரமன். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசணிக்காயை வெட்டினார். அதில் இருந்து தீ வெளிப்பட்டது பரமன் அலறி அடித்துக்கொண்டு ஊரை விட்டு ஓடினார். எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்த பரமன் ஊரைவிட்டுப் போனதில் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த மூன்றாவது பூசணிக்காயை வெட்ட யாருக்கும் துணிச்சல் இல்லை. நீங்களும் வெட்டிவிடாதீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x