Last Updated : 23 Feb, 2019 11:55 AM

 

Published : 23 Feb 2019 11:55 AM
Last Updated : 23 Feb 2019 11:55 AM

சின்னத்தம்பி உணர்த்தும் செய்தி

கடந்த சில நாட்களாக தமிழ் ஊடகங்களில் வியாபித்திருந்த பெயர், சின்னத்தம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு யானை. அது ஒரு காட்டு யானையாக இருந்தபோதும் காட்டுக்கு வெளியே சாதாரணமாக வலம் வந்துகொண்டிருந்தது. அந்த யானையின் இந்தச் செயல்பாடு நமக்கு எதை உணர்த்துகிறது என்று சிந்தித்தால், பல உண்மைகள் புரியவரும்.

இதுபோன்ற யானைகள் மனித வாழ்விடங்களுக்கு ஏன் வருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. யானை வழித்தடங்களில் கல்வி, மதம் சார்ந்த நிறுவனங்களின் கட்டிடங்களும், தொழிற்கூடங்களும், கேளிக்கை விடுதிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அவற்றின் வழித்தடங்கள் துண்டாக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. அதனால் யானைகள் அவற்றின் வழக்கமான பாதைகளில் இருந்து விலகி, வேறு பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன.

நீலகிரி பகுதியில் உள்ள கூடலூர் இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு காலத்தில் இப்பகுதி காடாக இருந்தது. ஆனால், இன்று அந்தக் காடு துண்டாக்கப்பட்டு பரந்து விரிந்து இருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் சிறு சிறு திட்டுகளாகச் சிதறிக் கிடக்கிறது. இதனாலேயே இப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு யானைகள் வருவது, வழக்கமான ஒரு செயலாகிவிட்டது.

இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தனியார் வசம் இருந்தது. 1959-ல் அரசு நிறுவனமான TANTEA, தன் பங்குக்கு காடுகளை அழித்துத் தேயிலையைப் பயிரிட்டது. இப்படிச் சிறிது சிறிதாக கூடலூரின் காடுகள் அழிக்கப்பட்டன. இன்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனாலேயே இங்கு மனித - காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாக ஏற்படுகிறது.

மனிதர்களைப் போல

யானைகளும் மனிதர்களைப் போல் சமூக உயிரினங்களே. அவற்றின் குடும்ப பிணைப்பு, படிநிலை வாழ்க்கை முறை மனிதர்களின் வாழ்க்கை முறையைப் போன்றது. இக்காரணத்தால்தான் அவை கூட்டமாகச் செல்கின்றன. அப்படி அவை கூட்டமாகவோ தனி ஆண் யானையோ, ஒரு தோட்டத்துக்கோ அல்லது வயலுக்கோ வரும்போது மனிதர்கள் அச்சப்படுவது இயல்புதான். யானைகள் பெரிய உடலைக் கொண்டிருந்தாலும் அவை சத்தம் இல்லாமல் வேகமாக நடக்கும் திறன் கொண்டவை.

அத்துடன் தங்கள் சுற்றுப்புறத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத உருமறைத் தன்மையைக் கொண்டிருப்பதால், நெருங்கி வரும்வரை மனிதர்களால் அவற்றை அறிய முடிவதில்லை. முக்கியமாகக் காலைக்கடன் கழிப்பதற்காக அதிகாலை, அந்தி சாயும் வேளையில் கொல்லைப்புறத்துக்கோ, வயல் வெளிக்கோ மனிதர்கள் செல்கிறார்கள்.

அப்போது அங்கு இளைப்பாறி கொண்டோ மேய்ச்சலுக்காகவோ வந்த யானையை எதிர்கொள்ள நேரிடுகிறது. இப்படி அறியாமல் யானையை நெருங்கிச் சென்றுவிடுவதால், யானையும் தன்னை தற்காத்துக் கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடுகிறது. தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் எஞ்சி இருக்கும் காடுகளுக்கு யானைகள் செல்லும்போதும் மனிதர்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

சின்னத்தம்பி தனிச் சிக்கல்

சின்னத்தம்பி ஒரு காட்டு யானையாக இருந்தாலும், அது மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வரத் தயங்கவில்லை. அது தோட்டங்களுக்கும் வயல்வெளிகளுக்கும் உணவு தேடி வருவதோடு அல்லாமல், வீடுகளில் மனிதர்கள் சேமித்து வைக்கும் அரிசி, தானிய வகைகளை உண்டு வாழவும் பழகிவிட்டது. ஆனாலும் இன்றுவரை யாரையும் அது தாக்கவோ தாக்க முற்படவோ இல்லை. அதன் நோக்கம் உணவு மட்டுமே . சின்னத்தம்பி செல்லும் கிராமங்களில் உள்ள மக்கள் அதை நன்கு அறிந்துள்ளனர்.

வீட்டுக்குள் எந்த இடத்தில் அரிசி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அது அறிந்திருந்ததாகக் கூறுகின்றனர். இதன் காரணமாகவே தனக்கு பரிச்சயமான கோயம்புத்தூர் தடாகம் காப்புக்காட்டில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள டாப்ஸ்லிப் புலிக் காப்பகம், வரகளியாறு காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டபோதும், தான் வாழ்ந்து வந்த பகுதியைத் தேடி மூன்றே நாட்களில் 100 கிலோமீட்டருக்கு மேல் கடந்து அது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மனிதர்களின் உணவை நம்பி வாழும் ஒரு உயிரினமாக, அது மாறிவிட்டதாகத் தோன்றுகிறது.

சின்னத்தம்பியை பிடித்து கும்கி யானையாக மாற்ற வேண்டுமா அல்லது அதை ஒரு சுதந்திர உயிரினமாக வாழ வழிசெய்யவேண்டுமா என்ற கேள்வி எழுவது இயல்பு. அதற்குமுன் சின்னத்தம்பியின் நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சின்னத்தம்பியை வழக்கமான காட்டு யானை எனச் சொல்லிவிட முடியாது. காட்டு யானைக்கான குணத்தை மறந்து, இயல்பான உணவுப் பழக்கத்தை மறந்து, காட்டில் வாழும் மற்ற யானைகளின் கால்தடத்தைப் பின்தொடர்ந்து செல்லாமல் சாலையில் பயணித்து, மனிதரோடு வாழப் பழகிய, மனிதரை அச்சுறுத்தாத ஒரு யானைதான் சின்னத்தம்பி.

மக்களில் ஒரு பகுதியினர் சின்னத்தம்பி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பிக்கொண்டிருந்தபோதே, சின்னத்தம்பியின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட தோட்டம், வயல் உரிமையாளர்கள் அதை கட்டுக்குள் கொண்டுவரக் கோரி அரசிடமும் வனத்துறையினரிடமும் போராடிக் கொண்டிருந்தார்கள். சின்னத்தம்பியை முழுமையான ஒரு காட்டு உயிரினமாகக் கருத முடியாது என்ற கருத்தையே காட்டு யானைகளின் குணாதிசயங்களை ஆராய்ந்த அஜய் தேசாய் போன்றோர் முன்வைக்கின்றனர்.

பல சின்னத்தம்பிகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓ வேலி பகுதியில் ஒரு கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து அடிபட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது நாடோடி கணேசன். பந்தலூர் மக்னா (தந்தமில்லா ஆண் யானை) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அந்த யானை இறந்ததை நாம் மறந்துவிட முடியாது. மக்கள் வாழும் பகுதியில் பல காலமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் சுற்றி திரிந்த ஆரோக்கியமான இந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

சின்னத்தம்பியைப் போலவே ஆனைக்கட்டி, மாங்கரை, பெரிய தாடாகம் பகுதிகளில் சுற்றித் திரிந்த ‘விநாயகன் ' என்ற யானையை முதுமலைக் காட்டில் வனத்துறையினர் விடுவித்தனர். இந்த யானை ஒரு பழங்குடி முதியவரை தாக்கியதாகச் செய்தி வெளியானது.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, மனிதர்களால் வாழ்விடத்தை இழந்த சின்னத்தம்பி போன்ற பல காட்டுயிர் பிரதிநிதிகளின் எண்ணிக்கை, வளர்ச்சி எனும் பெயரில் வரும் காலங்களில் காடுகளை அழிக்கும்போது நிச்சயமாக அதிகரிக்கும்.

அதனால், எதிர்காலத்தில் பல சின்னத்தம்பிகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். இந்த பேருயிர்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டுமென நாம் நினைத்தால், இயற்கை வளங்கள் மீது நாம் ஏற்படுத்தும் தாக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். இல்லையென்றால், சின்னத்தம்பி போன்ற செல்லமான யானைகளும்கூட நாட்டுக்குள் அடிக்கடி எட்டிப் பார்ப்பதை தடுக்க முடியாமல் போய்விடும்.

கட்டுரையாளர்,
காட்டுயிர் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: mcwhale.t@gmail.com |
படம்: த. முருகவேள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x