Last Updated : 30 Mar, 2019 05:52 PM

 

Published : 30 Mar 2019 05:52 PM
Last Updated : 30 Mar 2019 05:52 PM

தேர்தல் 2019: கலக்கும் காளியம்மாள்

“உலகத்திலேயே இரண்டாவது சிக்கலான தொழில் செய்யக்கூடிய மீனவர்களைப் பாதுகாக்கச் சட்டம் கிடையாது. ஆனால், இங்கே சிட்டுக்குருவியைச் சுடுங்க, அதைக் கேட்க சட்டம் இருக்கு” என்ற தன்னுடைய உணர்ச்சிகரமான பேச்சால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் ‘நாம் தமிழர் கட்சி’ வேட்பாளரான காளியம்மாள்.

நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பொதுவாக, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பேசும் கட்சிகள்கூடத் தேர்தல் நேரத்தில் தங்களுடைய வேட்பாளர்களாகப் பெண்களைக் குறைந்த எண்ணிக்கையிலேயே நிறுத்துகின்றன. அதிலும் அவர்கள் திரைத்துறையினராகவோ பலமான அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவோ உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர்கள் பலர் குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவே உள்ளனர். இவர்கள் மத்தியில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல்  தன்னுடைய மீனவச் சமுதாயத்துக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது, மீனவர் பிரச்சினையைப் பொதுச் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருபவர் காளியம்மாள்.

களத்தில் காளியம்மாள்

சீர்காழியிலுள்ள தனியார் கல்லூரியில் காளியம்மாள் பி.காம் படித்துள்ளார். அதன்பிறகு ஐ.எ.ஏஸ் தேர்வுக்குப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதுதான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறுகிறார்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கைதுசெய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவர்களை பாதிக்கும் கடலோர ஒழுங்குமுறைச் சட்டம், கடல்வளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் எளிதாகப் பயன்படுத்திகொள்ள கொண்டுவரப்படவுள்ள சாகர்மாலா திட்டம் ஆகியவற்றுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்; அதேபோல் கஜா, ஒக்கி புயலின்போது மீனவ கிராமங்களில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து அவர் களப்பணியாற்றியிருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பணியில் ஈடுபட்டுவருகிறார் காளியம்மாள். துணிச்சல்மிக்க பேச்சாற்றல் காரணமாக மக்களின் கவனத்தைப் பெற்ற காளியம்மாள் சமீபத்தில்தான் நாம் தமிழர் கட்சியில் சேர்த்துள்ளார். “எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கேட்டே சோர்ந்துபோய்விட்டோம். அதனால்தான் மக்கள் நலத் திட்டங்களை வகுக்கும் இடத்தில் ஒரு குடிமகளாக இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசியலில் நுழைந்தேன்” என்கிறார் அவர்.

முதல்கட்டத்திலேயே நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காளியம்மாள். அவருடைய சொந்த ஊர் நாகப் பட்டினமாக இருந்தாலும் வடசென்னை போன்ற தொழிலாளர்கள், மீனவச் சமூக மக்கள் நிறைந்துள்ள பகுதி தனக்குப் புதிதாகத் தெரியவில்லை என்கிறார்.

“தொழிலாளர்கள், மீனவர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்னிறுத்தியே என்னுடைய போராட்டங்கள் இருந்துள்ளன. இந்நிலையில் வடசென்னை போன்ற தொகுதியில் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது எனக்கு அந்நியமாகத் தெரியவில்லை” என்கிறார்.

தொகுதியில் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை உள்ளது; அடிப்படைத் தேவையான கழிப்பறை போதுமான அளவில் இல்லை; கடலில் தொழிற்சாலைகளின் கழிவு கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் தனது பரப்புரையில் சுட்டிக்காட்டி வருகிறார் காளியம்மாள். காளியம்மாளின் எளிமையான தோற்றமும் திடமான பேச்சும் தொகுதி மக்கள்

மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பரப்புரையின்போது, ‘வீட்டை நிர்வகிக்கத் தெரிந்த பெண்களுக்கு நாட்டை ஆளத் தெரியாதா?’, ‘நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் உரிமைகளைக் கேட்டுபெறுவேன். இல்லையேல் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாடாளுமன்றத்திலேயே போராட்டங்களை மேற்கொள்வேன்’ என்பது போன்ற அவரது பேச்சு மக்களிடம் எளிதாகச் சென்றடைகிறது.

காளியம்மாள் போன்ற எளிய வேட்பாளர்களும் அவரைப் போன்றவர்களின் பிரசாரமும் தேர்தல் நடைமுறைகளில் குறைந்த பட்சமாக சில மாற்றங்களையாவது ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x