

புற்றீசல்போல் பெருகிவரும் தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது புதிய செய்தியல்ல. அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சில ஆசிரியர்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களிடம் அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதும் நடக்கிறது.
இன்னும் சில கிராமங்களில் அரசு வழங்கும் சலுகைகளுடன் ஆசிரியர்களும் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கின்றனர். தலைமை ஆசிரியை விஜயலட்சுமியும் அப்படியொரு செயலைச் செய்திருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பாலம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் விஜயலட்சுமி. இவர் தன் பள்ளி மாணவர்கள் பயன்பெறும்வகையில் தன்னுடைய செலவில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்திருக்கிறார்.
தொடுதிரை முறையில் கல்வி கற்பது மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்திருப்பதாக விஜயலட்சுமி குறிப்பிடுகிறார். இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, பள்ளியில் 36 மாணவர்கள் படித்திருத்தின்றனர்.
“அந்த எண்ணிக்கையை இன்றுவரை குறையாமல் பார்த்துக்கொண்டோம். இந்தப் பகுதியின் மக்கள்தொகை குறைவு. அதற்கேற்ற எண்ணிக்கையில்தான் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்” என்கிறார் விஜயலட்சுமி. இங்கே ஐந்தாம் வகுப்பு முடித்த பிறகு அருகில் உள்ள கூடலூரிலோ களம்பூரிலோ ஆறாம் வகுப்பு சேர்கிறார்கள்.
தனியார் பள்ளிகளைப் பார்த்துத் தங்கள் பள்ளி மாணவர்கள் ஏங்கிவிடக் கூடாது என்பதற்காகவே ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தியிருப்பதாக இவர் குறிப்பிடுகிறார். “திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்பு நூறு சதவீதமாக இருப்பதில் மகிழ்ச்சி. அதைத் தொடர்ந்து ஆங்கில வாசிப்பையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்திருக்கிறோம்” என்கிறார் விஜயலட்சுமி.
இது ஈராசிரியர் பள்ளி என்பதால் ஒவ்வொரு வகுப்புக்கும் தினமும் ஒரு மணி நேரம் ஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது. யூடியூப் வீடியோக்கள், பாடல்கள், தொடுதிரைவழிக் கல்வி எனப் புதியதோர் உலகுக்குள் உற்சாகத்துடன் நுழைந்திருக்கிறார்கள் பாலம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள்.