

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் உடல் நலனில் கூடுதல் அக்கறை கொள்வது முக்கியம். வருடம் முழுக்க உழைத்துப் படித்தாலும், தேர்வு நேரத்தில் உடல் நலனில் அலட்சியம் காட்டினால் முதலுக்கே மோசமாகிவிடும். சித்திரம் எழுதச் சுவர் அவசியம் அல்லவா?
ஊட்ட உணவுகளில் கவனம்
வழக்கத்தைவிடத் தேர்வுக் காலத்தில் கூடுதலாக மெனக்கெடுவது தவிர்க்க முடியாதது. இந்தக் கூடுதல் உழைப்புக்குக் கூடுதலான ஊட்டமும் அவசியம். அதற்காக மூன்றாம் நபரின் பரிந்துரையை நம்பிக் கண்ட சத்து பானங்கள், உணவுப் பண்டங்கள், மருந்துகளை எடுத்துக்கொள்வது கூடாது.
மனப்பாடச் சக்திக்கு என மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதில் சேரும். தேர்வு நேரம் என்றாலும் வீட்டில் வழக்கமாக உட்கொள்ளும் சத்து பானங்கள், உணவு வகைகளே போதும். புதிதாக எவையேணும் எடுத்துக்கொள்வதாக இருப்பின் குடும்ப மருத்துவரின் முறையான ஆலோசனை அவசியம்.
உண்ட மயக்கம் தவிர்க்க
முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதிலும் எண்ணெய் சேர்க்காத, எளிதில் செரிக்கும் உணவுப் பண்டங்கள் நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகள், அசைவம் போன்றவற்றை இந்தத் தருணத்தில் தவிர்க்கலாம். போதிய நேரமில்லை என்றோ தூக்கத்துக்குப் பயந்தோ மாணவர்கள் சாப்பாட்டைத் தவிர்க்க முயல்வார்கள்.
அவர்கள் உணவைப் பிரித்து உட்கொண்டால் உண்ட மயக்கம் வராது. அதிலும் தேர்வு தினத்தன்று உணவைத் தவிர்ப்பது கூடாது. தொடர் உழைப்பால் ஏற்கெனவே களைத்துப் போயிருக்கும் உடலுக்கு, போதிய ஊட்டம் தராது போனால் மேலும் சோர்ந்துபோய்த் தேர்வு எழுதுவதை அது பாதித்துவிடக்கூடும்.
போதிய தூக்கம் முக்கியம்
படிக்கும்போது இடையிடையே தண்ணீர் பருகுவது மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் சீராகச் செல்ல உதவும். மேலும், தேர்வு நேர மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை காரணமாக மலச்சிக்கல் நேரவும் வாய்ப்புண்டு. எளிமையான பழங்களை அப்படியே சாப்பிடுவது கோடைக்காலத்துக்கே உரிய உடல் உபாதைகளையும், இதர சிக்கலையும் சமாளிக்க உதவும். பழங்களை ஐஸ் சேர்த்து ஜூஸாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இதர தினங்களில் கண் விழித்துப் படித்தாலும், தேர்வு நேரத்தில் குறைந்தபட்ச உறக்கத்தை உறுதி செய்வது அவசியம். படித்தது நினைவில் நிற்கவும், தேர்வறையில் களைப்பில்லாது செயலாற்றவும் முந்தைய இரவின் தூக்கம் முக்கியமானது.
மருவத்துவரிடம் ஆலோசனை பெறலாம்
மாணவர்களின் தேர்வு நேர உணவூட்டத்தில் பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளும் உலர் பழங்களும் இடம்பெறுவது கூடுதல் ஊட்டத்துக்கு உதவும். கொறிப்பதற்கு என பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் வேகவைத்த பயறு, தானியங்களை மாலையில் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். சரிவரச் சாப்பிடாததன் ஊட்டக்குறைவை இவை நேர் செய்யும். தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் மாணவர்கள் தேர்வுக்குச் சற்று முன்பாக உரிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ஒவ்வாமை, வலிப்பு போன்றவற்றுக்கான மாத்திரைகள் சோர்வு அல்லது தூக்க உணர்வைத் தரலாம். அதனால் மாணவர்கள் தேர்வு நேரத்தில் தடுமாறவோ மாத்திரைகளைத் தவிர்க்கவோ செய்வார்கள். மருத்துவ ஆலோசனையின்படி தேர்வு நேரத்துக்கென மாற்று மருந்துகளை அவர்கள் பரிசீலிக்கலாம்.
தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, சிறு காயம் என அவசரத் தேவை, முதலுதவிக்கான முறையான மருந்துகளையும் மருத்துவப் பரிந்துரையின் பேரில் முன்கூட்டியே வீட்டில் வைத்திருப்பது தேர்வு நேரப் பதற்றத்தைக் குறைக்கும். பொதுத் தேர்வு நடைபெறும் காலம் கோடை என்பதால் அந்தப் பருவத்துக்கான அம்மை, கண் பாதிப்புகள் போன்ற எளிதில் தொற்றக்கூடிய தொந்தரவுகள் வரக்கூடும்.
எனவே, வெளியிடங்களில் புழங்கும்போதும், சக மாணவர்களிடமிருந்தும் அவை தொற்றாதிருக்க மாணவர்களை அறிவுறுத்துவது பெற்றோரது கடமை. இதுதவிர உடல் வேர்க்கையில் தலைக்குக் குளிப்பது, குளிரான நீர் அருந்துவது, ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போன்றவற்றால் சளி பிடித்துச் சங்கடங்கள் வரலாம் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.