Published : 11 Feb 2019 10:53 AM
Last Updated : 11 Feb 2019 10:53 AM

மஹிந்திரா களமிறக்கும் எக்ஸ்யுவி 300

மஹிந்திரா நிறுவனத்தின் ஒவ்வொரு எஸ்யுவிக்குமே தனி கெத்து உண்டு. அதனால்தான் காவல்துறையிலும், அரசியல்வாதிகளிடமும் மஹிந்திரா எஸ்யுவிகள் அதிகமாக இருக்கின்றன. ஸ்கார்பியோவிலிருந்து ஆரம்பித்து, சமீபத்திய மரோஸா வரை அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தனித்தன்மையைப் பெற்றிருக்கும். 

தற்போது எக்ஸ்யுவி300 மாடலை களமிறக்கியுள்ளது. இன்னும் சந்தைக்கு வராத இந்தக் காரைப் பற்றி சில விஷயங்களைப் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யுவி 300 மாடல், மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு நிறுவனத்தின் எக்கோ ஸ்போர்ட், டாடாவின் நெக்ஸான் உள்ளிட்ட 4 மீட்டர் நீளத்தில் உள்ள காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்த உள்ளது.

இது எக்ஸ்யுவி 500 மாடலின் தம்பி. எக்ஸ்யுவி 500 4.5 மீட்டர் நீளம் கொண்டது. எக்ஸ்யுவி 300 4 மீட்டர் நீளத்தில் அசத்தலான டிசைனில் உள்ளது. தோற்றத்திலும் சரி, செயல்திறனிலும் சரி, எக்ஸ்யுவி 500 மாடலில் இருந்த பல குறைகளை இந்தக் காரில் நிவர்த்தி செய்ய மஹிந்திரா நிறுவனம் முயற்சித்திருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யுவி 500 மாடலில் பினிஷிங் தரமானது அவ்வளவு சிறப்பானதாக இல்லை. மெட்டல் பாடியும், பிளாஸ்டிக்கும் இணையும் இடங்களில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. மேலும் காரின் டேஷ்போர்டும் அவ்வளவு சிறப்பாக இல்லை. மஹிந்திரா இதுவரை தன்னுடைய கார்களை மெருகேற்றும் வேலையை அவுட்சோர்ஸ் செய்துவந்தது. ஆனால், தற்போது சாங்யாங் நிறுவனத்துடன் கூட்டு தொழிலில் இறங்கியிருப்பதால், அந்நிறுவனத்தின் நிபுணத்துவம் மஹிந்திராவுக்கு கிட்டியுள்ளது. ரெக்ஸ்டான், ஆல்டுராஸ் ஜி4 ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது எக்ஸ்யுவி 300 இவர்களின் கூட்டணியில் வெளிவருகிறது.

எக்ஸ்யுவி 300 மாடல் கிட்டதட்ட சாங்யாங் டிவோலி காரிலிருந்து இன்ஸ்பயர் ஆகி உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யுவி 300, சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி கார் தயாரிக்கப்படும் x100 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது. டிவோலியை விட குறைவான நீளத்தைக் கொண்டிருந்தாலும், இதன் அகலம் மற்றும் உயரம் சற்று கூடுதலாகவே உள்ளது.

பார்ப்பதற்கு அப்படியே இந்த எக்ஸ்யுவி 300 டிவோலி காரின் குளோனிங் எனலாம். அதேசமயம் இந்த எக்ஸ்யுவி 300 மாடலில் சில குறிப்பிடத்தக்க தனித்தன்மையான விஷயங்களும் உள்ளன. டிவோலி மாடலோடு ஒப்பிடுகையில் இதன் முன் மற்றும் பின்பக்க ஃபெண்டர்கள் பிளாட்

டாகவும், நெருக்கமாகவும் உள்ளது. நீளத்தைக் குறைப்பதற்காக பக்கவாட்டு பேனல்கள், டெயில் கேட் ஆகியவற்றையும் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். பானட் வடிவமைப்பு, எஸ்யுவி கார்களில் இருப்பது போல் உயர்த்திக்கொண்டு இல்லாமல் பிளாட்டாக இருக்கிறது. எனவே காருக்கு புது லுக் தருகிறது. கறுப்பும் குரோம் லைனிங்கும் உள்ள முன்பக்க கிரில் முற்றிலும் புதியதாக இருக்கிறது. இதன் செவ்வக வடிவ ஹெட்லைட்டும், பாக் லைட்டும் வித்தியாசம் காட்டுகின்றன.

காரின் நீளம் குறைக்கப்பட்டிருந்தாலும், பின்பக்க டெயில் கேட் கர்வ்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் டிவோலி மாடலின் ஹேட்ச்பேக் வெர்ஷன் போல் இருக்கிறது இந்த எஸ்யுவி 300. எல்இடி சிக்னேச்சர் பிரேக் லைட்ஸ், டூயல் டோன் பின்பக்க ஃபெண்டர் ஆகியவை காருக்கு எஸ்யுவி தோற்றத்தைத் தருகின்றன.

மஹிந்திரா என்றாலே கேபின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால், இந்தக் காரின்கேபின் ஆச்சரியமளிக்கிறது. இதுவரை எந்த மஹிந்திரா காரிலும் (ஆல்டுராஸ் ஜி4 தவிர) இல்லாத அளவுக்கு இதில் பிரீமியம் லுக் கேபின் தரப்பட்டுள்ளது. டிவோலி காரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வசதிகள், அம்சங்கள், வடிவமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஸ்டியரிங் வீல், சென்டர் ஸ்டாக், டூயல் டோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. காரின் உட்புற லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி பினிஷிங், கன்ட்ரோல் ஸ்விட்ச்களின் தரமும், வடிவமைப்பும் சிறப்பு. ஏழு அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதில் உள்ளது. மொத்தத்தில் இந்த செக்மென்டில் எக்ஸ்யுவி 300 காரின் டேஷ்போர்டு, கேபின் பிரமாதம்.

ஆட்டோ ஹெட்லைட்ஸ், மழை வந்தால் தானாகவே இயங்கும் சென்சார் உள்ள வைப்பர் ஆகியவையும் இதில் உள்ளன. அதிக அகலம் மற்றும் வீல்பேஸ், பெரிய டயர்கள் போன்ற பல சிறப்பம்சங்கள் இந்த மஹிந்திரா காரில் உள்ளன. இந்த செக்மென்டில் முதன் முதலாக இதில்தான் முன்பக்க பார்க்கிங் சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு ஏழு ஏர் பேக்குகள் தரப்பட்டுள்ளன. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதியும் உள்ளது. மேலும், சன் ரூஃப், Comfort, Normal, Sport என மூன்று விதமான ஸ்டீயரிங் மோடுகள், டயர் பிரஷர் கண்காணிப்பு வசதி, டயர் பொசிஷன் டிஸ்பிளே, ஆம்பியன்ட் லைட்டிங், காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி என பல குறிப்பிடத்தக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.

இதில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.5 லிட்டர் டீசல், 117 ஹெச்பி திறனும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் 110 ஹெச்பி திறனும் கொண்ட 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட இன்ஜின்களுடன் வருகிறது. இதில் ஆட்டோமேட்டிக் மாடல் வருவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மைலேஜ் லிட்டருக்கு 17-20 கிமீ வரை இருக்க வாய்ப்புள்ளது. ரூ. 8 லட்சத்திலிருந்து -12 லட்சம் என்ற நிலையில் விலை இருந்தால் நிச்சயம் இது சந்தையை ஒரு கலக்கு கலக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அப்படி விலை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துவிட்டால், எக்ஸ்யுவி 300 மஹிந்திரா பிராண்டின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் என்றே சொல்லலாம். 

இன்னும் விலை நிர்ணயிக்கப்படாத நிலையிலும் இந்தக் காருக்கான முன்பதிவு படு ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை 4 ஆயிரம் பேர் இந்தக் காரை புக் செய்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x