Published : 17 Mar 2019 12:47 PM
Last Updated : 17 Mar 2019 12:47 PM

சூழல் காப்போம்: சிற்றுண்டிக்குப் பானை

எங்கள் வீட்டில் இப்போதெல்லாம் சணல் பைகளையும் துணிப்பைகளையும்தான் பயன்படுத்துகிறோம். சமையலறைக்குப் பித்தளை, கண்ணாடி, பீங்கான் போன்றவற்றில் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். உணவுப் பொட்டலத்துக்குப் பாக்கு மட்டைத் தட்டு, வாழையிலை போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைப் படிப் படியாகக் குறைத்துச் சுற்றுச்சூழலைக் காக்க உறுதிகொண்டுள்ளோம்.

- மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

பிளாஸ்டிக் தடைக்கு முன்பே துணிப்பை எடுத்துச் செல்வது எங்கள் வழக்கம். விழா நாட்களில் வாசலில் பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்களைக் கட்டுவதில்லை. குடிநீரைச் செம்பு, பித்தளைத் தவலைகளில்  பிடித்துவைத்துப் பயன்படுத்துகிறோம். காகிதத் துண்டுகளைக் கூழாக்கி என் பாட்டி செய்த காகிதக் கூடையைப் பல  ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறேன். பிளாஸ்டிக் நாற்காலிகளுக்குப் பதில் தற்போது மூங்கில், மர நாற்காலிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். வெளியூர் களுக்குச் செல்லும்போது பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டப்பாக்களுக்குப் பதில் வாழை, தையல் இலையில் உணவுப் பொருட்களை எடுத்துச்செல்கிறோம். சாப்பிட்டுவிட்டு இந்த இலைகளைத் தூக்கியெறிவதால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பிரச்சினையும் வராது. பிளாஸ்டிக் கவரில் அடைப்பதற்குப் பதில் பாலைக் கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி விநியோகிக்கலாம். திருமணம் போன்ற விழாக்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்குப் பதில் உலோக டம்ளர்களை வைக்க வேண்டும்.

- டி.சிவா, செங்கல்பட்டு.

எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பொருட்களைப்  பயன்படுத்து வதில்லை. பாக்கு மட்டையால் செய்யப்பட்ட தட்டு, டம்ளர், வாழைச் சருகில் தைத்த தொன்னைகள் போன்ற வற்றைத்தான் பயன்படுத்துகிறோம்.  மளிகைப் பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்லும்போது துணிப் பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். வெளியூர் களுக்குச் செல்லும்போதுகூட எவர் சில்வர் டம்ளர்களைத்தான் எடுத்துச் செல்வோம்.  வழியில் அந்த டம்ளரில்தான் காபி வாங்கிக் குடிப்போம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கே சின்னக் கடைகளில்கூடக் காகிதப் பைகளில்தான் பொருட்களை மடித்துத் தருவார்கள். எங்கள் வீட்டு விசேஷங்களில் எப்போதும் வாழை இலை, எவர்சில்வர் டம்ளர் வைப்பதுதான் வழக்கம். நம்முடைய அன்றாட வாழ்வில் இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டுவந்தால்தான்  இதைக் கடைப்பிடிக்கச் சொல்லி அடுத்தவருக்கு ஆலோசனை வழங்க முடியும். சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருந்தால்தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் பசு ஒன்று பிளாஸ்டிக் பையை மென்றுகொண்டிருக்கும். அந்தக் கிராம மக்கள் பலரும் ‘லட்சுமி பிளாஸ்டிக்கை சாப்பிடாதே’ எனச் சொன்னாலும் லட்சுமி பசு பிளாஸ்டிக் பையைக் கீழே போடாது. பிறகு ஒரு காய்கறி வியாபாரி வந்து முட்டைக்கோஸைச் சாப்பிடக் கொடுத்ததும்  லட்சுமி பிளாஸ்டிக் பையைக் கீழே போட்டுவிட்டுக் காயைச் சாப்பிடத் தொடங்கும். பிளாஸ்டிக் அபாயத்தை நமக்கு இதைவிட வேறு எப்படி உணர்த்த முடியும்?

- வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x