காந்தி 150: கூடிவாழக் கற்பித்த ஆசிரமங்கள்

காந்தி 150: கூடிவாழக் கற்பித்த ஆசிரமங்கள்
Updated on
2 min read

மகாத்மா காந்தி உலகியல் வாழ்க்கையிலிருந்து துண்டித்துக் கொள்ளாமலே துறவறம் பயின்றவர். பல்வேறு வேறுபாடுகளைத் துறந்து பலரும் கூடி வாழும் இடமாகவே, அவர் வாழ்ந்த ஆசிரமங்கள் அமைந்திருந்தன. தேவைகளைச் சுருக்கிக்கொள்ளும் எளிமையையும் தன் தேவைகளைத் தானே நிறைவேற்றிக்கொள்ளும் சுயசார்பும் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையும் காந்தியின் ஆசிரமங்களில் பயிற்றுவிக்கப்பட்டன.

பொதுவாக, அவை பண்ணைகள் அல்லது ஆசிரமங்கள் என்று அறியப்பட்டன. காந்தி மட்டுமல்லாது அவரைப் பின்பற்றியவர்கள் அமைத்த ஆசிரமங்களும் இதே தன்மைகளைக் கொண்டிருந்தன.

ஃபீனிக்ஸ் பண்ணை

காந்தி தொடங்கிய முதல் கூட்டுவாழ்க்கை முயற்சி இது. 1893-ல் வழக்கறிஞர் பணிக்காகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற காந்தி, அங்கு ஐரோப்பிய காலனி அரசுகளால் இந்தியர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட 21 ஆண்டுகள் தங்கினார். 1904-ல் டர்பனில் ஃபீனிக்ஸ் பண்ணை அமைக்கும் பணியைத் தொடங்கினார்.

காந்தியின் நண்பர்களாகவும் அவரைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்த இந்தியர்கள், ஐரோப்பியர்கள் இங்கே குடும்பத்துடன் வாழ்ந்தனர். அகிம்சை, சத்தியாகிரக வழியில் சமூக மாற்றத்தைக் காண விழைந்தவர்கள் இணைந்து பணியாற்றினார்கள். 1914-ல் காந்தி இந்தியாவுக்குத் திரும்பிவிட்ட பிறகும், இந்தப் பண்ணை இயங்கிக்கொண்டிருந்தது.

டால்ஸ்டாய் பண்ணை

காந்தியின் கல்விச் சோதனைகளுக் கான களமாக இது விளங்கியது. ஜோகன்னஸ்பர்க்கில் லிண்டன் என்ற புறநகர்ப் பகுதியில் இந்தப் பண்ணையை 1910-ல் அவர் தொடங்கினார். இங்கே தங்கிய சிறுவர், சிறுமிகளுக்குக் கல்வியும் சுயதொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. அந்தச் சிறுவர்களிடமே பண்ணையைப் பராமாரிக்கும் பொறுப்பும் அளிக்கப்பட்டது.

சிறுவர்களைத் தற்சார்புடையவர்களாக மாற்றுவது, அவர்களுடைய முழுமையான ஆளுமை வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடன் இயங்கிய இந்தப் பண்ணை 1913-ல் கலைக்கப்பட்டது.

சபர்மதி ஆசிரமம்

இந்தியா திரும்பிய பின் 1915 மே 25 அன்று குஜராத்தில் அகமதாபாத்தின் கொச்ராப் பகுதியில் ‘சத்தியாகிரக ஆசிரம’த்தை காந்தி தொடங்கினார். 1917-ல் சபர்மதி ஆற்றங்கரையோரத்துக்கு இது மாற்றப்பட்டு, ‘சபர்மதி ஆசிரமம்’ என்று அழைக்கப்படலானது. சபர்மதி ஆசிரமத்திலும் காந்தியின் சீடர்கள் சாதி, மத, இன, பாலின பேதங்களைக் கடந்து ஒன்றாக வாழ்ந்தனர். இப்போது இந்த ஆசிரமம் அருங்காட்சியகமாகப் பராமரிக்கப்படுகிறது.

சேவா கிராமம் ஆசிரமம்

1930-ல் உப்பு சத்தியாகிரகத்துக்காக தண்டிக்கு நடைப்பயணம் சென்ற காந்தி, அதன் பிறகு இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும்வரை சபர்மதி ஆசிரமத்துக்குத் திரும்புவதில்லை என்று முடிவெடுத்தார். இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். அதன் பிறகு இந்தியாவின் மையப் பகுதியில் இருந்தபடி இயங்க விரும்பினார்.

1934-ல் ஜம்னாலால் பஜாஜ் என்பவரின் அழைப்பின் பெயரில் மகாராஷ்டிரத்தில் இருந்த வர்தா நகரத்துக்குச் சென்றார். ஷேகான் என்ற கிராமத்தில் 1936 ஏப்ரலில் தனது ஆசிரமத்தை நிறுவினார். ஷேகான் கிராமத்துக்கு ‘சேவா கிராமம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. 1948-ல் கொல்லப்படும்வரை காந்தி இங்கேதான் தங்கினார்.

gandhi-2jpg

காந்தி ஆசிரம அறக்கட்டளை

இன்றைய வங்கதேசத்தில் இருக்கும் நவகாளியில் இந்து-முஸ்லிம் கலவரம் 1946-ல் வெடித்தது. அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நவகாளிக்குச் சென்ற காந்தி கலவரப் பகுதிகளில் நான்கு மாதங்கள் பணியாற்றினார். அந்தப் பகுதியில் காந்தியின் பணிகளுக்காக ஹேமந்த் குமார் என்பவர் தனது சொத்துகளை எழுதிவைத்தார். அதை வைத்து ஜயாக் கிராமத்தில் ‘அம்பிகா காளிகங்கா தொண்டு அறக்கட்டளை’ நிறுவப்பட்டது.

காந்தியால் தொடங்கப்பட்ட அமைதிக்கான முகாமும் அங்கு மாற்றப்பட்டது. தேசப் பிரிவினை, காந்தியின் மரணம் ஆகியவற்றுக்குப் பிறகு காந்தியின் சீடர்கள் பலரும் அவ்விடத்தை விட்டு நீங்கினர். அந்த அறக்கட்டளையின் சாரு சவுத்ரி பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். 1971-ல் வங்கதேசம் விடுதலை பெற்று தனிநாடான பிறகு சவுத்ரி விடுவிக்கப்பட்டார். 1975-ல் ‘காந்தி ஆசிரம அறக்கட்டளை’ என்று அதன் பெயர் மாற்றப்பட்டது. அமைதி, கிராம முன்னேற்றம், சமூக ஒற்றுமை ஆகியவற்றுக்காக இந்த ஆசிரமம் பணியாற்றிவருகிறது.

ஆனந்தவனம் ஆசிரமம்

பாபா ஆம்தே என்று அழைக்கப்படும் முரளிதர் தேவிதாஸ் ஆம்தே, காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சேவா கிராமம் ஆசிரமத்தில் சில காலம் வசித்தவர். வழக்கறிஞரான அவர் தொழுநோயாளிகள் மீதான சமூகத்தின் ஒவ்வாமையைக் களைய விரும்பினார். மகாராஷ்டிரத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் 1952-ல் இந்த ஆசிரமத்தைத் தொடங்கினார்.

இதில் தொழுநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலையில் இருந்தவர்களுக்கு மறுவாழ்வும் சிறுதொழில் வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. 2008-க்குப் பிறகு பாபா ஆம்தேயின் மகன் விக்ரம் ஆம்தே ஆசிரமத்தை நிர்வகித்துவருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in