Published : 10 Mar 2019 06:12 PM
Last Updated : 10 Mar 2019 06:12 PM

சூழல் காப்போம்: சிற்றுண்டிக்குப் பானை

பொதுவாகக் காய்கறி, பழங்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைப்போம்.  முட்டை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றுக்கும் ஃபிரிட்ஜில் முக்கிய இடமுண்டு. இவற்றைப் பலரும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுவைப்பார்கள். ஆனால், நான் காகிதப் பையில் சுற்றிவைப்பேன். அல்லது அட்டைப் பெட்டிகளைப் பத்திரப்படுத்தி அவற்றில் வைப்பேன். வீட்டில் விளையாட்டுப் பொருட்களையும் தேவையில்லாத சாமான்களையும் பெரிய அட்டைப் பெட்டியில் வைப்போம்.

- கே.கனகவிஜயன், மதுரை.

பல விழாக்களில் பெண்களுக்கு ரவிக்கைத் துணியைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பார்கள். ஆனால், இன்றைக்கு இந்தப் பழக்கம் சரிப்பட்டு வருவதில்லை. அதற்குப் பதில் அதே துணியில் சுருக்குப் பை, காய்கறிப் பை போன்றவற்றைத் தைத்துக் கொடுத்தால் பலரும் பயன்படுத்துவார்கள். பார்க்கவும் பலவித வண்ணங்களில் அழாக இருக்கும்.

வடாம், வற்றல் ஆகியவற்றை பிளாஸ்டிக் ஷீட்டுகளில் பிழிவதில்லை. அதற்குப் பதில் ஓலைக் கீற்றைப் பயன்படுத்துகிறோம். ஓலைக் கீற்று எங்கே கிடைக்கும் என யோசிக்க வேண்டாம். பந்தல் போடுபவரிடம் கேட்டால் போதும் தந்துவிடுவார். ஓலைக் கீற்றுகளை வாங்கி ஈரத் துணியால் துடைத்துவிட்டு வற்றல் போடலாம்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு பிளாஸ்டிக் தட்டுகளில் உணவு பரிமாறுவதில்லை. வாழையிலை, தாமரை இலை ஆகியவற்றில் பரிமாறுகிறோம். மேலும், குழந்தைகளுக்கான சிற்றுண்டிகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைப்பதற்குப் பதிலாகத் தற்போது சந்தைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான பானைகளில் போட்டுவைக்கிறோம். அந்தக் காலத்தில் பானைகளில்தாம் தின்பண்டங்களைப் போட்டு வைப்பார்கள்.

பிளாஸ்டிக் சோப்பு டப்பாக்களுக்குப் பதில் எவர் சில்வர் சோப்பு டப்பாக்களைப் பயன்படுத்துகிறோம். பூச்செடிகளைப்  பீங்கான் தொட்டியில் வைத்திருக்கிறோம். சணலால் செய்யப்பட்ட கால்மிதியைப் பயன்படுத்துகிறோம்.

சில நாட்களுக்கு முன்பு கேரளத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு எல்லாக் கோயில்களிலும் வாழையிலையில்தான் பூ, சந்தனம், பிரசாதம் போன்றவற்றைக் கொடுத்தார்கள். நாமும் அதைப் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

- ஜானகி ரங்கநாதன், சென்னை.

பழசாகிவிட்ட பேண்டுகளைத் தேவையான வடிவில் வெட்டி, பைகளாகத் தைத்துப் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் தடைச் சட்டம் வருவதற்கு முன்பே இது போன்ற பைகளை என் அப்பா பயன்படுத்திவந்தார். அவர் வழியில் நாங்களும் அதையே பின்பற்றிவருகிறோம். காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்க நாங்கள் இந்தப் பைகளையே எடுத்துச் செல்வோம். கடைக்காரர்கள் முகமலர்ச்சியோடு பொருட்களை இந்தப் பையில் போட்டுத்தரும்போது மனநிறைவாக இருக்கும்.

- புவனகிரி.ச.வேல்முருகன், மேல்மருவத்தூர்.

எங்கள் வீட்டில் எப்போதோ துணிப் பையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். கறி, மீன் போன்றவற்றை வாங்க எவர்சில்வர் பாத்திரம் எடுத்துச் செல்வோம். வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அவற்றின் ஆயுட்காலம் முடியும்வரை பயன்படுத்தலாம் என்று முடிவுசெய்தோம். எளிதில் மக்காத ஞெகிழிப் பைகளைத்தான் முற்றிலும் ஒழிக்க வேண்டும். அவைதாம் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுத் தூக்கியெறியப்பட்டு, குப்பைத்தொட்டியிலும் சாக்கடையிலும் அடைத்துக்கொள்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை நம் அன்றாட வாழ்விலிருந்து முற்றிலுமாக அகற்றிவிட முடியாது. பிளாஸ்டிக் எளிதில் மண்ணோடு மண்ணாக மக்காது என்பது பலரும் அறிந்ததே. பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.

- சித்ரா பாபு, திருசெங்கோடு

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x