Published : 22 Sep 2014 01:12 PM
Last Updated : 22 Sep 2014 01:12 PM

பார்வை: பாதிக்கப்பட்டவர்களின் குரல்

மதுரையில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு வன்முறை அரங்கேறியிருப்பது, பெண்கள் மீது தொடரும் வன்முறையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி இருவரும் திருமங்கலம் அரசுக் கல்லூரியில் படித்துவரும் முதல் தலைமுறையினர். உடல்நலக் குறைவால் மீனாவின் தந்தை இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது. அங்காள ஈஸ்வரியின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி.

பொருளாதாரத் தேக்கத்திலும் வறுமையிலும் இருந்து மீண்டு வருவதற்கு முன், இந்த மாணவிகளுக்கு நிகழ்ந்துள்ள கொடுமை, அவர்களின் குடும்பத்திற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது மாணவிகள் முகமும் உடலும் மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த மாணவிகள் மீது ஆசிட் வீசியது யார்? எதற்காக இந்த ஆசிட் வீச்சு? என்ற கேள்விகளுக்கு விடை காண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மாணவிகளின் எதிர்காலத்தை நேர்செய்துவிட முடியுமா?

ஒரு பெண்ணின் ஆளுமையைக் குலைக்க, அவளைத் தனிமைப்படுத்த, அவமானப்படுத்த நினைக்கும் யாரும் ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கு பிறகான வாழ்க்கை எப்படியிருக்கிறது? ஆசிட் வீச்சு சம்பவங்களுக்குச் சட்டம் வழங்கும் தண்டனை என்ன? இது போன்ற பல கேள்விகள் ஒரு ஆசிட் வீச்சு சம்பவத்தின்போது எழுந்தாலும் அவை பெருமளவில் கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

கருகும் கண்மணி

15 வருடங்களுக்கு முன்பு ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான கண்மணி இப்போதும் அதன் பாதிப்பிலிருந்து மீள போராடிக்கொண்டிருக்கிறார். “குடிபோதையில் என்னை ஆசிட் குடிக்க வைத்தார் என் கணவர். ஆசிட் குடிச்சதுனால என் உடம்பில் ரத்த அணுக்கள் அழிந்துவிட்டன. மாதம் ஒரு முறை ஆஸ்பத்திரிக்குப் போய் ரத்தம் ஏற்றிக்கொண்டு வருகிறேன். பித்தப்பை பாதி எரிந்துவிட்டது. மீதமுள்ள பித்தப்பையில் இப்போ அல்சர் வந்திருக்கிறது. ஹீமோகுளோபின் 3 சதவிகிதம் இருப்பதால் நடக்க முடியாமல் இருக்கிறேன்” என்கிறார் கண்மணி.

குடும்பப் பிரச்சினை காரணமாகக் கண்மணிக்கு அவருடைய கணவர் வழங்கிய தண்டனை இது. ஆசிட் குடித்ததால் 25 நாட்கள் ஒரு ஸ்பூன் தண்ணீர்கூட விழுங்க முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டார் அவர். சம்பவம் நடந்து 15 வருடங்கள் கடந்த பின்பும் கண்மணியின் வாழ்க்கையில் இப்போதும் அந்தச் சம்பவம் உயிர் வலி உண்டாக்கும் நிகழ்வாகவே உள்ளது.

மருத்துவ செலவுக்காகக் கண்மணியின் மகன் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்கிறார். தற்போது பித்தப்பையில் உருவாகியிருக்கிற அல்சரைச் சரிசெய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவச் செலவுக்கும் மற்றவர்களின் உதவியை நாடிவருகிறார் கண்மணி.

போராடும் ராணி

14 வருடங்களுக்கு முன்பு ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராணி, அதன் பிறகு 9 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இப்போதும் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. “என்னை இந்த நிலைமைக்குத் தள்ளிய கணவர் மீது காவல் துறையோ, நீதிமன்றமோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்கிறார் ராணி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள ராணியின் வழக்குக்குச் சரியான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்.

ஆசிட் வீச்சுக்கு எதிராக தனிச்சட்டம் இல்லாத காரணத்தால் ஆசிட் வீச்சு வன்முறையைப் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறது ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ என்கிற அமைப்பு.

இந்தச் செயலை கொடிய குற்றப் பின்னணியில் சேர்க்க வேண்டும். அதில் ஈடுபடும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். ஆசிட் வீச்சு வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும். அரசே முன்வந்து ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும். அவர்களின் மருத்துவச் செலவுக்கு அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆசிட் வீச்சைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

“தமிழகத்தில் ஆசிட் விற்பனை மற்றும் பயன்பாட்டை முறைப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் குறித்து வரைவு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆசிட் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் நடைமுறையில் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மணிகண்டன்.

இது குறித்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறுகையில், “இருக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்தினாலே பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க முடியும். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு”என்று சொல்கிறார்.

இருக்கும் சட்டங்களை வலுவாக நடைமுறைப்படுத்தி ஆசிட் வீச்சு சம்பவங்களைத் தடுப்பதே பெண்கள் மீதான வன்கொடுமையைத் தடுப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக அமையும்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x