Published : 30 Mar 2019 05:27 PM
Last Updated : 30 Mar 2019 05:27 PM

வட்டத்துக்கு வெளியே: இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத ஆண் மனம்

ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு  ஓவியக் கலையின்  புது அத்தியாயம் எழுதப் பட்டது. அந்த மறுமலர்ச்சிக் காலத்தை ‘ரெனையஸ்சன்ஸ்’ என ஐரோப்பாவில் அழைத்தார்கள். ரூபென்ஸ், ரெம்பிராண்ட்  எல்லோரும் அந்தக் காலத்தின் மதிப்புமிக்க ஓவியர்கள்.   இரண்டு ரெம்பிராண்ட் ஓவியமும் உங்களிடம் இருந்தால் நீங்கள் அனில் அம்பானியின் கடனை அடைத்துவிடலாம். நானும் தேடித்தேடிப் பார்த்தேன்.

எங்கே பெண்கள்? பெண் ஓவியர்கள் இல்லவே இல்லையா? மிகக் குறைவு. கவிதை எழுதிய பெண்களைவிடக் குறைவு. ஐரோப்பாவில் மட்டுமல்ல; இந்தியாவிலும் அதே கதைதான். ஆண் ஓவியர்கள் வரைவதற்கு மாடல்களாய் நின்றதுடன் அவர்களின் கலைப்பணி முடிந்ததா?

பெண்களை வரைந்த விரல்கள்

நீண்ட காலம் கழித்து இந்திய ஆண் ஓவியர்களின் நடுவே முதல் பெண்ணாக  அம்ரிதா ஷெர்கில் வந்தார். ஹங்கேரியில் பிறந்து, இந்தியாவில் ஓவியரானவர்.

நான் சிறுமியாக இருந்தபோது எங்கள்  வீட்டுக்குள் திடீரென்று ஒரு குருவி பறந்து வந்தது. அங்கும் இங்கும் பறந்து, நாங்கள் மின்விசிறியை நிறுத்துவதற்குள்  அடிபட்டு இறந்து விழுந்தது. அதன் இறகுகள் வீடெங்கும் சிதறிக்கிடந்தன. அம்ரிதாவின் வாழ்க்கையும் அந்தக் குருவி மாதிரிதான். சிதைந்துபோன வாழ்வு.

அம்ரிதாவின் ஓவியங்கள் அன்றைய பிரபல ஓவியர்களான  அபனீந்திரநாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவிய வரிசையில் வைத்துப் போற்றப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால், உயிரோடு வாழ்ந்தவரையில் அவரின் ஓவியங்களுக்குப் பெரிய வரவேற்பு இல்லை. அன்றைய மகாராஜாக்கள் இவரின் சித்திரங்களை  நிராகரித்து  ரவிவர்மாவின் ஓவியங்களை வாங்கினார்கள்.

இத்தனைக்கும் அம்ரிதா, ஐரோப்பிய பாணியை மறுதலித்து நம் பண்டைய எல்லோரா பாணிக்கு இந்திய ஓவியங்களைத் திருப்பியவர். ஒருமுறை ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்த அம்ரிதாவிடம் சிலர் நேருவை  ஓவியமாகத் தீட்டச் சொன்னார்கள். “ரொம்ப அழகானவர்களை நான் வரைவதில்லை” என்று அம்ரிதா மறுத்துவிட்டார். இந்தியாவின் விளிம்புநிலை உழைக்கும் மகளிர்தாம் அவரால் மறுபடி மறுபடி வரையப்பட்டார்கள்.

நிராகரிப்புகள், கொந்தளிப்புகள், பல உறவுகள், பல பிரிவுகள் என அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கை;  28 வயதில் திடீர்  மரணம். கணவர் கொன்றுவிட்டார் என்று தாய் சொன்னார். அம்ரிதா செய்துகொண்ட கருக்கலைப்புதான் காரணம் என்றார்கள். எதுவோ என்னவோ ஒரு தூரிகையை விறகில் வைத்துவிட்டார்கள்.

அர்டிமீசியாவுக்கு நேர்ந்த அநீதி

ஐரோப்பாவிலாவது பெண் ஓவியர்கள் இருந்தார்களா? 400 ஆண்டுகளுக்கு முன்  ரோம் நகரில் வாழ்ந்த அர்டிமீசியா ஜென்டிலெஷ்கி இன்று அதிகம் பேசப்படுகிறார். வாழும் காலத்தில் எத்தனையோ அவமானங்கள்.

யாருக்கு இல்லை? ஓவியர் வான்கா கஷ்டப்படவில்லையா? பாரதி, ஜமீனின் பார்வைக்குச் சீட்டுக்கவி அனுப்பவில்லையா? எந்தக் கவிஞனை, கலைஞனை வாழ்க்கை மண்டிபோடாமல் அனுப்பிவைத்தது? அர்டிமீசியாவுக்கு நேர்ந்த அவமானம் வேறுவிதம்.

ஆண்டு 1612. அர்டிமீசியாவுக்கு 19  வயது. அவளுடைய தந்தையின் நண்பரும் அவளுக்கு ஓவியம் கற்றுத்தர நியமிக்கப்பட்ட ஆசிரியருமான அகோஸ்டினோ டாசி, அர்டிமீசியாவைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார். டாசி மீது அர்டிமீசியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை பற்றிய தகவல்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வழக்கில் ஏகப்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்து வந்த அர்டிமீசியாவை அனைவருமே  அருவருப்பாகப் பார்த்தனர். இரண்டு செவிலியர்கள், நீதிபதியின் முன்  அர்டிமீசியாவின் உடலைப் பரிசோதித்தனர். விரல்களைக் கயிற்றால் முறுக்கித்  துன்புறுத்தியபடியே விசாரணை நடத்தினர். “நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மை” என்று மும்முறை அலறுகிறாள் அர்டிமீசியா. அப்புறம்? அப்புறமென்ன, வழக்கம்போலத்தான். டாசி உடனே விடுவிக்கப்படுகிறார்.

சுசானாவும் முதியவர்களும்

பாலியல் தொந்தரவு கொடுத்த பெண்ணின் கண் முன்னாலேயே குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது   அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது. அர்டிமீசியா அதற்குப்பின் வெறியுடன் வரைய ஆரம்பித்தார். ஆனால், ஓவிய உலகில் அவரது பெயர் வேறு மாதிரி நிலைத்துவிட்டது. பாலியல் வல்லுறவு புகாருக்காக நீதிமன்றத்துக்குப் போனவர் என்றே அவர் அறியப்படுகிறார்.

விவிலியக் கதைகளில் ஒன்றான  ‘சுசானாவும் முதியவர்களும்’ (டேனியல் கதை)  கதையின் ஒரு காட்சியை அன்றைய ஓவியர்கள் அதிகம் வரைந்தார்கள். கதையே சுவாரசியமானது. பேரழகியும் நல்லவளுமான சுசானா குளிக்கப்போகும் இடத்தில் இரு முதியவர்கள் அவளை இச்சையோடு எட்டிப்  பார்க்கிறார்கள்.

தங்களுக்கு இணங்காவிட்டால், அவள் கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டுக் காதலனைச் சந்திக்கிறாள் என்று பொய்சாட்சி சொல்லிவிடுவதாக மிரட்டுகிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே பிளாக் மெயில்! சுசானா எதிர்த்து நிற்கிறாள்.  இரு முதியவர்களும் அவள் மீது வழக்குப் போடுகிறார்கள். கடவுளின் கருணைபெற்ற டேனியல் தீர விசாரித்து நீதி வழங்குகிறான். சுசானா பழியிலிருந்து விடுவிக்கப்படுகிறாள்.

பெண் வரைந்த பெண்

இந்த  பைபிள் கதையைப் படமாகத் தீட்டிய ஆண் ஓவியர்கள், சுசானாவின் ஆடையற்ற உடலையும் உணர்ச்சியே இல்லாத முகத்தையும் எட்டிப்பார்க்கும் ஆண்களின் கண்களின் இச்சையையும் வரைந்தனர். அர்டிமீசியா வரைந்த ஓவியத்திலோ சுசானாவின் முகச்சுளிப்பும் அருவருப்பும் ஆதரவற்ற நிலையின் பரிதாபமும் தன்னை மறைக்க முயலும் தவிப்பும்  தெரிகின்றன. பெண் வரையும் பெண்ணுக்கும்  ஆண் வரையும் பெண்ணுக்கும் இருக்கும் வேறுபாடு அது.

அர்டிமீசியாவின் சுசானாவைப் பாருங்கள். பொள்ளாச்சியில் ஒலித்த பெண்களின் கதறல் கேட்கும். ‘ஒரு அஞ்சு நிமிஷம் வெளியே இருங்க அண்ணா..’ என்கிற கதறல். இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடரும்  ஓலம். அர்டிமீசியா, சுசானாவை வரைந்தாரா தன்னையே வரைந்துகொண்டாரா எனத் தெரியவில்லை. ‘ஆன்மாவில் படியும் தூசைக் கழுவிச்செல்லும் கலை’ என்று ஓவியக் கலையைப் பற்றி பிகாசோ சொன்னார். ஆனால், தங்கள் உடல் மீதான வன்முறைகளைக் கழுவிச்செல்லும் கலையாகத் தான் ஓவியத்தைப் பெண்கள் பார்த்தார்களோ என்னவோ.

- பாரதி பாஸ்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x