

மார்ச் 5: ஃபோர்ப்ஸ் இதழின் 2019-ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி 13-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அமேசான், மின் வர்த்தக நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இரண்டாவது, மூன்றாவது இடங்களை பில் கேட்ஸ், வாரன் பஃபெட் ஆகியோர் பிடித்திருக்கின்றனர். 2018-ம் ஆண்டு, 19-வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, இந்த ஆண்டு ஆறு இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை
மார்ச் 8: பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடப்பட்டுவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் (மார்ச் 6 அன்று) தெரிவித்திருந்தது. ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ரஃபேல் ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இல்லை என்று கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையில், மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், ரஃபேல் ஒப்பந்தங்கள் திருடப்படவில்லை, அவற்றின் பிரதிகளை மனுதாரர்கள் பயன்படுத்தியதைத்தான் தெரிவித்ததாக அவர் பின்னர் கூறினார். இந்த வழக்கு விசாரணை மார்ச் 14 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையத்தில் இந்தியத் தலைவர்
மார்ச் 7: உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானியாக இந்தியரான சௌம்யா சுவாமிநாதன் முதன்முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார். துணைப் பொது இயக்குநராகப் பதவி வகித்துவந்த அவர், உலக சுகாதார மையத்தின் முக்கிய அறிவியல் பணிகளை மேம்படுத்துவதற்காகத் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி வழக்கு
மார்ச் 8: பாபர் மசூதி நில உரிமை வழக்கில், உச்ச நீதிமன்றம் மூவர் அடங்கிய நடுவர் குழுவை நியமித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி முன்னாள் எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நடுவர் குழுவில் வாழும் கலை அமைப்பின் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்தக் குழு ஒரு மாதத்தில் தன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு
மார்ச் 10: 2019 மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.