Last Updated : 04 Feb, 2019 01:14 PM

 

Published : 04 Feb 2019 01:14 PM
Last Updated : 04 Feb 2019 01:14 PM

தரையிறங்கும் விமானங்கள்!

ஜெட் ஏர்வேஸ், நாட்டிலேயே இரண்டாவது பெரிய தனியார் விமான நிறுவனம். வெள்ளி விழாவையும் கொண்டாடி முடித்திருக்கிறது. ஆனால், இன்று இதன் விமானங்கள் அனைத்தும்  நாள்தோறும் குத்தகை பாக்கிக்காக (லீஸ்) தரையிறக்கப்படுகின்றன. ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கும் மேலாக ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.

வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கியையும் செலுத்த முடியாத நிலை. கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கதியை இதுவும் சந்திக்குமோ என்ற அச்சத்தில் நாள்களைக் கடத்தும் ஊழியர்கள்.

பங்குச் சந்தையில் சர்ரென்று இறங்கி வரும் பங்கு விலை வீழ்ச்சியால் கலக்கமடைந்திருக்கும் பங்குதாரர்கள் ஒருபுறம். நிறுவனராகத்தான் தொடர்வேன் என்று பிடிவாதம் காட்டும் நிறுவனர் நரேஷ் கோயல் மறுபுறம் என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சமீபகால செயல்பாடுகள் அனைத்தும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த ஜெட்ஜெட் ஏர்வேஸுக்கு பிரச்சினை என்பது இன்று நேற்று ஆரம்பித்ததல்ல, 2001-லிருந்தே பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. மத்திய உளவு அமைப்பான ``ரா’’ மற்றும் ``ஐபி’’ ஆகியன மத்திய உள்துறைக்கு 2001-ம் ஆண்டில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் உள்ளிட்டவர்களுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருந்தன.

இந்த விஷயம் ஊடகங்களில் கசிந்து நாடாளுமன்ற நிகழ்ச்சிகளே ஸ்தம்பித்துப் போனது. இந்நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கால முதலீடுகள் அனைத்தும் போலியான நிறுவனங்கள் மூலம் ``ஐ-ல் ஆப் மேன்’’ தீவிலிருந்து வந்துள்ளதாகவும், இவை அனைத்தும் நிழல் உலக தாதாக்களின் நிதி என்றும் கூறப்பட்டது.

ஜெட் ஏர்வேஸுக்கு முன்பே, 1991-ல் தொடங்கப்பட்ட ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 1996-ல் முற்றிலுமாக முடங்கியது. இதற்குக் காரணம் இந்நிறுவனத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முதலீடு இருப்பது கூறப்பட்டதுதான். இதன் நிறுவனர் ஃபைசல் ஏ வாஹித் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இந்நிறுவனம் முடங்கியது.  இதே கதி ஜெட் ஏர்வேஸுக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் அப்போது தோன்றியது.

ஆனால் அதிலிருந்து ஜெட் ஏர்வேஸ் எப்படியோ மீண்டுவந்தது. ஆனால், அடுத்தடுத்து புதுப்புது சிக்கல்களை எதிர்கொண்டது. 2016-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் விமான சேவை தொடங்குவதற்கு அந்நாட்டு அதிபர் ஜேகப் ஜூமாவுடன் பேரம் பேசியதாக ஊழல் குற்றச்சாட்டிலும் இந்நிறுவனம் சிக்கியது.

`ஜெட் லைட்’டான ஏர் சஹாரா

2006-ம் ஆண்டிலிருந்து விரிவாக்க நடவடிக்கையில் ஜெட் ஏர்வேஸ் இறங்கியது. முதலில் ஏர் சஹாரா நிறுவனத்தை 50 கோடி டாலருக்கு வாங்குவதாக அறிவித்தது. ஆனால், அது அப்போது நிறைவேறவில்லை.

2007-ல் இந்நிறுவனத்தை 1450 கோடி டாலருக்கு வாங்கியது. 50 கோடி டாலர் எங்கிருக்கிறது, 1450 கோடி டாலர் எங்கிருக்கிறது. கிட்டதட்ட 30 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது. இந்நிறுவனத்திடமிருந்து வாங்கிய விமானங்கள் அனைத்தும் ``ஜெட் லைட்’’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டன. ஆனால், 2008-ல் 1,900 பணியாளர்களை அதிரடியாக வீட்டுக்கு அனுப்பியது. பிறகு, விமான அமைச்சகம் தலையிட்டதன் பேரில் இவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது இந்நிறுவனம்.

2010-ம் ஆண்டிலிருந்து…

நிறுவனத்தின் இறங்குமுகம் 2010-ம் ஆண்டிலிருந்து ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நஷ்டத்தை சந்தித்து வந்த இந்நிறுவனம் 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் மட்டும் கணிசமான லாபத்தை ஈட்டியது. பிறகு கடந்த ஆண்டிலிருந்து நிறுவனம் மூன்று காலாண்டில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது.

என்ன காரணம்?

விமானத் துறையில் நிலவும் கடும் போட்டி, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை, கச்சா எண்ணெய் விலையேற்றம் இதனால் நிறுவனத்தின் நிர்வாக செலவுகள் அதிகரித்தன. வங்கிகளிடம் பெறப்பட்ட கடனுக்குரிய வட்டியை திரும்ப செலுத்த முடியாத நிலை, குத்தகை மூலம் பெறப்பட்ட விமானங்களுக்குரிய லீஸ் தொகையை செலுத்த முடியாத நிலை உருவானது.

விமானங்களை விற்க முடிவு

நிதி நிலையை சமாளிக்க நிறுவனத்துக்குச் சொந்தமான 16 விமானங்களை விற்க முடிவு செய்தது. இதன் மூலம் ரூ. 3,500 கோடி திரட்ட திட்டமிட்டது. ஆனால், மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் வீணானது. இதனால் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. நிறுவனத்துக்குள்ள கடன் சுமை ரூ. 8 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டாயமாக ரூ. 1,700 கோடி கொடுத்தால்தான், குத்தகை தராததற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்களை இயக்க முடியும் என்ற நெருக்கடியும் உள்ளது.

உதவிக் கரம் நீட்டும் எதியாட்

பிரச்சினையின் தீவிரம் ஒருபுறம் இருந்தாலும், நிறுவனம் முடங்கி விடக்கூடாது என்பதில் வங்கிகளும், எதியாட் நிறுவனமும் தீவிரம் காட்டின. முதலில் ரூ. 700 கோடியை முதலீடு செய்வதாக எதியாட் கூறியது. ஆனால், நிறுவனராக தொடர்வேன் என்று நரேஷ் கோயல் பிடிவாதம் காட்டினார். நிதி உதவி செய்ய வந்த எதியாட் இதற்கு உடன்படவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ளார் கோயல்.

இதன்படி எதியாட் நிறுவனம் தனது பங்கு அளவை 24 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்திக் கொள்ள முன்வந்துள்ளது. அதேபோல கோயல் தன் வசமிருந்த 51 சதவீத பங்குகளை 22 சதவீதமாகக் குறைத்துக்கொள்வதோடு, இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறவும் சம்மதித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனேயே ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் விலை உயரத் தொடங்கியது.

பிப்ரவரி 21-ம் தேதி அசாதாரண பொதுக் கூட்டத்துக்கு இயக்குநர் குழு அழைப்பு விடுத்துள்ளது. அக்கூட்டத்தில் பங்குகளை குறைத்துக்கொள்வது மற்றும் வங்கிகள் அளித்த கடனுக்கு ஈடாக பங்குகளை அளிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

எதியாட் நிறுவனம் மற்றும் வங்கிகளின் உதவியால், இப்போதைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நூலிழையில் பிழைத்துவிட்டது. ஆனாலும், இன்னமும் அதற்கே உரிய சவால்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இம்மாதம் 21-ம் தேதி இயக்குநர் கூட்டத்தின் முடிவுகளைப் பொறுத்தே ஜெட் ஏர்வேஸின் எதிர்காலம் உயரே செல்லுமா அல்லது தரையிறங்குமா என்பது தெரியும்.

ஜெட் பறந்த பாதை!

1992-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு, 1993 மே 5-ம் தேதி விமான சேவையைத் தொடங்கியது. நான்கு விமானங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இன்று 124 விமானங்கள் உள்ளன. இவற்றில் சொந்தமாக உள்ள விமானங்களின் எண்ணிக்கை 16. இதன் மூலம் 67 இடங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.

இந்தியாவில் 47 நகரங்களுக்கிடையிலும், 20 சர்வதேச வழித்தடங்களில் 15 நாடுகளிடையே விமானங்களை இயக்குகிறது ஜெட் ஏர்வேஸ். இந்நிறுவனத்திடம் 86 போயிங் 737 ரக விமானங்களும், போயிங் 777, ஏர்பஸ் ஏ 330, ஏடிஆர் 72 ரக விமானங்களும் உள்ளன. 108 விமானங்கள் குத்தகை அடிப்படையில் இயக்கப்படுகின்றன. நிறுவனத்தில் தற்போது 16 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் நரேஷ் கோயல் வசமும், எதியாட் ஏர்வேஸ் வசம் 24 சதவீத பங்குகளும், பொதுமக்களிடம் 25 சதவீத பங்குகளும் உள்ளன.

 

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x