Last Updated : 23 Mar, 2019 10:08 AM

 

Published : 23 Mar 2019 10:08 AM
Last Updated : 23 Mar 2019 10:08 AM

மனநலன் காக்கும் பழங்கள், காய்கறிகள்

பழங்களையும் காய்கறிகளையும் சீரான முறையில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மனநலனுக்கும் சிறந்தது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஜர்னல் ஆஃப் சோஷியல் சயின்ஸ் அண்ட் மெடிசென்’ என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கூடுதலான அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது என்பது, மன நலனில் கூடுதலாக எட்டு நாட்கள் நடைப்பயிற்சி செய்த பலனை அளிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

“தினசரி குறைவான பழங்கள், காய்கறிகள் சாப்பிடுபவர்களைவிட அதிகமான பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுபவர்களின் மனநலன் செறிவாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என்று சொல்கிறார் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த லீட்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஹவ்லி.

மனச்சோர்வைக் குறைக்கும் வால்நட் பருப்புகள்

வால்நட் பருப்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தவர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் 26 சதவீதம் குறைவாக இருப்பதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பருப்பையும் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது பாதாம் போன்ற மற்ற பருப்புகளைச் சாப்பிட்டவர்களிடம் மனச்சோர்வு அறிகுறிகள் 8 சதவீதம் குறைவாக இருக்கின்றன.

‘நியூட்ரியன்ட்ஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, வால்நட் பருப்புகள் உட்கொள்வதால் ஆற்றல், கவனத் திறன்கள் அதிகரிப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. “இதய, அறிவாற்றல் ஆரோக்கியத்துக்கும் வால்நட் பருப்புகளுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி முன்பு ஆராய்ச்சி செய்யப்பட்டது. தற்போது, மனச்சோர்வு அறிகுறிகளையும் வால்நட் பருப்புகள் குறைப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது” என்கிறார் அராப்.

மகிழ்ச்சியை அதிகரிக்கும் பூங்காக்கள்

நகரப் பூங்காவில் 20 நிமிடங்களைச் செலவிடுவது, ஒருவர் உடற்பயிற்சி செய்தாலும் செய்யாவிட்டாலும் மகிழ்ச்சி அளிப்பதாகச் சர்வதேசச் சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி இதழில் (International Journal of Environmental Health Research) வெளியான ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. “மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றிலிருந்து மீள்வதற்கும் நகரப் பூங்காக்களில் நேரம் செலவிடுவது உதவுகிறது.

பூங்காக்களுக்குச் சென்றுவந்த பிறகு, ஒருவரின் உணர்ச்சி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதை இந்த ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறோம். பூங்காக்களில் நேரம் செலவிடுவது, மக்களை மகிழ்ச்சியாக உணரவைக்கிறது” என்று தெரிவிக்கிறார் அலபாமா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹான் கே யென். உடற்பயிற்சி செய்ய முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள்கூட, பூங்காக்களில் நேரம்  செலவிடும்போது அவர்களின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x