Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்

நோபல் பரிசு பெறத் தகுதியுள்ள, திறமையான, தனித்துவமிக்க அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளரான வில்லியம் டி. வோல்மன் (William T. Vollmann) பருவநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்கள் கொண்ட பெரிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

‘Carbon Ideologies’ எனப்படும் அந்த நூலின் முதல் பாகம் ‘No Immediate Danger’, இரண்டாம் பாகம் ‘No Good Alternative’. இரண்டுமே விவாதங்களை உருவாக்கக்கூடியவை. ஆற்றல் நுகர்வு சித்தாந்தத்துடன் நம் சமூகம் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்று முதல் பாகம் ஆராய்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக உலகம் முழுக்கப் பல ஆண்டுகளுக்கு வோல்மன் தொடர்ச்சியாகப் பயணம் சென்றிருக்கிறார். அவருடனான உரையாடலின் ஒரு பகுதி:

பருவநிலை மாற்றத்தைச் சிலர் மறுப்பதற்கு அவர்களுடைய மோசமான நம்பிக்கைகள்தாம் காரணம் என்று நினைக்கிறீர்களா?

இதை மனித இயல்பு என்று நினைக்கிறேன். பருவநிலை மாற்றத்தை நீண்ட காலமாக மறுத்து வந்திருக்கிறேன். அப்போது, கவலைப்படுவதற்கு எனக்கு வேறு விஷயங்கள் இருக்கின்றன என்று நினைத்தேன். நான் இறந்துவிட்ட பிறகு, என்றைக்கோ மக்களைப் பாதிக்கப்போகும் பிரச்சினைகளைப் பற்றியோசித்து, இப்போது மன நெருக்கடியை அனுபவிக்க விரும்பவில்லை. இப்போதும்கூட அது ஒரு பிரச்சினை இல்லை என்று நினைக்க விரும்புகிறேன்.

ஏனென்றால், அதற்கு மாற்றுவழியும் பரிதாபகரமாகவே உள்ளது. எண்களுடனான ஓரளவு பரிச்சயம், அறிவியல் முறைகள், அறிவியல் நிபுணர்களின் மேல் நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு, “ஆம், பருவநிலை மாற்றம் ஒரு தீவிரமான பிரச்சினை” என்று ஒப்புக்கொள்ள முடியும்.

சராசரி நபர் ஒருவரிடம் பூமி சூரியனைச் சுற்றி வருவதை நிரூபிக்க முடியுமா என்று கேட்டால், “செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் அல்லது நாசா வெளியிட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்” என்று அவர் பதிலளிக்கக்கூடும். இப்படிப்பட்ட படங்கள் இல்லையென்றால், கோபர்நிகஸ் செய்ததையேதான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

இந்தப் புத்தகத்தின் மையக்கருத்தாக நீங்கள் முன்வைக்கும் ‘கரி எரிபொருள் சித்தாந்தங்கள்’, அதாவது புதைபடிவ எரிபொருளைத் தொடர்ந்து அதிக அளவில் பயன்படுத்துவதற்காக மக்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?

நம் எல்லோருக்கும் நம்பிக்கைகள், உணர்ச்சிகள், விருப்புகள் இருக்கின்றன. நம்முடைய சொந்த வசதி, இன்றைக்கு இருப்பதைவிட நாளைக்குச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே அவை அமைந்திருக்கின்றன. நினைத்த இடங்களுக்கு கார்களை ஓட்டிச் செல்ல முடியாது அல்லது நமக்குத் தேவையான நேரத்தில் வெப்பநிலையை அல்லது குளிரைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால், நம் வாழ்க்கை மோசமாகும் என்றே பெரும்பாலோர் நினைக்கிறார்கள்.

ஆனால், அதற்காக எதிர்காலத்தில் மிகக் குறைந்த வசதியுடனும் குறைந்த பாதுகாப்புடனும்கூட நம்முடைய வாழ்க்கையைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோமா? நாம் அடைந்துள்ள வசதிகளை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் அடைவதைத் தடுக்கும் சுபாவம் கொண்டவர்களாக இருக்கப் போகிறோமா?

பருவநிலை மாற்றம் சார்ந்த ஒரு செய்தியைச் சொல்லும்போது, ஊடகங்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

என் கையில் ஒரு கண்ணாடிக் கோப்பை இருக்கிறது. என் கையை விரிக்கும்போது கண்ணாடிக் கோப்பை இடம் தவறினாலும் கீழே விழாது என்று சொல்ல முடியாது. அதேநேரம் கண்ணாடிக் கோப்பை தரையில் விழுந்துவிடும் என்பதை நான் முன்கூட்டியே கணிக்க முடியும். அதனால்தான் பருவநிலை மாற்றம் குறித்த கணிப்புகள் எந்த அளவுக்குத் துல்லியமானவை என்பது தொடர்பான கட்டுரைகளை எழுதலாம். நான் புரிந்துகொண்டவரை, பருவநிலை மாற்றம் குறித்த கணிப்புகள் துல்லியமானவை.

வெள்ளக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, இது போன்ற விஷயங்களில் நாம் செய்வதைப் போல, மோசமான சூழலுக்குத் தயாராவதுதான் புத்திசாலித்தனம். ஏனென்றால், அது மட்டுமே தற்போது சாத்தியம். பருவநிலை மாற்றம் உடனே வராது என்று நம்புவோம். ஆனால் அப்படி நடந்துவிட்டால் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்குச் சாத்தியமான தீர்வுகளில் ஒன்றாக அணுசக்தி முன்வைக்கப்படுகிறது. ஜப்பானில் 2011-ல் சுனாமியின்போது ஏற்பட்ட அணு உலை வெடிப்புக்குப் பிந்தைய மாற்றங்களை ஆய்வுசெய்ய ஃபுகுஷிமாவுக்கு ஐந்து முறை சென்றிருக்கிறீர்கள். அதிலிருந்து நீங்கள் அறிந்துகொண்ட மிகப் பெரிய விஷயம் என்ன?

முதலில், மக்கள் நினைக்கும் அளவுக்கு அது தூய்மையான ஆற்றல் உற்பத்தி முறை அல்ல; ஓரளவு தூய்மையானது என்று சொல்லலாம். சுரங்கத்தில் யுரேனியம் எடுப்பது, அதன் இடப்பெயர்வு, செறிவூட்டுதல், புது உலைக் கட்டமைப்பு போன்றவை எல்லாம் புதைபடிவ எரிபொருளை எரிக்கத்தானே செய்கின்றன.

அத்துடன் அணு உலைகள் மாற்று மின்னாக்கிகளைக் (ஜெனரேட்டர்) கொண்டிருக்க வேண்டும். சாதாரண மின் இணைப்பில் பாதிப்பு ஏற்படும் நேரத்தில் எரிபொருள் கரைந்துவிடுதைத் தடுக்க இவை தேவை. ஃபுகுஷிமாவில் நிகழ்ந்தது இதுதான். டெம்கோ (Temco) நிறுவனத்திடம் இருந்த எரிபொருளைக் கொண்டு செயல்படும் மாற்று ஜெனரேட்டர்கள் சுனாமியை எதிர்கொள்வதற்குத் தகுந்தவையாக இருக்கவில்லை. அதனால்தான் எரிபொருள் தண்டுகள் உருகின.

indraya-3jpgவில்லியம் டி. வோல்மன்right

ஃபுகுஷிமாவில் இக்கொடூரம் தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மிகக் கடுமையான முயற்சி, செலவில் அணு உலைகளைச் சுற்றிப் பனிக்கட்டி சுவர்களை டெம்கோ நிறுவனம் எழுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து உறைநிலையில் வைப்பதற்கு மிகப் பெரிய அளவில் ஆற்றல் தேவை. நிலத்தடி நீர் கடலில் கலந்துவிடாமல் காப்பதே இதன் நோக்கம். அதன் ஓட்டத்தை அவர்கள் குறைத்திருந்தாலும், இப்போதும் சில டன் கதிரியக்க நீர் கடலில் கலந்து கொண்டுதான் இருக்கிறது.

அத்துடன் தங்கள் சமூக வாழிடத்தை இழந்த ஏராளமானோர் மீண்டும் தங்கள் வாழ்விடத்துக்குத் திரும்புவதற்கான சாத்தியமே அங்கே இல்லாமல் இருக்கிறது. ஃபுகுஷிமா விபத்தால் அப்பகுதியில் இருந்து வெளியேறியவர்களுடைய குடும்ப வரலாறென்பது 100 ஆண்டுகளுக்கு முந்தையது. திடீரென்று ஒரு நாள் அவர்கள் பிறந்த இடத்துக்குச் செல்ல முடியாது என்பதும், முன்னோர்களுடைய கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தச் செல்ல முடியாது என்பதும் மிகவும் சோகமான விஷயம்தானே.

2011-ம் ஆண்டில் ஃபுகுஷிமா விபத்தில் வெளியான கதிரியக்கப் பொருளான சீசியம் கதிரியக்கக் கசிவு (ceasium contamination) 300 ஆண்டுகள்வரை அகலாது. சில இடங்களில் இலைகள், தளிர்கள், மண் ஆகியவற்றை முழுமையாக அகற்றுவதன் மூலம், சீசியம் கதிரியக்கத்தின் வீரியம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அநேக இடங்களில் சீசியம் இன்னும் மண்ணிலேயே இருக்கிறது. ஒரு மீட்டர் ஆழமுள்ள நீர்நிலைகள் நியூட்ரான் கவசமாகச் செயல்படும் என்று சொல்லி, அதுபோன்ற இடங்களைக் கதிரியக்கத் தூய்மைப்படுத்தத் தேவையில்லை என்று சொல்கிறார்கள். காடுகளைக் கொண்டுள்ள மலைகளை என்ன செய்யப் போகிறார்கள்? மரங்களை எல்லாம் வெட்டிவிடுவார்களா? இது அன்றாடம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுங்கனவாக இருக்கிறது.

- எரிக் ஆலன் பீன், தமிழில்: சு. அருண் பிரசாத் | நன்றி: Vox இணையதளம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x