Published : 09 Mar 2019 01:13 PM
Last Updated : 09 Mar 2019 01:13 PM

கற்பக தரு 43: தொழுகைத் தொப்பி

இஸ்லாமியர்களின் அன்றாட வாழ்வில் பனைப் பொருட்கள் முக்கிய இடம் வகித்திருந்தன. உணவு என்ற வகையில் வாழை இலையைவிடப் பனை ஓலைகளே அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்திருக்கின்றன. தங்கள் வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்ல; பிறரது சமய நம்பிக்கைகளின் வழக்கங்களில் பயன்படுத்தும்  ஓலைப் பொருட்களைச் செய்யும் இஸ்லாமியரும் உண்டு.

இஸ்லாமியர்கள் ஐந்து வேளை தொழுகையின்போதும் மற்ற வேளைகளிலும் பயன்படுத்தும் தொப்பியை ‘தக்கியா’ என அரபி மொழியில் அழைப்பார்கள். இஸ்லாத்துக்கு வெளியிலிருபவர்கள்  இதை குல்லா என்று அழைத்தாலும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தொப்பி என்றே இதை அழைக்கிறார்கள்.

எபிரேய மொழியில் காணப்படும் ‘கிப்பா’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்திருக்கும் அமைப்பு என்ற பொருள் உண்டு. தொப்பி அணிந்தவர்கள் இறைவனின் வளையத்துக்குள் (பார்வைக்குள்) வாழ்பவர் என்ற பொருளை அளிக்கும். இறைத் தூதுவர் முகம்மது அவர்களும்  இவ்விதம் ஒரு  தொப்பி அணிந்திருந்தார் என்பதால் இஸ்லாமியர்கள் அவரைப் பின்பற்றி இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அரபு நாடுகளில் பேரீச்சை மரங்கள் அதிகம் இருப்பதால், முற்காலங்களில் பேரீச்சை ஓலைகளாலான தொப்பிகள் அணியும் வழக்கம் இருந்திருக்கலாம்.

பனை ஓலையில் குல்லா செய்யப் பல்வேறு வழி முறைகள் இருந்திருக்கலாம். தற்போது மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் சங்கம் நடத்தும் பனை ஓலைப் பொருட்கள் உற்பத்திப் பிரிவில் தொப்பிகளை இன்றும் செய்துவருகிறார்கள்.

குருத்தோலைகளைத் தெரிவு செய்து, அதை மிகச் சிறிதாக வகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவற்றில் 4 முதல் 5 பொளிகளை எடுத்துச் சடையாகப் பின்னிக்கொள்ளுகிறார்கள். இவற்றைச் சீராக்கும் ஒரு இரும்பு உருளையில் இட்டு, மேடு பள்ளம் இல்லாதபடி நேர்த்தியாக்குகிறார்கள். பின்னர் இவற்றைத் தையல் இயந்திரத்தில் வைத்துச் சுற்றாகத் தைத்துத் தொப்பியாக உருவாக்குகிறார்கள்.

இவ்விதத் தொப்பிகள் பெரும்பாலும், மசூதிகளில் தொப்பி அணியாமல் வருபவர்களுக்கென வைக்கப்பட்டிருக்கும். அனேகர் இவற்றை மசூதிகளுக்குத்  தானமாக வழங்குவார்கள். இது புண்ணியச் செயல் என்ற நம்பிக்கை இஸ்லாமியர்கள் மத்தியில் உண்டு. இன்று ஞெகிழி போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொப்பிகளுக்கு மாற்றாகப் பனை ஓலைத் தொப்பிகளை முன்னெடுத்தால், பனையை நம்பி வாழும் எண்ணிறந்த ஏழைகள் வாழ்வு வளம் பெறும்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x