Published : 24 Feb 2019 10:07 AM
Last Updated : 24 Feb 2019 10:07 AM

வாசகர் வாசல்: இதுவும் சாதனையா?

என் கணவர் கோயம்புத்தூர் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலைசெய்தார். அரசாங்க வேலையில் இருப்பவருக்கு வாழ்க்கைப்பட்டதால் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என என் பெற்றோர் மகிழ்ந்திருந்தனர். பேருந்து ஓட்டுநர் என்பதால் அவரால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது. அதனால், வீட்டு விசேஷங்கள் பலவற்றில் அவரால் கலந்துகொள்ள முடியாது. எப்போதும் வேலைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.

மூன்று குழந்தைகளில் மூத்தவனை இன்ஜினீயரிங் படிக்கவைத்தோம். வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் பையன் வேலைக்குச் செல்வான் என அவர் நம்பினார். ஆனால், 2017-ல் பணியில்  இருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். அதற்குப் பிறகு குடும்பத்தின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

நேரம், காலம் பார்க்காமல் உழைத்த என் கணவருக்கு வரவேண்டிய வருங்கால வைப்புநிதியைக்கூட நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத்தான் பெற்றோம். இப்போதும் ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகைக்குப் போராட வேண்டியிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்ட இரண்டு ஆண்டு சாதனைப் பட்டியலைப் படித்ததும் அதிர்ந்துவிட்டேன்.

போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட்டதற்கு மத்திய அரசிடமிருந்து 11 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாம். இதுபோன்ற விருதுக்கு என் கணவர் போன்ற ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்களின் உழைப்பும்தானே காரணம்.

ஒரு லிட்டர் டீசலுக்கு ஐந்து கிலோ மீட்டர்தான் ஓட்ட முடியும்; ஆனால், நாங்கல்லாம் ஏழு கிலோ மீட்டர் ஓட்டுறோம் என்று என் கணவர் சொல்வார். இப்படியெல்லாம் வேலைசெய்த ஏராளமான ஊழியர்களால்தான் போக்குவரத்துத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஊழியர்கள் இறந்த பிறகோ ஓய்வுபெற்றவுடனோ அவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவற்றை எளிதாகப் பெறமுடிவதில்லை.

கோத்தகிரியில் மட்டும் என்னைப் போல் 50 பெண்கள் குடும்ப ஓய்வூதியம் கிடைக்காமல் ஒவ்வொரு மாதமும் அல்லல்படுகின்றனர். ஜனவரி மாதம் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம்கூட இந்த மாதம்தான் கிடைத்தது. பணியின்போது இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் வேலைகூட என் மகனுக்கு இன்னும் கிடைக்கவில்லை. வேறு

எங்காவது வேலைக்குச் சென்றால் வாரிசுதாரர் வேலை கிடைக்குமா எனத் தெரியாது என்பதால் இன்ஜினீயரிங் படித்துவிட்டுத் தினமும் 500 ரூபாய் கூலிக்குக்  காட்டுவேலைக்குச் செல்கிறான்.   பிற அரசுத் துறைகளில் ஊழியர் இறந்தாலும் அவருடைய குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு உள்ளது.

ஆனால், போக்குவரத்து ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்தச் சலுகை கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது போராடினால்தான் ஓய்வூதியம் தருகிறார்கள். எங்களுக்கான ஓய்வூதியத்தையும் மருத்துவக் காப்பீட்டையும் அரசு வழங்கினால் அது வெளியிட்ட சாதனைப் பட்டியலை நினைத்துப் பெருமைப்படலாம்.

- பத்மினி, கோத்தகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x