Published : 22 Sep 2014 01:35 PM
Last Updated : 22 Sep 2014 01:35 PM

அபாஸ்ட்ரஃபியை எப்படிப் பயன்படுத்துவது?

அபாஸ்ட்ரஃபி (Apostrophe) என்பது ஒற்றை மேற்கோள் குறி போலத் தோற்றமளிக்கும். அதாவது ’ என்பதுதான் அபாஸ்ட்ரஃபி.இதை எப்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது.

அபாஸ்ட்ரஃபியின் விதிகள்

Apostrophe என்பதை உரிமையை அல்லது உடைமையைக் குறிக்கப் பயன்படுத்துவதுண்டு. சிறுவனின் புத்தகம் என்பதைக் குறிக்க Boy’s book என்போம். அந்தப் புத்தகம் அந்தச் சிறுவனுடையது என்பது தெரிகிறது இல்லையா? அதாவது ஒருமை பெயர்ச்சொல் குறித்த உரிமை அல்லது உடைமை என்றால், அந்தப் பெயர்ச் சொல்லுக்குப் பிறகு Apostrophe குறியிட்டுப் பக்கத்தில் ‘s’ சேர்ப்போம். Raman’s chair, Preetha’s son என்பதுபோல.

Boss என்னும் சொல் போல, சில சமயம் பெயர் சொற்களின் இறுதி எழுத்திலேயே ‘s’ இருக்கும். முதலாளியின் கட்டளை என்பதை எப்படிக் குறிப்பிடுவது? Boss’s order என்று குறிப்பிடலாம். ஆனால் இப்படி எழுதும்போது ஏதோ ஒரு நெருடல் வருகிறது இல்லையா? அதனால்

Apos tropheக்குப் பின்னால் உள்ள ‘s’ என்ற எழுத்தை நீக்கிவிட்டும் பயன்படுத்தலாம். Boss’ order என்று எழுதினால் Apostropheக்குப் பிறகு ‘s’ இருப்பதாக அர்த்தம். (மாட்டேன், Boss’s order என்றுதான் எழுதுவேன் என்றால் அப்படியே எழுதுங்கள், தப்பில்லை).

ஒருவரின் பெயரே Andrews என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நூலகத்தை எப்படிக் குறிப்பிடலாம்? சிலர் தவறாக Andrew’s Library என்று குறிப்பிடுவார்கள். இது தவறு. அவர் பெயர் Andrew அல்ல. எனவே Andrews’s Library அல்லது Andrews’ Library என்றுதான் குறிப்பிட வேண்டும்.

சரி, குழந்தைகளின் பைகள் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்? Childrens’ bags என்று குறிப்பிடலாமா? தப்பாச்சே. Child என்பதன் பன்மைதான் Children. எனவே Children’s bags என்றுதான் குறிப்பிட வேண்டும்.

மாமியார் பற்றி…

Mother-in-law என்றால் மாமியார் என்பது ‘மாமியார் வீட்டுக்குப்’ போய் வராதவர்களுக்கும் தெரியும். மாமியார்கள் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்? ‘இதென்ன கேள்வி? Mother-in-laws தான்’ என்று கூறினால் நீங்கள் தவறிழைக் கிறீர்கள்.

Mother-in-law என்பதன் பன்மை Mothers-in-law.

Sister-in-law என்பதன் பன்மை Sisters-in-law

Father-in-law என்பதன் பன்மை Fathers-in-law

இப்போது நம்முடைய ஒரிஜினல் (அதாவது Apostrophe தொடர்பான) கேள்விக்கு வருவோம். மாமியாரின் தங்கை என்பதை Mother-in-law’s Sister எனலாமா? அல்லது Mother’s-in-law Sister எனலாமா? முதலில் குறிப்பிட்டதுதான் சரி. மாமியார்களின் தங்கைகள் என்றால்கூட Mother-in-law’s Sisters என்றுதான் குறிப்பிட வேண்டும்.

உயிர்களோடு உறவு

இலக்கண விதி இல்லை என்றால்கூட இந்த இடத்தில் வேறொரு நடைமுறையையும் பார்ப்போம். பிற மனிதர்களை உரிமை அல்லது உறவு கொண்டாடும்போது Apostrophe இடம் பெறச் செய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உயிரற்ற பொருள்களை உரிமை அல்லது உறவு கொண்டாடும்போது Apostrophe இல்லாதபடிக்கு வார்த்தைகளை அமைக்கலாம்.

Father’s brother. Krishna’s Sister.

Kerchief of Father, File of sister.

Apostropheயை வேறொன்றுக்கும் பயன்படுத்துவார்கள். ஓர் எழுத்து அல்லது ஒரு சில எழுத்துகள் நீக்கப்படும்போது அந்த இடத்தில் Apostrophe-ஐப் பயன்படுத்துவார்கள்.

I do not என்பதற்குப் பதிலாக I don’t எனலாம்.

We did not என்பதற்குப் பதிலாக We didn’t எனலாம்.

You have done the right thing என்பதற்குப் பதிலாக You’ve done the right thing எனலாம்.

ஃபைனான்ஸ்- ஃபியான்ஸெ- ஃபியான்ஸே

Finance என்றால் நிதி என்பது நமக்குத் தெரியும். நிதியமைச்சர்தானே Finance Minister?

Finance என்பதை ஃபைனான்ஸ் என்றுதான் உச்சரிக்க வேண்டும் (ஃபினான்ஸ் அல்ல).

“அடுத்தமுறை உன்னைச் சந்திக்கும்போது என் Fiance-வை அறிமுகப் படுத்துகிறேன்’’. (Fiance என்பதை ஃபியான்ஸெ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.) இப்படி ஒரு கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதை எழுதியது ராஜசேகராக இருக்குமா? அல்லது ராஜகுமாரியாக இருக்குமா? சந்தேகமில்லாமல் ராஜகுமாரிதான்.

ஏனென்றால் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது அல்லது நிச்சயமாகிவிட்டது என்னும் நிலையில் உள்ள வருங்காலக் கணவனைத்தான் Fiance என்று குறிப்பிட வேண்டும் (ராஜசேகர் இப்படிக் குறிப்பிட்டால் அது வேறு மாதிரி!).

அப்படியானால் வருங்கால மனைவியை எப்படிக் குறிப்பிடலாம்? கொஞ்சலாக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம். மற்றபடி நாகரிக முறையில் Fiancee என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆண் நண்பர்களோ, பெண் நண்பர்களோ பலர் இருக்கலாம். ஆனால் Fiance அல்லது Fiancee என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும் (அதாவது ஒரு காலகட்டத்தில்!).

Fiancee என்பதை ஃபியான்ஸே என்று உச்சரிக்க வேண்டும்.

(தொடர்புக்கு : aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x