Published : 30 Mar 2019 05:36 PM
Last Updated : 30 Mar 2019 05:36 PM

கற்பிதமல்ல பெருமிதம் 51: வன்முறைக்கு வைப்போம் முற்றுப்புள்ளி

பொள்ளாச்சி சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுவதற்குள் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள், இது பெண்கள் நிம்மதியாக வாழ்வதற்கான  சமூகம்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சென்னை, கோவை போன்ற இடங்களில் ஐந்து, ஆறு வயதுப் பெண் குழந்தைகளைப் பாலியல் வல்லுறவு செய்ததோடு கொன்றும் போட்டிருக்கிறார்கள்.  பள்ளிக்குச் செல்லும் சின்னஞ்சிறு குழந்தைகளைப் பேருந்து உதவியாளர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள்.

திரைத் துறையைச் சேர்ந்த ஒருவர், சில பெண்களைப் பார்த்தால் கும்பிடத் தோணும்; சிலரைப் பார்த்தால் கூப்பிடத் தோணும் என்கிறார்.

பெண் வேட்பாளரின் அழகைச் சொல்லி ஓட்டு கேட்கிறார் ஒருவர்.  மூத்த தலைவர் இரண்டு கட்சிகளின் கூட்டமைப்புக்கு, இரண்டு தலைவர்களின் (ஒருவர் ஆண், ஒருவர் பெண்) நட்பை, கள்ளத்தொடர்பு என்று  பேசுகிறார்.

பெண் மீது ஏன் வன்மம்?

சாதாரணக் குடிமகன் தொடங்கி, மூத்த அரசியல்வாதி, நடிகர்வரை பெண்கள் பற்றிய பார்வை என் இவ்வளவு கோளாறாக, வன்மமாக இருக்கிறது?

மீண்டு எழுதலையும் நம்பிக்கை வார்த்தையையும் பற்றிப் பேசலாம் என்றால், எல்லாவற்றையும் பற்றிய அவநம்பிக்கைதான் மிஞ்சுகிறது. பெண்கள் கஷ்டப்பட்டுப் போராடி ஏறி வந்த படிக்கட்டுகளையும் அடைந்த உயரத்தையும் மறுத்து,  திரும்ப பிற்போக்கான பழைய நிலைக்குக் கொண்டுபோய் விடுவோமோ என்ற அச்சம் வருகிறது.

சில பெற்றோர்களோடும் பெண்களோடும் உரையாடியபோது, எதையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து பெண்ணைப் பெற்றதாலேயே பயந்து நிற்பது தெரிகிறது. என் வீட்டு உதவியாளர், “முதல் பேரக் குழந்தை ஆண்.  என் மருமகள் இப்பொழுது பெற்றெடுக்கும் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டோம்.  ஆனால், இப்போ பொம்புள புள்ளையே வேணாம்னு தோணுது” என்றார்.

பாலியல் வன்முறை என்பது பல காலமாகச் சமூகத்தில் இருந்துவந்தாலும், இப்போது அது பூதாகரமாகிவிட்டது.  இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவில் பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் இச்சைக்கு விற்கப்படுவது பற்றிய விவரணப் படத்தைச் சமீபத்தில் பார்த்தேன்.  வாதாடுபவர்கள் இன்டர்நெட்டின் வருகை பெரிய காரணம் என்கிறார்கள்.

இருக்கலாம்.  ஆனால், அதைவிடப் பெரிய காரணமாகப்படுவது வளர்ப்புதான்.

வளர்ப்பில் கோளாறு

ஏன் குடும்பங்கள், பையன்களைத் திமிர் பிடித்தவர்களாக வளர்க்கிறார்கள்?  சிறு வயது முதலே ஆண், பெண் பற்றிய நம் மதிப்பீடுகளே இத்தனை பிரச்சினைக்கும் காரணம்.  கும்பிடவும் கூப்பிடவும்தான் பெண்ணா?  அவளைச் சக மனிதப் பிறவியாக பார்க்க முடியவில்லையா?

நாம் நம் பழக்கவழக்கங்களை, மதிப்பீடுகளை, வாழ்வியல் முறைகளைத் தொடர்புபடுத்திப் பார்க்காமல் தனித் தனிக் கூறுகளாகப் பார்க்கிறோம்.  பெண் குழந்தைகள் பாதுகாப்புப் பற்றிப் பதற்றப்படும் பெற்றோர்தான், தொப்புளில் ஜிகினா ஒட்டி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அனுப்புகிறார்கள்.

பெண்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் தொலைத் தொடர்பு சாதனங்கள், ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரால், சேற்றில் பெண்களை உருளவிட்டு, உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து சேற்றை வழிந்தெடுப்பதை குளோசப் காட்சியாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மதிப்பீடுகளைக் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள்தாம், பாலியல் கொடுமை செய்தவர்களுக்குத் துணை நிற்கின்றன.

மாற்றிக்கொள்வோம் மனத்தை

தீர்வு என்ன என்று வரையறுத்துவிட முடியாதபடி, பிரச்சினை பிரம்மாண்டமாக ஆகிவிட்டது.

ஆழ் மனத்தில் பதிந்துள்ள ஆண், பெண்ணைவிட மேல் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.  தங்கள் வீட்டுப் பெண்ணையும் ஆணையும் நாங்கள் சரியாகத்தான் வளர்த்திருக்கிறோம் என்று குடும்பங்கள் நினைக்கலாம்.  இல்லை. எல்லா வீடுகளிலும் ஏதாவது ஓரிடத்திலாவது சறுக்குகிறோம். 

அப்படிக் குழந்தைகளைச் சரிசமமாக வளர்த்திருந்தாலும், அந்த வீட்டின் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி உறவுகளுக்குள் இருக்கும் பாலின பேதங்களைக் குழந்தைகள் பார்க்கிறார்கள்; கற்கிறார்கள்.  அவர்களுக்குத் திருமணமானபின், என் பாட்டி, அம்மா சமாளிக்கவில்லையா, ஈடு கொடுக்கவில்லையா என்று சொல்லிக் காட்டுகிறார்கள்.

நாங்கள் எங்கள் வீட்டுப் பெண்ணை அடக்க ஒடுக்கமாக  வளர்த்திருக்கிறோம். அவளுக்கு பிரச்சினை வர வாய்பில்லை என்று மார்தட்டாதீர்கள். தைரியமும் எதிர்த்து நிற்கும் துணிவும் இல்லாததாலேயே, பல அடக்க ஒடுக்கமான பெண்களும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.

சட்டத்தைக் கடுமையாக்கினால்  குற்றம் குறையும்; அதனால் அரசு ஏதாவது செய்யட்டும் என்று உங்கள் பங்குக்கு நீங்கள் பொறுப்பின்றி இருக்கவேண்டிய நேரம் இல்லை இது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு / வன்முறை,  வார்த்தையில், செயலில், குடும்பங்களில், அரசியலில் என அனைத்து இடங்களிலும் மேலோங்கி நிற்கும்போது  அதற்கான தீர்வும் அனைத்துத் தளங்களிலும் வர வேண்டும்.

பாலின பேதத்தை எதிர்ப்போம்

வேட்பாளர் அழகானவர் ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் அது நெளிந்து வெட்கப்பட வேண்டிய நேரமல்ல. தவறை  அந்த  இடத்திலேயே சுட்டிக்காட்ட வேண்டும்.

பெண்ணிடம், “அண்ணன் சாப்பிட்ட தட்டைக் கழுவு; உள்ளாடையைத் துவை” என்று மூத்த தலைமுறையினர்  சொன்னாலும் சரி,  பெற்றோர் சொன்னாலும் சரி,  குடும்பத்தில் சுரணை  உள்ள ஒருவராவது அதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

வீடுகளில், பயணங்களில், பொது இடங்களில், வேலைத்தளங்களில், தொலைக் காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் என எங்கு ஆண் - பெண்  பற்றிய பேதமான பார்வையோ செய்கையோ வெளிப்பட்டாலும்  கூச்சல் போடுங்கள்; ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். பெண்களை மதிப்பதாகச் சொல்லும் ஆண்களும் இந்த வாதத்தில்/ போராட்டத்தில் இணையுங்கள்.

ஆனால், இதற்குமுன் இதில் ஈடுபடும் நம் அனைவருக்கும் பாலின பேதம் பற்றி, பாலினப்பாகுபாடு எப்படி நடக்கிறது என்பது பற்றிய புரிதல்  அவசியம்.

சமத்துவத்தை நோக்கி…

ஆணும் பெண்ணும் சமம்.  ஆனால், பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள். பெண்கள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள்,  பிரச்சினை வந்தால் எதிர்கொள்ளாமல் பயந்து ஒடுங்கிவிடக் கூடியவர்கள் என  நியாயம் கற்பிக்க முற்படாதீர்கள்.

குழந்தையாகப் பிறக்கும்போது உடல்  உறுப்பால், ஆண்  பெண் என்று அறியப்படும் குழந்தை, எப்படி ஆண்மை,  பெண்மை பண்பு நிறைந்தவர்களாக ஒவ்வொரு கட்டத்திலும்  வளர்க்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பள்ளிகளில் கல்லூரிகளில்  தேவைப்படுவது பாலியல் கல்வி மட்டுமல்ல;  சமூகப் பாலினம் என்று சொல்லப்படும் ஜெண்டர்  பற்றிய கல்வியும்தான். கூடவே ஊடகங்கள் பற்றிய புரிதலுக்கான ஊடகக் கல்வியும் அவசியம்.

பாலியல் கல்வி,  பாலினப் பாகுபாடு பற்றிய கல்வி, ஊடகக் கல்வி என மூன்றும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்துக் கல்விக்கூடங்களிலும் கண்டிப்பாக கவுன்சலர் (மனநல ஆலோசகர்) நியமித்தாக வேண்டும்.

அவசியமான இரண்டு

பாலியல் கல்வியும் பாலினப் பாகுபாடு பற்றிய கல்வியும் ஊடகக் கல்வியும் தேவைப்படுவது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; குழந்தைகளின் வாழ்க்கைக்குப்  பொறுப்பான, பெற்றோர், ஆசிரியர், ஊடகத்துறையினர் அனைவருக்கும்தான்.

பொறுப்பான சமூகம் உருவாக வேண்டு மென்றால்,  பொறுப்பற்ற செயல்பாடுகள் பற்றியும் அதன் பின்விளைவுகள் பற்றியும் சமூகத்தில் உள்ள அனைவரும்  புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

பொறுப்பற்று இயங்குபவர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள். இப்போது பாதிக்கப்பட்டது யாரோவாக இருக்கலாம். ஆனால்,  உங்கள் வீட்டைச் சார்ந்தவர்களுக்கும் இது நிகழலாம். அந்த நினைப்பு இருந்தால் உங்கள் செயலும் அணுகுமுறையும் பொறுப்பானதாக,  கண்ணியமானதாக இருக்கும். சிசிடிவி பொருத்துவது, குற்றம் நிகழ்ந்தபின் குற்றம் செய்தவரை கண்டுபிடிக்கத்தான் . ஆனால், நமக்கான சிசிடிவி நம் பொறுப்புணர்வும் மனசாட்சியும்தான். இவ்வளவு நாள் இது இரண்டையும் பொருத்தாதவர்கள் உடனடியாக உங்கள் மண்டைக்குள் அல்ல, இதயத்திற்குள் பொருத்திக் கொள்ளுங்கள்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x