Last Updated : 05 Mar, 2019 11:28 AM

 

Published : 05 Mar 2019 11:28 AM
Last Updated : 05 Mar 2019 11:28 AM

ஆங்கில​ம் அறிவோமே 253: மீண்டும் சந்திப்போம்!

கேட்டாரே ஒரு கேள்வி

“Balance Sheet என்று கூறுகிறார்களே செலவெல்லாம்போக மீதம் (balance) எவ்வளவு என்பதைத் தெரியப்படுத்துவதால் அந்தப் பெயரா?”

அட, இதுவும் சுவையான கோணமாகத்தான் இருக்கிறது.

Balance Sheet என்பதில் நமது சொத்துக்கள், நமக்கு வரவேண் டிய தொகை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் நாம் செலுத்த வேண்டியவற்றின் பட்டியல் இடம்பெறும். இவற்றை முறையே assets, liabilities என்பார்கள்.  அந்த ஆண்டின் லாபம் அல்லது நஷ்டத்தையும் சேர்த்து இருபுறமும் balanced ஆக (அதாவது சம தொகையுடன்) இருக்க வேண்டும். அதைத்தான் Balance Sheet என்கிறார் கள்.  இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட ஆண்டின் நிதி நிலைமையை அறியலாம்.

****************

“Pygmy, dwarf ஆகிய இரண்டுமே குள்ளர்களைக் குறிக்கும்சொற்களா?’’

இரண்டும் உயரம் குறைவானவர் களைத்தான் குறிக்கிறது.

ஆனால், dwarf என்பது மிக உயரக் குறைவான தன்மையைக்கொண்ட எவரையும் பொதுவாகக் குறிக்கிறது. Pygmy என்பது பழங்காலத்தில் நிலநடுக்கோட்டுக்கு அருகே வசித்த ஒருவகை ஆப்ரிக்கப் பழங்குடியினரைக் குறிக்கிறது. இவர்கள் மிகக் குள்ளமானவர்களாக இருந்தார்கள்.

english-2jpg100 

“ஓர் ஆங்கிலப் பாடநூலில் கீழே உள்ள வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது.  The officer, as well as the clerks, attends the party. இதில் attends என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?  Attend என்பதுதானே சரி?’’

வாசகரே, அந்த வாக்கியத்தில் தவறு இல்லை. Attends என்பது இங்கு officer-ஐக் குறிக்கிறது.  ‘Aswell as the clerks’ என்பது இடையில் சேர்ந்துள்ள அதிகப்படி சொற்கள், அவ்வளவுதான்.

கீழே உள்ள வாக்கியம்கூடச் சரியானதுதான் என்று நான் கூறினால் உங்களுக்கு மேலும் திகைப்பு ஏற்படலாம். 

The officer, plus the clerks, attends the party.

இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்க ‘and’  என்பதைப் பயன்படுத்திவிடலாம். The Officer and the clerks attend the party என்று எழுதிவிட்டால் திகைப்பு, நெருடல், அதிர்ச்சி, எரிச்சல் போன்ற ‘ரசங்களுக்கு’ இடமில்லை.

****************

“Expertise என்று ஒரு சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  சில ஆங்கில அலைவரிசைகளில் ‘எக்ஸ்பர்டீஸ்’ என்று கூறுகிறார்களே.  இந்த இரண்டு சொற்களும் ஒன்றுதானா? வேறு வேறா?”

எழுதும்போது expertise.  உச்சரிக்கும்போது ‘எக்ஸ்பர்டீஸ்’, அவ்வளவுதான்.  குறிப்பிட்ட துறையில் சிறப்பான அனுபவமோ அறிவாற்றலோ இருப்பதை இந்தச் சொல்லின்மூலம் குறிப்பிடுவார்கள்.  Each field requires its own expertise.

****************

Au revoir என்பதன் பொருள் என்ன?

(மீண்டும் சந்திக்கும்வரை) விடைபெறுகிறேன் என்று அர்த்தம்.  Good bye என்றால் அது விடை பெறுதல் மட்டுமே.  Au revoir என்பது நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறது.  “I hope it is au revoir and not goodbye’’.

****************

Prototype என்றால் ‘வழக்கமான ஒன்று’ என்று பொருளா?

இப்போது கணினிகளின் முன்னேற்றம் பிரமிக்கவைக்கிறது. தொடக்கத்தில் உருவான கணினி ஓர்அறையை அடைத்துக்கொள்ளும் அளவுக்குப் பெரியது. அது prototype.

அதாவது ஒன்றின் தொடக்க வடிவத்தை prototype என்பார்கள்.  லத்தீன் மொழியில் prototypus என்றால் ஒரிஜினல் என்று பொருள்.  அதிலிருந்து prototype என்ற சொல் உருவானது.

 

சிப்ஸ்

# Malevolent என்றால்?

பிறருக்குத் தீங்கு விளைவிக்க ஆசைப்படும் தன்மை. Benevolent என்பதற்கு எதிர்ச்சொல்.

# குச்சிஐஸ் என்பதை Stick Ice என்று கூறலாமா?

Popsicle

# தீயணைப்பு வீரரை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவார்கள்?

Fire Fighter

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x