

விளிம்பு நிலையில் பிறந்து, வளர்ந்த ஒருவர் ஓரளவுக்குப் படித்து முடித்ததும் சவுகரியமான ஒரு சூழ்நிலையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புவது இயல்பே. ஆனால், நடைபாதைவாசியாகப் பிறந்து அந்தச் சூழ்நிலையிலேயே பட்டதாரியானாலும் நடைபாதைவாசிகளின் குழந்தைகள், நரிக்குறவர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு மாலைநேர வகுப்புகள் எடுத்துவருகிறார் சீதா. இதற்காக ‘ஸ்ட்ரீட் விஷன்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
"சென்னையின் அஞ்சலக எண் 1-லிருந்து தொடங்கி 120 வரை தோராயமாக 42 ஆயிரம் தெருக்கள் இருக்கும். இவற்றில் யானைக்கவுனி, மூர்மார்க்கெட், பள்ளம், உப்பளம், எம்.எஸ்.நகர், எழில் நகர், ரெட் ஹில்ஸ், ஜட்கா புரம் உள்ளிட்ட 10 இடங்களில் சாலையில் குடியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்விச் சேவையை அளிக்கிறோம். ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு ஆசிரியர், ஒரு தன்னார்வலர் என 20 பேர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறார்கள். இவர்களுக்கு ஒரு சிறிய மதிப்பு ஊதியத்தையும் அளிக்கிறோம்" என்கிறார் சீதா.
பாடசாலையான நடைபாதை
இவர்களின் மாலை நேர வகுப்புகளில் 4 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் படிக்கின்றனர். பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப் படித்தவர்களில் கடந்த ஆண்டில் 350-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பலர் பெற்றிருக்கின்றனர்.
“இங்கு ஆசிரியர்களாகவும் முக்கியப் பொறுப்புகளிலும் ஈடுபட்டு வருபவர்களில் பலர் எங்களிடம் படித்த மாணவர்களே. இதில் உப்பளம் பகுதியிலிருக்கும் மாலை நேர வகுப்பை நிர்வகிக்கும் பூங்கொடியும் மதியும் குறிப்பிடத்தகுந்தவர்கள்” என்கிறார் சீதா.
சாலையோரங்களில் கவனிப்பாரற்று இருக்கும் முதியோர்களுக்கு 2012-ல் இருந்தே உணவு அளிப்பது, போர்வைகளைக் கொடுப்பது உள்ளிட்ட சேவையைச் செய்யத் தொடங்கி இருக்கிறார் சீதா. அதிலும் நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு மாலைநேர வகுப்புகளை எடுக்க அவருடைய தோழி சுந்தரியும் கைகொடுத்திருக்கிறார்.
அடுத்தகட்டமாக விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களைத் தேர்ந்தெடுத்து அமைப்புரீதியாகக் கல்விப் பணியை விரிவுபடுத்தினர். தற்போது இவர்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
“சாலையில் பயணிக்காமல் பணிபுரியும் இடத்துக்கோ பள்ளிக்கோ கல்லூரிக்கோ போக முடியாது. அப்படிச் செல்லும்போது, சாலையின் ஓரங்களிலேயே தங்களின் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு ஒரு பென்சிலோ பேனாவோ வாங்கிக் கொடுங்கள் என்பதுதான் தினம் தினம் சாலையில் கடந்து செல்பவர்களுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை.
நீங்களும் மாதத்தில் ஒரு நாளோ மூன்று மாதத்துக்கு ஒருமுறையோ எங்களைப் போன்று சாலையோரச் சிறார்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்புகளுக்கு ஒருமுறை வாருங்கள். அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உங்களின் ஆலோசனைகளும் தேவை” என்றார் சீதா.
தொடர்புக்கு: 9840038410