Published : 09 Mar 2019 02:06 PM
Last Updated : 09 Mar 2019 02:06 PM

நெகிழி பூதம் 06: திருமணத்தில் ஞெகிழி: வழிகாட்டும் கேரளம்

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கொலயாடு எனும் கிராமத்தில் நிகழும் திருமணங்களில் ஞெகிழிப்  பொருட்களைப் பயன்படுத்தினால், திருமணப் பதிவுச்சான்று பெற இயலாது என்று அந்தப் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளத்தின் பல மாவட்டங்களில் இது போன்ற பசுமை நெறிமுறைகளை (Green Protocol) உள்ளூர் நிர்வாகங்கள் வரையறுத்துள்ளன. வாழை இலை, எவர்சில்வர் தட்டு, பீங்கான் தட்டு, எவர்சில்வர் கோப்பை, எவர்சில்வர் கிண்ணங்கள், எவர்சில்வர் கரண்டிகள் போன்றவற்றை விருந்துக்கும், பூ,  இலை போன்ற இயற்கைப் பொருட்களை அலங்காரத்துக்கும், ஞெகிழிப் பதாகைக்குப் (flex)  பதிலாகத் துணிப் பதாகையை விளம்பரத்துக்கும் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

இதையடுத்து புதுமணத் தம்பதிகள் இந்தச் செயல்பாடுகளை மனமுவந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதை முக்கியமான சூழலியல் நேய சமுதாயப் போக்காகப் பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் பெரும்பாலான கேரளத் திருமணங்கள் பசுமை நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

திருமண மண்டபங்கள் குப்பையைக் கையாள்வதற்கான நெறிமுறைகள் பெங்களூருவிலும் வகுக்கப்பட்டுள்ளன. ஞெகிழி தண்ணீர்க் குடுவைக்குப் பதில், சுத்தமான ஆர்.ஓ. தண்ணீர் வசதியை மண்டபங்கள்  கொண்டிருக்க வேண்டும். தண்ணீர், உணவை விநியோகிக்க எவர்சில்வர், கண்ணாடி அல்லது பீIங்கான் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். வாழை இலை போன்ற மக்கக்கூடிய பொருட்களைக்  கையாள்வதில் இருக்கும் சிக்கலைத் தவிர்க்க எவர்சில்வர் தட்டுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.

சில முயற்சிகள்

தமிழகத்திலும் பல தம்பதிகள் சூழலியலுக்கு உகந்த திருமண விழாக்களை முன்னெடுத்துள்ளனர். மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களில் இருந்து திருமணப் பத்திரிக்கை, துணிப் பதாகை, புட்டித் தண்ணீருக்குப் பதில் மூலிகைத் தண்ணீர், அளவான உணவு வகைகள், இயற்கையில் கிடைத்த பொருட்களை வைத்தே மேடை அலங்காரம், துணிப்பையில் தாம்பூலம் என்று தங்களுக்குத் தாங்களே பசுமை நெறிமுறைகளை வரையறுத்துப் பல இளைஞர்களுக்கும் முன்னோடிகளாகச் செயல்பட்டுள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் சூழலியல் ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கான எவர்சில்வர் தட்டு, குவளைகளை வாங்கி வாடகைக்குக் கொடுக்க முன்வந்துள்ளனர். மாற்றம் ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் நடக்கும் அனைத்துத் திருமணங்களும் ஞெகிழி இல்லாத திருமணமாக நடக்கும் காலத்தை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x