Published : 23 Feb 2019 11:33 am

Updated : 23 Feb 2019 11:33 am

 

Published : 23 Feb 2019 11:33 AM
Last Updated : 23 Feb 2019 11:33 AM

காயமே இது மெய்யடா 22: பல்லைப் பாதிக்கும் பதற்றம்

22

பற்கள் மென்மையானவை மட்டுமல்ல; நுட்ப உணர்வு மிக்கவையும்கூட. பல்லிடுக்கில் மெல்லிய இழை ஒட்டிக்கொண்டிருந்தாலும் அதைத் துழாவி அகற்றும்வரை நமது கவனத்தை வேறொன்றில் செலுத்த முடியாது. அந்த அளவு நுண்ணுணர்வு மிக்க பல்லில் நோய் தோன்றக் காரணம் என்ன? அதிநவீன பிரெஷ்ஷைக்கொண்டு தினமும் பத்து நிமிடங்கள் பித்தளைக் குத்துவிளக்கைத் துலக்குவதைக் காட்டிலும் பெருமுனைப்போடு துலக்கத்தான் செய்கிறோம். ஆனாலும், நாளுக்கு நாள் பல் தொடர்பான நோய்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றனவே ஏன்?

பொருந்தாத நீர்ப் பயன்பாடும் வயிற்றில் அமிலத் தேக்கமும் புகைபிடித்தல், புகையிலை போடுதல், பல்லிடுக்கில் பொடியை ஈசிக்கொள்ளுதல், பாக்குப் போடுதல் போன்ற பழக்கமும் பற்களின் பாதிப்புக்கு முக்கியக் காரணி. நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பகுதிகளில், நிலத்தில் குறிப்பிட்ட தாதுவின் அளவு உடல் ஏற்கும் அளவைவிடக் கூடுதலாக இருப்பது, பல் பாதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.


கறை நன்றே

எடுத்துக்காட்டாக சேலம், தருமபுரிப் பகுதிகளில் நிலத்தில் புளோரைடு அதிகமாக இருப்பதால், மக்களின் பற்களில் கறை படிந்திருப்பதைப் பரவலாகக் காண முடியும். நுகரும் நீர், வாய் வழியாக உட்புகும்போது மிகை புளோரைடு பல்லை அரித்து விடக் கூடாது என்பதற்காகப் பல்லே தனக்குப் பாதுகாப்புக் கவசமாகக் கறையை உருவாக்கிக்கொள்கிறது. அதுபோலவே வயிற்றில் அமிலத் தன்மை மிகுந்திருக்கும் போதும் வாய் வழியாக வெளியேறும் அமிலம் பல்லின் எனாமலை, குறிப்பாக, ஈறைப் பற்றியிருக்கும் பகுதியை அரித்துவிடக் கூடாது என்பதற்காக மஞ்சள் பாசியைப் போல் காரைப் படிவத்தையும் உருவாக்கிக் கொள்கிறது.

பல்லை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது சரியே. ஆனால் அதற்கான தீர்வு, பல்லின் கறை, காரையை அகற்றுவதற்கு முன்னர் தண்ணீரின் தரத்தை உறுதிசெய்வதும், வயிற்றில் அமிலம் தேங்காத அளவுக்கு உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதும்தான்.

வெப்பமாற்றம்

பற்களின் நுண்ணுணர்வைப் பாதிக்கும்படியான அதீத வெப்பத்துடன் ப்ரைடு ரைஸ் போன்றவற்றை உண்டுவிட்டு அதேவேகத்தில் தொண்டை வறட்சியைத் தணிக்கிறேன் என்று ஐஸ்போட்ட பழச்சாறோ ஐஸ்க்ரீமோ பருகுவதும் பற்களைப் பாதிக்கும். பல்லின் மேல் கவசமான எனாமல் அரிக்கப்படுவது, பற்சிதைவு, பற்குழிவு போன்ற பரவலான பல் தொடர்பான நோய்களுக்கு மேற்கூறியவை முக்கியமான காரணங்கள். பல்லில் தோன்றும் கூச்சத்தின் வழியே இந்தப் பாதிப்பை நாம் உணர முடியும்.

அதேபோல அலுவலகத்தில் நிலவும் அதீத குளிர்ச்சியாலும், இருசக்கர வாகனத்தில் விரைவாகச் செல்லும்போது முகத்தில் மோதும் வெப்பக் காற்றாலும் பற்கள் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளன. நரம்புகளில் தேங்கும் வெப்பத்தாலும் குளிர்ச்சியாலும் பற்களின் வேர்கள் பலவீனமடைந்து பற்கள் உதிரக்கூடும் எனப் பாரம்பரிய சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் கூறுகின்றன.

பதற்றம்

தற்கால வாழ்க்கை முறையில் அடிக்கடி பதற்றத்துக்கு உள்ளாகிறோம். பதற்றத்தை ஈடுசெய்யச் சிறுநீரகம் அவ்வப்போது அட்ரீனலினைச் சுரக்க நேரிடுகிறது. சிறுநீரகம், தனது மிகை உழைப்பால், பற்களைப் பராமரிக்க இயலாமல் தடுமாறும். எனவே, நாம் அடையும் பதற்றமும் பற்களைப் பாதிக்கும்.

வரும்முன் அறிவோம்

குழந்தைகளுக்கு வாயில் எச்சில் ஊறினால் பல் சொத்தையாக இருக்கிறது என்று அர்த்தம். பெரியவர்களுக்குப் படுக்கையில் இருந்து எழும்போது வாயில் எச்சில் ஊறுமானால் அடுத்த கட்டமாகப் பற்களுக்கு இடையே இடைவெளியோ ரத்தக் கசிவோ ஏற்பட உள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் யாவும் நேரடியாகப் பல்லுடனோ பல் பராமரிப்புடனோ தொடர்புடையவை அல்ல. உணவில் சர்க்கரையும் ரசாயனக் கூறுகளும் மிகுந்துவிட்டன. அதனால் மண்ணீரல் தளர்ந்து விட்டது. அதனால் ஈறுக்கு வேண்டிய உறுதியைத் தர இயலவில்லை என்று ஒருங்கிணைந்த உடலியல் கோணத்தில் புரிந்துகொள்ள வேண்டும். இனிப்பு, ரசாயனம் கலந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்தால் அடுத்தடுத்த பாதிப்புகளைத் தடுத்துவிடலாம்.

பல்லில் ரத்தக் கசிவு ஏற்பட்டால், தாடைக்குக் கீழுள்ள சுரப்பிகளும் சிறப்பாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். சாதாரணமாகவே நாவிலும் வாயிலும் உமிழ்நீர் சுரந்து வருவதுபோல பல்லுக்கும் ஈறுக்கும் இடையிலும் அசை போடப்படும் உணவின் சுவைக்கும் தன்மைக்கும் ஏற்ப செரிப்பதற்கேற்ற நீர் சுரந்து உணவுடன் கலக்கின்றன. ஒரு உணவை மெல்லும்போது பல் நாக்கையோ உதட்டின் உட்பகுதியையோ கடிக்கிறது என்றால், அந்த உணவில் ஏதேனும் ஒவ்வாத கூறுகள் உள்ளன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

பற்களைப் பலப்படுத்துவோம்

ஈறில் ரத்தக் கசிவு ஏற்படும்போது மட்டுமல்ல; பல் தொடர்பான வலி, ஈறு வீக்கம், ஈறில் சீழ் கசிதல், பல் கூச்சம் போன்ற எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது, நமது வழக்கமான உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பதே. வயிற்றைக் காலியாக வைத்திருக்க விரதம் மேற்கொள்வதும், நீர்த்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் ஈறைப் பலப்படுத்த உதவும். புளிப்புத் தன்மை உள்ள பழங்கள், குழம்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

நார்த்தன்மையுள்ள தானியங்களின் கஞ்சி, காய்கறி சூப் போன்றவற்றையே முடிந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளிலும் நார்த்தன்மை மிகுந்த கிர்ணி, தர்ப்பூசணி, பப்பாளி, சப்போட்டா போன்ற புளிப்புத் தன்மையில்லாத பழங்களின் சாறுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். இறைச்சியில் நாட்டுக்கோழி சூப் ஈறைப் பலப்படுத்த மிகவும் ஏற்றது. முக்கியமாக, காரச்சுவை கொண்ட மூலிகைப் பல்பொடிகளைப் பயன்படுத்த வேண்டும்.

பற்களைப் பாதுகாக்கும் முனைப்பில் நாம் அதற்கு இழைக்கும் தீங்குகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com


காயமே இது மெய்யடாஆரோக்கிய தொடர்ஆரோக்கிய உணவுபற்கள் ஆரோக்கியம்பற்கள் பாதிப்புபதற்றம் பாதிப்புபல் பாதிப்புபல் வலி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author