Published : 12 Mar 2019 11:45 AM
Last Updated : 12 Mar 2019 11:45 AM

புகழ்பெற்ற முதல் பெண்கள்

ஆணுக்குப் பெண் சரி நிகர் என்பதை அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து சாதனைகளை நிகழ்த்துவதன் மூலம் பெண்கள் நிரூபித்துவருகிறார்கள். கலை, இலக்கியம், அரசியல், விளையாட்டு, பாதுகாப்புப் பணி, சாகசங்கள் செய்வது என அனைத்திலும் சாதித்த இந்தியப் பெண்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதில் சில முக்கியத் துறைகளில் முதல் முறையாக ஒரு விஷயத்தைச் செய்து இறவாப் புகழடைந்த பெண்கள் இவர்கள்:

bulajpgபுலா செளத்ரிright

>> புலா செளத்ரி

மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் 1970-ல் பிறந்தவர். கில்ப்ரல்டார் ஜலசந்தி, திர்ரீனியன் கடல், குக் ஜலசந்தி, டொரோனிய வளைகுடா, கட்டாலின கால்வாய் ஆகிய ஐந்து கண்டங்களில் உள்ள கடல் கால்வாய்களை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண். உலக அளவில் ஏழு கடல்களை நீந்திக் கடந்த முதல் பெண்ணும் இவரே. பத்மஸ்ரீ, அர்ஜுனா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

>> பச்சேந்த்ரி பால்

உத்தராகண்ட் மாநிலத்தில் 1954-ல் பிறந்தவர். 1984-ல் மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் என்ற புகழை அடைந்தார். பத்மஸ்ரீ, தேசிய சாகச விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

>> அதிதி பந்த்

நாக்பூரில் பிறந்த கடலியல் நிபுணரான அதிதி, 1983-ல் ‘அண்டார்டிகா கண்டத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்’ ஆனார். இதற்காக இந்திய அரசு வழங்கும் ‘அண்டார்டிகா விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.

>> ராதிகா மேனன்

இந்தியக் கடற்படையின் மெர்செண்ட் நேவி கேப்டனான முதல் பெண். வங்காள விரிகுடாவில் மூழ்கும் நிலையில் இருந்த படகிலிருந்து ஏழு மீனவர்களை மீட்டதற்காக, ஐ.நா. சார்பு நிறுவனமான சர்வதேசக் கடல்சார் அமைப்பு (International Maritime Organisation) 2016-ல் இவருக்கு ‘கடலில் அரிதான துணிகரச் செயலுக்கான’ விருதை வழங்கியது. அந்த விருதைப் பெற்ற முதல் பெண் இவர்தான்.

diana-munaivarjpgடயானா - ஆஷா100 

>> டயானா எடுல்ஜி

1956-ல் மும்பையில் பிறந்தவரான டயானா ஏடுல்ஜி இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்த இவர் மகளிர் டெஸ்ட் வரலாற்றில் அதிகப் பந்துகளை வீசிய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

>> முனைவர் ஆஷா பாண்டே

 ஃபிரெஞ்சு மொழியை இந்தியாவில் பிரபலப்படுத்தியவரான இவர் 2010-ல் ஃபிரெஞ்சு அரசின் மிக உயரிய விருதான செவாலியே விருதைப் பெற்றார். செவாலியே விருது வாங்கிய முதல் இந்தியப் பெண் இவர்தான்.

>> நீரு சத்தா

டெல்லியைச் சேர்ந்த சட்ட நிபுணரான இவர் ஐ.நா. சார்பு அமைப்பான சர்வதேசக் கடல் சட்டத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண். 2017-ல் தொடங்கிய இவரது பதவிக் காலம் 2026-ல் நிறைவடைகிறது.

>> சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தையின் தலைமை இயக்குநர், தலைமை நிர்வாக இயக்குநர் பதவிகளை வகித்த முதல் பெண். தேசியப் பங்குச் சந்தையைத் தொடங்குவதற்கான குழுவில் இடம்பெற்று அதில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 

>> டெஸ்ஸி தாமஸ்

கேரளத்தைச் சேர்ந்த இந்த வானியல் அறிவியலாளர் அக்னி-IV ஏவுகணைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற புகழைப் பெற்றார். இந்தியாவின் ‘ஏவுகணை மனிதி’ என்று அழைக்கப்படுபவர்.

>> பக்தி ஷர்மா

மும்பையில் பிறந்து உதய்பூரில் வளர்ந்தவரான பக்தி ஷர்மா, அண்டார்டிக் பெருங்கடலில் ஒரு டிகிரி கடும் குளிரில் 41.4 நிமிடங்களில் 2.25 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை புரிந்த முதல் ஆசியப் பெண். உலகின் ஐந்து பெருங்கடல்களிலும் நீந்தியவர். டென்சிங் நார்கே தேசிய சாகச விருதைப் பெற்றவர்.

>> ஆரதி சாஹா

1940-ல் கல்கத்தாவில் பிறந்த நெடுந்தூர நீச்சல் வீராங்கனை. 1959-ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண் ஆனார். 1960-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை ஆனார்.

>> மேரி பூணன் லூகோஸ்

பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1886-ல் பிறந்த மகப்பேறு மருத்துவரான இவர் இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினரும் இவரே. 1975-ல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

>> சி.பி.முத்தம்மா

கர்நாடகத்தின் கொடகு மாவட்டத்தில் பிறந்து சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்த இவர் இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பெண். இந்திய அயலுறவு சேவைத் துறையில் சேர்ந்த முதல் பெண்ணும் இவரே. 1970-ல் ஹங்கேரிக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் தூதர் என்ற புகழையும் அடைந்தார்.

1986-ல் இந்தியாவின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தை பிரசவிக்கக் காரணமாக இருந்த மகப்பேறு மருத்துவர். 2011-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

>> கமலா சோஹோனி

மத்தியப் பிரதேசத்தில் 1912-ல் பிறந்த இவர் உயிரி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் இந்தியாவில் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற புகழை அடைந்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மையத்தில் (Indian Institute of Science) படித்த முதல் பெண்ணும் இவர்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x