Last Updated : 17 Mar, 2019 12:21 PM

 

Published : 17 Mar 2019 12:21 PM
Last Updated : 17 Mar 2019 12:21 PM

வண்ணங்கள் ஏழு 46: ஞங்களோட அம்மா!

சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு வக்கிரம் பிடித்த சில ஆண்களால் பொள்ளாச்சியில் நடந்திருக்கும் சம்பவம், நம் வீடுகளில் இருக்கும் ஆண்களுக்குப் பெண்களை அனு சரணையோடும் அவர்களின் சுயத்தை மதிக்கும் பொறுப்புணர்வோடும் நடத்த வேண்டியதன் அவசியத்தைப் புரிய வைத்திருக்கும்.

குடும்ப உறுப்பினர்களோடு இருந்தாலும், நட்பு, காதல் போன்றவற்றில் தாங்கள் எடுக்கும் சில முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் இயல்பாகப் பகிர்ந்து கொள்வதற்குக்கூட வழியில்லாத அளவுக்குக் குடும்ப உறவுகளில் விரிசல் இருப்பதைத்தான் பெண்களுக்கு எதிரான இந்தப் பயங்கரம் உணர்த்துகிறது. ஒவ்வொரு குடும்பமும் தன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நிபந்தனையில்லாத அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆண்களின் துரோகத்தால் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதைப் போன்றே, நம்பிக்கையோடு தங்களின் தனிப்பட்ட உறவை வளர்த்தெடுத்த இரண்டு பெண்களுக்கும் அவர்களின் பெற்றோர்களாலேயே பாதிப்பு ஏற்பட்டதை நாளிதழ் செய்திகளில் நாம் கடந்து போயிருக்கலாம். ஆனால், மாற்றுப் பாலினத்தவருக்கு இடையே ஏற்படும் உறவை மதித்து, அவர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துத் தரும் சேவையில் ஈடுபட்டு வருகிறது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் ஒயாஸிஸ் அமைப்பு. இந்த அமைப்பின் நிறுவனராக இருந்து, ஏறக்குறைய 300-க்கும் அதிகமான மாற்றுப் பாலினத்தவர்களின் நலனின் கண்ணும் கருத்துமாக இருக்கும் ரஞ்ஜினி பிள்ளையை, ‘ஞங்களுட அம்மா (எங்களுடைய அம்மா)’ என்று அழைக்கின்றனர்.

அடைக்கலம் தரும் ஒயாஸிஸ்

மாற்றுப் பாலினத்தவருக்கான தன்னார்வ அமைப்பாக மட்டும் இல்லாமல் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களுக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கும் இடையேயான பாலமாகவும் ஒயாஸிஸ் இருக்கிறது. அதனுடைய தொடர் செயல்பாடுகளின் மூலம் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களின் மனத்திலும் அரசு சார்ந்த நடவடிக்கைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“ப்ரீ டிகிரி படிக்கும்போதுதான் பெண்ணாக உணர்ந்தேன். குடும்பத்தில் பலரும் பலவகையாக எதிர்த்தபோதும், அம்மா என்னைப் புரிந்துகொண்டார். சமூகத்தில் நான் வாழ்வதற்கான தைரியத்தைக் கொடுத்தார். எனக்கு நான்கு சகோதரர்கள். எந்த வித்தியாசத்தையும் காட்டாமல் என் விருப்பப்படியே என்னுடைய அம்மா வளர்த்தார். இப்போது எனக்கு 42 வயது. என்னைப் போல் உள்ளவர்களுக்கு அம்மாவாக இருக்கிறேன். அவர்களுக்காகப் பாடுபடுவதுதான் எனது லட்சியம்” என்னும் ரஞ்ஜினி பிள்ளை, கேரள அரசின் ‘அடையாளம் அறிதல்’ என்னும் திட்டத்தின் இயக்குநராக இருந்திருக்கிறார்.

ஏறக்குறைய 308 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இருக்கின்றனர். இவர்களில் திருநங்கை, திருநம்பி, தன்பால் உறவாளர், பாலிலி எனப் பலதரப்பட்ட மாற்றுப் பாலினத்தவர் இருக்கின்றனர்.

திருவனந்தபுரத்தை மையமாகக்கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் முக்கியச் செயல்பாடு, மாற்றுப் பாலினத்தவர் தன் பாலின அடையாளத்தை உணரும் நேரத்தில், வலுக்கட்டாயமாகவோ வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் வரும்போதோ அவர்களுக்கு உதவுவது.

கேரள அரசு மாற்றுப் பாலினத்தவருக்காக அறிவிக்கும் அரசுத் திட்டங்களை முறையாக அவர்களுக்குக் கிடைப்பதற்காகக் குரல் கொடுப்பதுடன், களத்தில் இறங்கி செயல் பட்டும் வருகிறார் ரஞ்ஜினி.

டிரான்ஸ் திருமணத்துக்கு அரசு உதவி

“எங்கள் சங்கத்தை அரசு அங்கீகரித் துள்ளது. திருமணம் முடிக்கும் டிரான்ஸ் ஆட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் இருவரும் டிரான்ஸ் ஆட்களாக இருக்கும்பட்சத்தில் தலா 50 ஆயிரம் கிடைக்கும். அதுமட்டுமல்லாது டிரான்ஸ் ஆட்களின் வருமானத்துக்காக அரசு உதவித் தொகை அளிக்கிறது. அதைக் கொண்டு சிறு தொழில் செய்ய முடியும்.

ட்ரான்ஸ் ஆட்களுக்காகக் குறுகிய காலத் தங்கும் விடுதி ஒன்றையும் அரசு கட்டித் தந்துள்ளது. இதுவும் ஒயாஸிசின் மேற் பார்வையில் இயங்கிவருகிறது. வீட்டிலிருந்து வெளியேறிய டிரான்ஸ் மாணவர்கள் படிக்கவும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் தங்கவும் இது பயன்படுகிறது. இங்கே பால் புதுமையர், மாற்றுப் பாலினத்தவர் என எல்லாத் தரப்பினரும் சாதி, மத, இன பேதங்களைக் கடந்து வாழ்கின்றனர்” என்கிறார் ரஞ்ஜினி.

மூன்றாம் பாலின வாக்காளர்கள்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை அண்மையில் தமிழகத் தேர்தல் அதிகாரி வெளியிட்டார். அதில் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆண்கள், 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 பெண்கள், 5 ஆயிரத்து 472 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர் இவ்வளவு குறைவான அளவுக்குத்தான் இருப்பார்களா? என்ற கேள்வியை ‘சகோதரன்’ தன்னார்வ அமைப்பின் ஜெயாவிடமும் ஐடிஐ அமைப்பின் சுதாவிடமும் எழுப்பினோம். “திருநங்கை என்ற அடையாளத்தோடு வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையைத்தான் இதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 2013-க்கு முன்பு நிறையத் திருநங்கைகள் பெண் என்ற அடையாளத்தோடு வாக்காளர் அட்டை வைத்திருக்கின்றனர். இன்னும் சிலர் குடும்பச் சூழ்நிலையாலும் சமூகத்தின் கேலி, கிண்டலுக்குப் பயந்தும் லுங்கி, சட்டை அணிந்து தங்களை ஆண் என்ற அடையாளத்தோடு வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள். சுகாதாரத் துறையின் கணக்கெடுப்புப்படி 35 ஆயிரம்வரை இருப்பதாக சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

முன்னுதாரணப் பட்டிமன்றம்

ranjani1jpg100 

உலக மகளிர் தினத்தையொட்டி லயோலா கல்லூரியில், ‘இன்றைய சூழலில் பாலினச் சமத்துவம் சாத்தியமே, சாத்தியமற்றதே’ என்னும் தலைப்பில் சுகி. சிவம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கல்லூரி மாணவர்களுடன் சங்கரி, ஷபி, சுதா ஆகிய திருநங்கைகளும் பேசினர்.  கல்லூரிப் பட்டிமன்றத்தில் திருநங்கைகள் பேசுவது இதுவே முதல்முறை. பாலினச் சமத்துவத்தைச் சாத்தியப் படுத்துவதற்கான முயற்சிகளில் சமூகம் ஈடுபட்டு வருகிறது. இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்னும் தீர்ப்பை சுகி. சிவம் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x