Last Updated : 25 Mar, 2019 12:18 PM

 

Published : 25 Mar 2019 12:18 PM
Last Updated : 25 Mar 2019 12:18 PM

நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும் நவீன பொருளாதாரம்!

‘வாழ்வதற்காக வேலை செய்கிறோமா அல்லது வேலை செய்ய வாழ்கிறோமா’, ‘என்னதான் ஓடி ஓடி உழைச்சாலும் கொஞ்சம் கூட சேர்த்து வைக்க முடியவில்லையே’, ‘என்னடா வாழ்க்கை இது’... இந்த 21-ம் நூற்றாண்டில் இந்த வார்த்தைகளை சொல்லாத வாய்களே இருக்க முடியாது என்று நிச்சயம் சொல்லலாம்.

இதையேதான் பல ஆய்வுகளும் சொல்கின்றன. ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில் 84 சதவீதம் பேர் வாழ்க்கை குறித்த பயத்தில் இருக்கிறார்கள் என்கிறது. சென்னையில் மட்டும் 77 சதவீதம் பேர் வாழ்க்கை நிலையற்றதாக இருக்கிறது, எதிலும் பாதுகாப்பு உணர்வு இல்லை என்கிறார்களாம்.

ஒருவருக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அவர் வாழ்க்கை நிலையற்றதாக உணருவதில் அர்த்தமுள்ளது. ஆனால், அனைத்தும் இருந்தாலும் இப்போதெல்லாம் இந்த வாழ்க்கை நிலையற்றதாகவே இருக்கிறதே ஏன்?

பார்த்துக்கொண்டிருக்கும் வேலை நிரந்தரம் இல்லை, வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதியில் சென்றால் விபத்தில்லாமல் திரும்பி வருவோம் என்பதில் உத்தரவாதம் இல்லை, பிரச்சினைகளும், பிரிவுகளும் இல்லாத உறவுகள் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இப்படி பணிச்சூழலிலும் சரி, வாழ்க்கைச் சூழலிலும் சரி, எத்தனையோ பிரச்சினைகளோடுதான் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் நகர்த்த வேண்டியிருக்கிறது.

இதற்கு இன்றைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்றைய பணமயப் பொருளாதாரச் சூழலும், சந்தை வணிகப் போட்டியும்தான் காரணம் என்பது சந்தேகத்திற்கிடமில்லாத உண்மை.  

ஒருவரிடம் கார், பங்களா, வங்கிக் கணக்கு நிறைய பணம் என அனைத்தும் இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், அனைத்தையும் காலி செய்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கு ஒரு சில நிமிடங்கள் போதும். பரபரப்பான இந்த வாழ்க்கை் அதற்கு ஆயிரம் வாய்ப்பு

களை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரே ஒரு விபத்து, ஏன் நீங்கள் கிளீன் டி-டோட்டலர் என்றே வைத்துக்கொள்ளுங்கள். கேன்சர் வந்துவிட்டால்... எப்படி வந்தது ஏன் வந்தது என்று கேட்டெல்லாம் ஒரு பயனும் இல்லை. ஒரு விபத்தும், எதிர்பாராத ஒரு நோயும் போதும், வாழ்க்கை முழுவதும் சம்பாதித்து வைத்த மொத்த பணத்தையும் அழித்துவிடும்.

எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், கட்டும் பிரீமியம் வீணாகப் போகிறது என்ற நினைப்பில் காப்பீடு திட்டங்களை உதாசீனப்படுத்துகிறோம். ஆனால், அப்படி ஒரு நிலை ஏற்படும்போது, ஆகும் பொருட்செலவுக்குப் பிறகு, உங்களால் மீண்டும் ஒரு நிலையான பொருளாதார நிலைக்கு மீண்டு வரவே முடியாது.

ஒருகாலத்தில் பயமுறுத்திக்கொண்டிருந்த பாரம்பரிய நோய்களும், பரவக்கூடிய நோய்களும் கூட நம்மிடையே பயத்தை உருவாக்கவில்லை. ஆனால், இன்றைய வாழ்க்கை முறை நோய்கள் என்று சொல்லப்படும் மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு, கொழுப்பு, அதிக எடை, முடி கொட்டுதல், மதுவுக்கு அடிமையாதல் இவையெல்லாம்தான் அதிகமாகப் பயமுறுத்துகின்றன. இன்றைய சூழலில் மருத்துவத் துறையில் செய்யப்படும் செலவுகளில், வாழ்க்கை முறை நோய்களுக்காக மட்டுமே நாம் 50 சதவீதத்தை செலவு செய்கிறோம்.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நடத்திய ஆய்வில் 91 சதவீதம் பேர் குடும்பம் தான் நிலையற்ற வாழ்க்கைக்குக் காரணம் என்று கூறியுள்ளனர். சொத்து, சேமிப்பு குறித்த கவலை வாழ்க்கை மீதான பயத்தை ஏற்படுத்துகிறது என்று 88 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகளை வைத்துப் பார்க்கையில், பொருளாதாரம், அதாவது பணம் தான் எல்லா கவலைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது.  

உண்மைதான் இன்று எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதோடு பணம் மட்டுமே தொடர்புடையதாக இருக்கிறது. குழந்தைகளின் கனவுகள், குடும்பத்தினரின் ஆசைகள் என பலவற்றையும் குடும்பத்தை நிர்வகிப்பவர் சுமக்க வேண்டும். இதற்கான பொருளாதார சக்தி இல்லையென்றால் என்ன செய்ய முடியும். சுமைகளைக் குறைத்துக்கொள்ளவே தனிக்குடும்பங்களை இந்தச் சமூகம் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.

கூட்டுக்குடும்பங்கள் இல்லாமல் போக இதுவே காரணம். எல்லோருக்கும் எல்லோருமே வேண்டும், எல்லோருக்கும் எல்லோர் மீதும் பாசமும் அன்பும் இருக்கிறது. ஆனால், அனைவரின் தேவையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் பொருளாதாரம் இல்லை. அப்படியே இருந்தாலும், பிறருக்கு செலவு செய்து காலியாக்கிவிட்டால் நாளை எனக்கும் என் குடும்பத்துக்கும் நான் எங்கே போவேன் என்ற கேள்வி தான் எல்லோரையும் பயமுறுத்துகிறது.

அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் அதிகரித்துவிட்டதற்கும் இதுவே முழுமுதற் காரணம். இங்கு யார் சுமையையும் யாரும் சுமக்க தயாராக இல்லை. சுமக்கும் அளவுக்கு பொருளாதாரமும், மனப் பக்குவமும் இல்லை என்பதுதான் எதார்த்தம். முடியாமல் படுத்துவிட்ட முதியோர் ஒருவரைப் பார்த்துக்கொள்ள எப்போதும் ஒருவர் கூடவே இருக்க வேண்டும். எல்லோரும் பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலில் இது சாத்தியப்படுவதில்லை.

வாழ்க்கையில் எந்தவித அறமும், நெறியும் இல்லாமல், பணம் மட்டுமே பிரதானம் என்ற சூழல் உருவாகி வெகு காலமாகிவிட்டது. பணம் இல்லாவிட்டால் இன்று எதுவுமே இல்லை. பணத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கிவிட முடியுமா என்ற அறிவுஜீவித் தனமான கேள்விகளுக்கு அப்பாற்பட்டது இந்த நடைமுறை வாழ்க்கை. வாழ்க்கை அழகானது, கவித்துவமானது என்று கவிதை பேசலாம்.

ஆனால், நிஜம் வேறாக இருக்கிறது. இந்த உண்மையிலிருந்து யாராலும் தப்பிக்கவும் முடியவில்லை. ஏனெனில் இந்தப் பணமய உலகத்தில் உங்களால் எல்லோரையும் கூடவே வைத்துக்கொண்டு திருப்திப்படுத்த முடியாது. காரணம் எல்லோருடைய எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இன்று நம்முடைய நுகர்வு சந்தையின் வளர்ச்சியை குறிப்பிட்டு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் விளம்பரம், சலுகைகள், நம்மை வா வா என்று அழைத்துக்கொண்டிருக்கின்றன. அதிலும் சிக்காமல் தப்பினால், அக்கம்பக்கத்து வீடுகள் இருக்கவே இருக்கின்றன.

எல்லாவற்றையும் கவுரவப் பிரச்சினையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் நம் சமூகம் எளிதில் தேவைப்படுகிறதோ இல்லையோ போட்டிப் போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கிக் குவித்துவிடுகிறது. விளைவு, ஒருகாலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை எல்லாமே இன்று அத்தியாவசியப் பொருட்களாக மாறிவிட்டன.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் திருமணத்தை வெறுக்க மிக முக்கிய காரணம் பணம். சம்பாதித்த பணத்தை நினைத்தபடி மகிழ்ச்சியாக செலவு செய்து வாழாமல், குடும்பம், குட்டி என்று அனைத்தையும் சுமக்க பெரும்பாலானோர் தயாராக இல்லை. ஒருபக்கம் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால், மறுபக்கம் செலவுகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் இன்றைய காலத்தில் எதையுமே யாருமே சமாளிக்க முடியாது. பல திருமணங்கள் விவாகரத்துக்கு செல்வதற்கும் கூட பணமே முக்கிய காரணமாக இருக்கிறது.

வாழ்க்கை எப்போதுமே, நிலையானதாக இருந்ததில்லை. ஆனால், 20-ம் நூற்றாண்டு வரை வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்த பயம் என்பது இல்லாமல் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், இன்று இந்த நிலையற்ற தன்மை நம்மை பேய் போல் பயமுறுத்துகிறது.

இதனாலேயே இன்று அனைவருமே சுயநலவாதிகளாக மாறிவிட்டோம். ஆனால், இதற்கு நாம் யாரையும் குறை சொல்லவோ, பழி சொல்லவோ முடியாது. காரணம், இன்று வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. இன்றைய சமூக- பொருளாதார சூழலில் சுகவாசி என்று ஒருவன் எங்குமே இல்லை.

நம்மால் செய்ய முடிந்ததெல்லாம், குடும்பத்தின் சுமையைத் தாங்குபவர்களைப் புரிந்துகொள்வதும், அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து தெம்பூட்டுவதும்தான். அதேசமயம், குடும்பத்தின் நிதியைக் கையாள்பவர்கள் நிதித் திட்டமிடலிலும், காப்பீடுகளிலும் கவனம் செலுத்தலாம். பொருளை சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில்தான் மிக முக்கியமான சில திட்டமிடல்களை நாம் மறந்துவிடுகிறோம் அல்லது தவிர்த்து விடுகிறோம்.

ஓய்வுக்கால முதலீடுகள், காப்பீடு திட்டங்கள், பரஸ்பர முதலீட்டு திட்டங்கள், பிபிஎஃப் முதலீடுகள் எனப் பல வகையான திட்டங்கள் உள்ளன. திட்டமிடுங்கள், பயமில்லாத வாழ்க்கையை வாழுங்கள்.

- saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x