Last Updated : 23 Mar, 2019 10:08 AM

 

Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

எய்ட்ஸை வென்ற மனிதர்

மருத்துவ உலகில் அதியசங்களுக்குப் பஞ்சமில்லை. முடியாது என்று நினைக்கும் விஷயம் எளிதாக  நடந்து முடிந்துவிடும். முடியும் என்று நினைக்கும் விஷயங்கள் முடியாமல், வாழ்க்கையையே முடித்துவிடும். சிகிச்சையே கிடையாது என்று கைவிரிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயிலிருந்து லண்டனைச் சேர்ந்த ஒருவர் மீண்டு, அந்த நோயிலிருந்து முழுமையாக மீண்ட இரண்டாவது மனிதராகி உள்ளார்.

மருத்துவத் துறையில் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படும் ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் இதை ஆராய்ச்சியாளர்கள் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த டிமோதி ரெய் பிரவுன் என்பவரும் இந்த லண்டன் நோயாளியைப் போலவே ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தார். 12 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கு ஜெர்மனியில் ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபட்ட முதல் மனிதரானார். இன்றுவரை ஹெச்.ஐ.வி. தொற்று இல்லாமல் அவர் வாழ்ந்துவருகிறார். அந்தப் பட்டியலில் இரண்டாவதாகச் சேர்ந்திருக்கிறார் லண்டன் மனிதர்.

மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அதாவது எச்.ஐ.வி நோய்த்தொற்றை எதிர்க்கும் அரிய மரபணு மாற்றத்தைக் கொண்டிருக்கும் ஒரு பெறுநரிடம் இருந்து மூன்று ஆண்டுகளாக எலும்பு மஜ்ஜை செல்களைச் சேகரித்து, பின்னர் இதை அறுவைசிகிச்சை மூலம் செலுத்தி சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

மேலும், 18 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றவர் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டதன் விளைவாக வைரஸ் தொற்று நீக்கப்பட்டுள்ளது என்று இந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திர குப்தா சொல்கிறார்.

லண்டன் நோயாளிக்கு சிகிச்சை அளித்த பேராசிரியர் ரவீந்திர குப்தா இந்த சிகிச்சை முறையைப் பற்றி நேர்மறையாகவும் அதே வேளையில் எச்சரிக்கையுடன் கூடிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். “சிகிச்சை பெற்றவரின் உடலில் ஹெச்.ஐ.வியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்காக முற்றிலும் குணமாகிவிட்டது என்று கூற முடியாது. சாத்தியப்படும் வகையில் ஹெச்.ஐ.வி. வைரஸை நீக்கிக் காட்டியிருக்கிறோம். ஆனால், நீண்ட நாள் கண்காணிப்பு மிகவும் அவசியம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நம்பிக்கை அளிக்கும் எதிர்காலம்

எய்ட்ஸ் நோயாளிகள் எல்லோருக்குமே இந்த அறுவை சிகிச்சையைச் செய்து, அவர்களை இந்நோயிலிருந்து விடுவிக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழலாம். ஆனால், இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை என்பது ஆபத்தான சிகிச்சை. ஏற்கெனவே பல எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் செய்துபார்த்துத் தோல்வியடைந்த சிகிச்சை. நீண்ட காலத்துக்குப் பிறகு தற்போதுதான் இரண்டாவது நோயாளிக்கு இந்தச் சிகிச்சை முறை பலன் அளித்திருக்கிறது. இதன் மூலம் எச்.ஐ.வி.யைக் குணப்படுத்தக்கூடிய முழுமையான மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருத முடியாது.

இன்றைய நிலவரப்படி உலகில் சுமார் 3.7 கோடிப் பேர் ஹெச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1980-களில் தொடங்கி இன்றுவரை ஹெச்.ஐ.வி. தொற்று நோய்  3.5 கோடி மக்களைக் காவு வாங்கியிருக்கிறது. மனித இனத்தைப் பேரளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இந்த எய்ட்ஸ் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்ற நம்பிக்கையை இந்த சிகிச்சைமுறை அளித்துள்ளது. எய்ட்ஸ் நோயை இனியும் உயிர்க்கொல்லி நோயாகக் கருத வேண்டியதில்லை என்று இந்த சிகிச்சை முறை உலகுக்கு அறிவித்துள்ளது. இந்த சிகிச்சையில் உள்ள சிக்கல்கள் நீங்கும்போது, எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் புதுவாழ்வு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x